Published : 28 Feb 2016 12:38 PM
Last Updated : 28 Feb 2016 12:38 PM
என் சமையலறையில் மளிகைப் பொருட்களைப் போட்டுவைக்க பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்துகிறேன். ஆனால், பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுப்பொருட்களை அடைத்து வைப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்று சொல்கிறாள் என் தோழி. மளிகைப் பொருட்களை ஸ்டீல் டப்பாக்களில்தான் போட்டு வைக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். இதில் எது சரி?
- கீதா, சென்னை.
டாக்டர் ஜான் மரிய சேவியர், உதவிப் பேராசிரியர், வேதியியல் துறை, லயோலா கல்லூரி, சென்னை.
பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது இப்போது அதிகரித்துவருகிறது. ஆனால், ஒரு பிளாஸ்டிக் பொருளை வாங்குவதற்கு முன்னர் அது எந்த வகையான பிளாஸ்டிக் என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். மொத்தம் ஏழு வகையான பிளாஸ்டிக் வகைகளில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 1, 2, 3 முதல் 7 வரையான இந்த எண்கள், பிளாஸ்டிக் பொருட்களில் மறுசுழற்சி முக்கோண குறியீட்டுக்குள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
இந்த ஏழு எண்களுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இவற்றில் 1, 2, 4, 5 போன்ற எண்கள் தரமான பிளாஸ்டிக்கை குறிப்பவை. இதில் 1 என்று அச்சிடப்பட்டிருப்பவற்றை குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்துகிறார்கள். 2 குறியீட்டை ஷாம்பூ, டிடெர்ஜன்ட் போன்ற பாட்டில்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். 4 குறியீட்டை பிளாஸ்டிக் பைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். மருந்து பாட்டில்கள், தயிர் கப் போன்றவற்றுக்கு 5 குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.
இதில் மற்ற எண்களின் குறியீட்டுடன் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தரமானவை கிடையாது. உதாரணத்துக்கு, 7 குறியீடுடன் தயாரிக்கப்படும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்களை சொல்லலாம். இந்த கப்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் அடிபேட்ஸ், தாலேட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் மனிதர்களின் ஹார்மோன்களைப் பாதிக்கின்றன. அதேமாதிரி, 7 குறியீட்டுடன் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் ‘bisphenol A’ என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது மூளையைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானது.
அதனால், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்னால் இவற்றை கணக்கில் எடுத்துக்கொள்வது நல்லது. சில தயாரிப்பாளர்கள் போலி குறியீடுகளுடன் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கிறார்கள். அதனால் தரமான பிளாஸ்டிக் என்று உறுதிசெய்தபிறகு, அவற்றைப் பயன்படுத்துங்கள். எப்போதுமே பாதுகாப்பான ‘ஸ்டீல்’, கண்ணாடி, பீங்கான் பாட்டில்களை சமையலறையில் பயன்படுத்துவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT