Last Updated : 07 Feb, 2016 01:39 PM

 

Published : 07 Feb 2016 01:39 PM
Last Updated : 07 Feb 2016 01:39 PM

போகிற போக்கில்: வருமானத்துக்கு வழிகாட்டும் மகளிர் சங்கம்

பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் கற்றுத் தருவதுடன், விற்பனை செய்யவும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக உதவிவருகிறது புதுச்சேரி மகளிர் தஞ்சாவூர் ஓவியக் கைவினைஞர்கள் தொழிலியல் கூட்டுறவுச் சங்கம்.

செட்டித் தெருவிலுள்ள பழமை மாறாத கட்டிடத்தினுள் நுழைந்தால் பெண்கள் வரிசையாக அமர்ந்து தஞ்சை ஓவியத்தை ஆர்வத்துடன் கற்கின்றனர். கடந்த 2000-ல் இந்தச் சங்கம் தொடங்கப்பட்டது. இங்கு தஞ்சை ஓவியம் கற்ற பலர் இந்தத் துறையில் சிறப்புடன் விளங்குகின்றனர். இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் இங்கு பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

தஞ்சாவூர் ஓவியக் கலைஞரும், கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநருமான சுந்தரி, “இங்கே தஞ்சாவூர் ஓவியத்தைக் கற்க அதிக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மூன்று மாதங்களில் கற்கலாம். சங்க உறுப்பினர்களின் படைப்புகளை சந்தைப்படுத்த, விற்பனை நிலையமும் இங்கே இருக்கிறது. அத்துடன் ஓவிய கண்காட்சியில் பங்கேற்கவும் உதவுகிறோம். மூலப் பொருட்கள் தந்து ஓவியத்தை வரைந்து தருகிறவர்களுக்கு ஊதியமும் தருகிறோம்” என்கிறார்.

இங்கே பெண்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் ஓவியம் வரையக் கற்றுத் தருகிறார்கள். பானை ஓவியம், கண்ணாடி ஓவியம், துணி ஓவியம், கைவினைப் பொருட்கள் போன்ற குறைந்த காலப் பயிற்சியும் இங்கே உண்டு. கோடை விடுமுறையில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறார்கள்.

“தஞ்சாவூர் ஓவியம் பெரும்பாலும் கிருஷ்ணர், கிருஷ்ண லீலைகள் பற்றி அமைக்கப்பட்டன. இந்தப் பாணியில் இறை உருவங்களை மட்டுமல்லாமல் புத்தர், மகாவீரர் மற்றும் அழகான ஓவியங்களையும் செய்யத் தொடங்கியுள்ளோம்” என்கிறார் சுந்தரி.

இங்கு ஓவியம் கற்றுத் தரும் கணேசன் என்கிற தேவநாத ராமானுஜதாசன், “மக்களுக்கு செய்திகளைக் கொண்டுசெல்லவே தஞ்சை ஓவியங்கள் முதலில் பயன்பட்டன. மராட்டிய மன்னர்கள் கலைகளை அதிக அளவில் தஞ்சையில் வளர்த்தனர். தஞ்சாவூர் ஓவியங்களில் அப்போது சொதை வேலை என்ற உப்பல் (Embossing) வேலைப்பாடு செய்யப்பட்டது. தங்க ரேக் பயன்படுத்தியதால் நீண்ட நாட்கள் ஓவியத்தை ரசிக்க முடிந்தது” என்று தஞ்சாவூர் ஓவியத்தின் பெருமைகளைப் பகிர்ந்துகொண்டார்.

இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஓவியங்களுக்கு புதுச்சேரி அரசு 20 சதவீதம் தள்ளுபடி தருவது மற்றொரு சிறப்பு. தஞ்சாவூர் ஓவியப் பயிற்சி தொடர்பாக மேலும் தகவல் அறிய 0413-2222842 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

படங்கள்: எம். சாம்ராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x