Published : 10 Oct 2021 03:16 AM
Last Updated : 10 Oct 2021 03:16 AM
இந்திய அளவில் செயல்பட்டுவந்த அகில இந்தியப் பெண்கள் இயக்கங்கள் இணைந்து நடத்திய 2-ம் மாநாடு கோழிக்கோட்டில் 1991-ல் நடைபெற்றது. மகளிரியல் துறை சார்பாக அந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்தும் தோழிகள் சிலர் கலந்துகொண்டோம். வெவ்வேறு தலைப்புகளின் கீழ் முறையாக நடந்துகொண்டிருந்த அம்மாநாட்டில் திடீரென்று ஏற்பட்ட சலசலப்பு சத்தத்தில் பல்வேறு அறைகளில் இருந்த நாங்கள் ஓரிடத்தை நோக்கிக் குவிந்தோம். பாட்டும் ஆட்டமுமாக இருந்தது அவ்வறை. புரியாத இந்தி மொழியைத் திரும்பப் பாடி நடனத்தில் நானும் கலந்துகொண்டேன். அவ்வரங்கின் உரையாடலில் பெண்கள் எந்தெந்த வேலைகளுக்கெல்லாம் செல்ல முடிந்துள்ளது, செல்ல முடியாமல் போனது பற்றி உரையாடியுள்ளனர். அதில் பங்கெடுத்த கமலா பாஸின் உரையாடலின் நீட்சியாக, இயல்பாக ஆடியபடி பாடியதுதான் சலசலப்புக்குக் காரணம்.
அம்மா மட்டுமல்ல பெண்
விவசாயியும் அவளேதான்
அக்கா என்றழைப்பார்கள்
லாயரும் அவளேதான்
பைலட்டும் பெண்ணுண்டு
பாராளுமன்றத்திலும் அவளேதான்...
இப்படியான ஒரு பாடலைப் போகிறபோக்கில் இயற்றிப் பாடலாக்கி அப்பாடல் நடனமாகி 40 நிமிடங்கள் வரை தொடர்ந்தது. அந்நிகழ்வின் மூலம் மனத்தில் ஆழமாகப் பதிந்த ஆளுமைதான் கமலா பாஸின். அறிவும் அன்பும் அழகும் நிறைந்த அவ்வுருவத்தை அதன்பின் வெவ்வேறு வாசிப்புகளில் தொடர முடிந்தது.
எளிய சொற்களின் வலிமை
அந்தக் காலகட்டத்தில் ஆணாதிக்கம், விடுதலை, ஆண்மையவாதம், சமூகப் பாலினம், ஆதிக்கம், பாலியல் போன்ற வார்த்தைகளின் மூலம் பெண்ணியத்துக்கான கோட்பாடுகளை உருவாக்குவதில் பெண்ணியவாதிகள் ஈடுபட்டனர். அதில் தனக்கான இடத்தைப் பதித்துக்கொண்டு நம்மிடமிருந்து விடைபெற்றுள்ளார் கமலா பாஸின். கமலாவின் விளக்கங்கள் எளிமையான மொழி மற்றும் அன்றாட வாழ்க்கை உதாரணங்களால் நிரம்பியிருந்தன. புத்தகங்களாக, கையேடுகளாக, பாடல்களாக, குழந்தைகளுக்கான இலக்கியமாக, பயிற்சிப் பட்டறைகளாக அவை இந்தியா முழுக்க, இந்தியாவைக் கடந்தும் பயணித்தன.
சடை போட்டிருக்கிறான் – அது யார்
மரம் ஏறுகிறாள் – அது யார்
என்பது போன்ற கேள்விகளை முன்வைத்துச் சமூகப் பாலியலை விளக்கும் ‘ஆண் பிள்ளை யார்? பெண் பிள்ளை யார்?’ என்கிற புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ASW கூட்டமைப்பால் வெளியிடப்பட்டது. பெண்களுக்கான பாலியல் சமத்துவப் பயிற்சிகளுக்கான கையேடாக அப்புத்தகம் விளங்கியது. அதே புத்தகம் யூமா வாசுகியால் மொழிபெயர்க்கப்பட்டு (பாரதி புத்தகாலயம்) வளரிளம் குழந்தைகளிடம் எடுத்துச் செல்லப்பட்டது. அதைப் படிக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்குப் பல உண்மைகள் புரிவதை என் அனுபவத்தில் பார்க்க முடிந்தது. “இதைத்தானே நான் சொல்ல முயன்றேன், எனக்குச் சொல்லத் தெரியவில்லை” என்கிற எட்டாம் வகுப்புச் சிறுமியின் குரல் என்னால் மறக்க முடியாதது.
சமத்துவ ‘சங்கத்’
புத்தகங்களாக மட்டும் தமிழுலகில் கமலா உலாவரவில்லை. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பாலினம் தொடர்பான பயிற்சிகளுக்கும் மகளிரியல் துறைகளில் பணிபுரிபவர் களுக்கானக் கற்றல் களஞ்சிய மாகவும் அவர் விளங்கியுள்ளார்.
தமிழகத்தின் மூத்த பெண்ணியர்களில் ஒருவரான லூசி சேவியர் குறிப்பிடும்பொழுது, “அவர் எழுதிய ‘பாலியலைப் புரிந்துகொள்வோம்’, ‘ஆண்மை’ புத்தககங்களை மொழிபெயர்த்தபோது, சமூகக்கட்டமைப்பில் பின்னிப் பிணைந்துள்ள பெண்ணடிமைத்தனத்தை இன்னும் நுட்பமாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். பல விஷயங்கள் என்னைப் போலவே அவர் சிந்திப்பதை உணர்ந்தேன். ஆனால், என்னால் அவற்றை இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லவோ எழுதவோ முடிந்ததில்லை. பயிற்சியாளரான எனக்கு அவற்றை எளிமையாகவும் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் எடுத்துரைக்க உதவியாக இருந்தது” என்றார்.
கமலா பாஸின் ‘சங்கத்’ அமைப்பு முன்னெடுத்த தெற்காசிய அளவிலான பாலியல் தொடர்பான பயிற்சிகளை மதுரையில் உள்ள ‘ஏக்தா’ அமைப்பு, தமிழில் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
“ஒவ்வோர் ஆண்டும் ஆசிய அளவில் ஒரு மாதப் பயிற்சி நடந்தது. விளையாட்டு, வாசிப்பு, அனுபவப் பகிர்வு, வன்முறைக்கு எதிரான செயல்பாடுகள், பாடுதல், நடித்தல் என கமலா பாஸினால் வடிவமைக்கப்பட்டது இப்பட்டறை. இலங்கை மற்றும் தமிழகத்திற்கான தமிழ் வழியிலான பயிற்சியை 2009லிருந்து ‘எக்தா’ மூலமாக நடத்திவருகிறோம். ‘சங்கத்’ முயற்சியில் நாங்கள் முன்னெடுத்த ‘பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான 100 கோடி மக்களின் எழுச்சிப் பிரச்சார’த்தையும் தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறோம். ‘பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து – பாலியல் சமத்துவத்திற்கான ஆண்களின் செயல்பாடு’ என்கிற வகையில் ஆண்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி உரையாடலைத் தமிழகத்தில் எடுத்துச்சென்று கொண்டிருக்கிறோம். ‘ஏக்தா’வின் மூலம் முன்னெடுக்கப்படும் பயிற்சிகள், ஆய்வுகள், கருத்தரங்குகள் எல்லாவற்றிலும் கமலாவின் கருத்துக்களுக்கு முக்கியப் பங்கு உண்டு” என்கிறார் ‘ஏக்தா’ அமைப்பை வழிநடத்தும் விமலா சந்திரசேகர்.
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைப் பெரியவர்கள் புரிந்துகொள்ள உதவிய புத்தகமாக கமலாவின் ‘யாரேனும் இந்த மவுனத்தைத் தகர்த்திருந்தால்’ என்கிற கையேட்டைக் குறிப்பிடலாம். இது மதுரையில் உள்ள ‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கப் பெண்களால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. வீடுகளிலும் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைபெறும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைப் பற்றி பேசவும் புரிந்துகொள்ளவும் உதவுவதோடு அதைத் தடுப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை முன்வைக்கும் கையேடாக இது செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
குழந்தைகளுக்கும் தேவை விடுதலை
கமலா குழந்தைகளுக்காக எழுதிய புத்தகங்களும் தமிழில் வந்துள்ளன. சிவப்பு தேவதை, வானவில் பையன்கள், மகளுக்கும் வேண்டும் விடுதலை ஆகிய புத்தகங்களை ‘ப்ரதம்’ பதிப்பகம் குழந்தைகளுக்காக வெளியிட்டுள்ளது.
‘சிவப்பு கார்’ கதையில் வரும் சைக்கிள் ஓட்டும் சிறுமிக்கும் பேட்டரி கார் ஓட்டும் பாட்டிக்குமான உரையாடல், வித்தியாசமான கதையாடல். 100 ஆண்டுகளுக்கு முன் ரொக்கையா எழுதி மொழிபெயர்ப்பான ‘சுல்தானாவின் கன’வை நினைவூட்டியதோடு, அது நனவானதை உறுதிபடுத்துவதாகவும் இருந்தது. ‘வானவில் பையன்கள்’ கதையும் முக்கியமானது. ஆண் என்பது ஒற்றைத்தன்மையானது மட்டுமல்ல, எல்லாமுமானதுதான் என்பதை உரக்கச்சொல்லும் கதை. “அவரது எழுத்து பாலியல் கடந்த வாசிப்பிற்கானதாக இருப்பதையும் அது பால் புதுமையினருக்கானதாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று ‘வானவில் பையன்க’ளை மொழிபெயர்த்த வெற்றி குறிப்பிடுகிறார்.
இளையோருக்கான வழிகாட்டி
இந்திய மகளிரியல் அமைப்பின் உறுப்பினர், மண்டல மகளிரியல் துறையின் பொறுப்பாளாரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை பேராசிரியருமான மணிமேகலை குறிப்பிடும்பொழுது, “தமிழகத்தில் உள்ள மகளிரியல் துறையினர் பல்வேறு வகைகளில் கமலா பாஸினின் கருத்துகளை, உரையாடல்களை, புத்தகங்களைப் பயன்படுத்திவருகிறோம். மகளிரியல் துறை மாணவர்களின் அடைப்படைப் புரிதலுக்காக ‘பாலியலைப் புரிந்துகொள்வோம்’ புத்தகத்தைப் பாடத்திட்டத்துடன் இணைத்து ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்குகிறோம். ‘சங்கத்’ மூலம் அவர்கள் நடத்தும் ஒரு மாத, ஒரு வாரப் பயிற்சிப் பட்டறைகளில் மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்திருக்கிறோம். மகளிரியல் துறைக்கு நேரடியாகவும் இணையவழியிலும் அவரைப் பங்கேற்க வைத்துள்ளோம்” என்கிறார்.
30 ஆண்டுகளாகப் பெண்களின் கூட்டுச் செயல்பாட்டுடன் சுயேச்சையாக இயங்கிவரும் அமைப்புகளான சங்கத், சஹேலி, தமிழகப் பெண்கள் ஒருங்கிணைப்பு போன்ற பெண்ணிய உரையாடலுக்கான முன்னோடி அமைப்புகளில் 80 வயது முதிர்ந்த கமலா பாஸின் முக்கியமானவர். அவரை இழப்பது பெண்ணிய உலகுக்கு எளிதானதல்ல. தமிழகத்திலும் தன் தடத்தைப் பதித்துச் சென்றுள்ள அவரது பெண்ணிய வாழ்வை நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த நாமும் முயல்வோம்.
கமலாவைப் போல் ஆடுவோம்!
கமலாவைப் போல் வாழ்வோம்!
கமலாவைப் பற்றி இசைப்போம்!
கட்டுரையாளர், எழுத்தாளர், பெண்ணியச் செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT