Published : 21 Feb 2016 01:16 PM
Last Updated : 21 Feb 2016 01:16 PM
‘கஞ்சியக் குடிங்க. ‘வாச்சர்’ வரங்குள்ளயும் காட்டவிட்டு வெளியேறணும்’ என்று விசுவம் அதட்டினான். அவர்கள் புளியம் பூ சுமையோடு வீடுவந்த சேர்ந்தபோது ஆடெழும் நேரமாகி (பத்து மணி) விட்டது. பிறகு தாங்கள் கொண்டுவந்த புளியம்பூவைக் கட்டிலில் தட்டி தூசி, கல், மண் பெறக்கி அடுக்குப் பானையில் அள்ளி வைத்தபோது ஒரு வருசத்து புளியின் கவலை தீர்ந்துவிட்டதில் அவர்களுக்கு இருந்த சந்தோசமும் மனநிறைவும் சொல்லி முடியாது.
பொங்கலுக்கான அரிசி, புளி, பருப்பு, எண்ணெய் எல்லாம் வீடு நிறைய இருக்கிறது. இனி மசால் சாமான் வேண்டுமே. வீட்டின் அடுக்குப் பானையில் காட்டில் விளைந்த மல்லி மட்டும் இருக்கிறது. ஆனால் சீரகம், மிளகு, கடுகு என்று எல்லாப் பொருளும் வேண்டுமே. அதற்கு வியாழனுக்கு வியாழன் டவுனில் நடக்கும் சந்தைக்கு அதுவும் பொங்கச் சந்தைக்குத்தான் போக வேண்டும்.
இன்ன, இன்ன பொருள் வாங்க வேண்டும் என்று எழுதிக்கொள்ள யாருக்கும் படிப்பு கிடையாது. அதனால் எல்லாப் பெண்களும் சேர்ந்து ஒரு பழைய சேலையை எடுத்துக் கொள்வார்கள். கடுகுக்காக ஒரு சிறு முடிச்சு. மிளகுக்காக, சீரகத்துக்காக... இப்படி எல்லாப் பொருள்களுக்கும் ஒவ்வொரு முடிச்சிதான். ஏனென்றால் எந்தப் பொருளும் வாங்கும்போது மறந்துவிடக் கூடாதல்லவா. அப்படி மறந்துவிட்டால் சந்தையென்ன கிட்டவா இருக்கிறது ஓடிப்போய் வாங்கிக் கொண்டுவர? அப்படியே வாங்கி வருவதற்கும் நேரம் வேண்டுமல்லவா? ஆண்கள் எல்லாம் இதில் தலையிட மாட்டார்கள். அதற்காகத்தான் இவர்கள் சேலையில் முடிச்சு போட்டுக்கொண்டு சந்தைக்குப் போகிறார்கள். சந்தைக்குப் போய் திரும்பிவர ஒருநாள் ஆகுமென்பதால் எல்லோருடைய தலையிலும் சும்மாட்டோடு கஞ்சி கலயம் இருக்கும். இடுப்பில் பனை ஓலையால் செய்த கடாப்பொட்டி யோடும் வெற்றிலைச் சுமையோடும் விடியற்காலையின் குளிர்ந்த நேரத்திலேயே புறப்பட்டுவிடுவார்கள்.
ஒரு சிலர் வறுத்த காணப் பயறு (கொள்ளு) கல்லுப் பயறு (பச்சைப்பயறு) என்று அள்ளிக்கொண்டு வருவதும் உண்டு. அப்போது ரோடு என்பது கிடையாது. எங்கும் புழுதி நிறைந்த மண்சாலைகள்தான். சாலைகளின் இரு பக்கமும் இலுப்பை, அத்தி, ஆலம் என்று மரங்கள் சாலையின் இருபக்கமும் நெருக்கியிருக்க அந்த மரங்களின் கொப்புகளும், கிளைகளும் சாலையில் நீண்டு சூரியனின் வெளிச்சத்தை புழுதிப் பாதையில் படாதவாறு காவல் இருந்தன. வழியெங்கும் திலா கிணறுகளும், இறவைக் கிணறுகளும் தவித்த வாய்க்கு தண்ணீர் தர காத்திருந்தன. தூக்கணாங்குருவிக் கூடுகள் மரங்களுக்கு சிறுகுண்டலங்களாக அலங்கரிக்க, தேனைடைகள் நெற்றிப் பொட்டுகளாக ஒட்டி இருந்தன.
இப்படி நல்ல நாள் சந்தைகளுக்கு ஒருவர், இருவர் என்று போக மாட்டார்கள். பத்து பெண்கள்வரை போவார்கள். அப்புறம் பாட்டும் கதையும்தான். கல்லுப் பயறு, காணப் பயறை வாய்நிறைய மென்றவாறு, உதடு சிவக்க வெற்றிலையைப் போட்டுக்கொண்டு கேலியும் நையாண்டியுமாகப் பேசிக்கொண்டு போவார்கள். அதனால் அவர்களுக்குத் தூர நடையின் களைப்பும் சோர்வும் தோணவே தோணாது. பொழுது கொஞ்சமாக மேற்கே சாய்ந்த நேரங்களில் வாய்க்கால் கரையினிலோ, திலாகிணற்றுகளிலோ கலயத்தில் இருக்கும் கஞ்சியைக் கரைத்துக் குடித்துவிட்டு நடப்பார்கள். மார்கழி மாத வெய்யில் உரைக்கவே உரைக்காது.
ஒவ்வொருவரும் குடும்ப எண்ணிக்கையைப் பொறுத்து இருபது ரூபாயிலிருந்து முப்பது ரூபாய்வரை கொண்டு போவார்கள். மூன்று ரூபாயில் மசால் சாமான்கள் எல்லாவற்றையும் வாங்கிவிட்டு சேலை, துணி மணி எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். பத்து வயது சிறுவர்களுக்குச் சட்டை, டவுசர், சிறுமிகளுக்கு ஒரே நீளச் சட்டையும் மூன்று ரூபாய் விலையில் எடுத்து முடித்த பிறகு பெண்களுக்கு சின்ன ராமக்குச்சாலி, பெரிய ராமக்குச்சாலி, நவ்வாப்பழக் கண்டாங்கி என்று எடுத்துப் பொட்டியை நிரப்புவார்கள். இந்தச் சேலைகளின் விலை ஐந்து ரூபாயாக இருக்கும். அதன் வண்ணங்களும் கோலங்களும் தைப்பொங்கலுக்கு உடுத்தப்போகிற குமரிப் பெண்களின் மனதில் ஒரு பரவசத்தையும் கிளுகிளுப்பையும் ஏற்படுத்தும். ஆண்களுக்கு நான்கு ரூபாயில் பட்டுக்கரை வேட்டியும் துண்டும். இனி வளையல் வாங்க வேண்டும். எப்போதும் ரப்பர் வளையல்தான் வாங்குவார்கள். அதுதான் உரலிலிட்டு என்ன குத்தினாலும் சரி, சட்டி, பானை, பாத்திரங்களை எப்படிக் கழுவினாலும் சரி உடையாது. வேலை செய்ய, வேலை செய்ய அழுக்கேறிய வளையல் எப்போதும் உடையவே உடையாது!
கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT