Published : 28 Feb 2016 12:26 PM
Last Updated : 28 Feb 2016 12:26 PM
(இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகிற்கு உணர்த்தும் நோக்கத்துடன், சவால்கள் மிகுந்த இந்தியச் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தனி ஒருத்தியாக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான இவர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர். அவருடைய அனுபவங்கள் தொடர்கின்றன.)
“பயணம் இனிது. அது அறிமுகம் இல்லாதவர்களுடன் கைக்குலுக்க வைக்கிறது. அந்நியர்களின் இல்லங்களில் ஆசனத்தை அமைத்துக் கொடுக்கிறது. தொலைதூர தேசத்தை கைக்கெட்டும் தூரத்துக்குக் கொண்டு வருகிறது. பயணங்களில் இனிமையான சூழலும் அற்புதமான மனிதர்களும் வழித்துணையாகக் கிடைத்துவிட்டால், அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இருக்கிறதா? இந்தியாவின் அற்புதமான மனிதர்கள் தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்கள்” என யாரோ ஒரு பயணியின் வலைத்தளத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.
ஜனவரி 26, 2016 அதிகாலை. இதுவரை யாரும் மேற்கொண்டிராத, ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்குவதற்காக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நிற்கிறேன். கால்களைத் தொட்டுச் செல்லும் அலைகளைப் போல மனம் ஒருவித இனம்புரியாத எண்ணங்களால் படபடத்தது. சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலும் லேசான கலக்கமும் தயக்கமும் ஆட்கொண்டன.
ஒரு கணத்தில், ‘மீண்டும் பெங்களூருவுக்கே போய்விடலாமே’ என்று தோன்றியபோது, ‘ஈஷா..உனக்கு எதுவும் ஆகாது. உன்னால முடியும்’ என எனக்கு நானே சத்தமாகச் சொல்லிக்கொண்டேன். முகம் பார்த்திராத முகநூல் நண்பர்களின் வாழ்த்தும், தோழர்களின் தன்னம்பிக்கையும், குடும்பத்தினரின் அன்பு நிறைந்த அணைப்பும் கடலளவு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்குள் விதைத்தன.
இந்தியா முழுவதும் நீளும் இந்த மோட்டார் சைக்கிள் பயணத்தில் என்னைப் பின்தொடர ஒரு ஜி.பி.ஆர்.எஸ். கருவி என் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கிறது. நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன், ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் பயணிக்கிறேன், மணிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கிறேன் என்பதையெல்லாம் பெங்களூருவில் இருந்தவாறே என நண்பர் அங்கித், கம்ப்யூட்டரில் ‘டிராக்’ செய்துகொண்டிருக்கிறார். இது தவிர சென்னை, ஹைதராபாத், பாட்னா, லக்னோ, மும்பை, டெல்லி, கொல்கத்தா என ஆங்காங்கே இருக்கும் பைக் கிளப் நண்பர்கள் எனது பயணத்தை ‘ஃபாலோ’ செய்துகொண்டிருக்கிறார்கள். என் மீதும், இந்தியத் திருநாட்டின் மீதும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையுடன் மைக்கியைத் தட்டிக்கொடுத்துவிட்டு, கிக்கரை உதைத்தேன்.
- ஈஷா
வெள்ளந்தி மனிதர்களின் அறிவியல்
சென்னையில் அம்மா உணவகத்தில் டிபனை முடித்துவிட்டு, வங்கக் கடலலைகள் முத்தமிடும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்தை நோக்கிப் பயணித்தேன். தகிக்கும் வெயிலில் டால்கம் பவுடர் சகிதமாக வலம் வரும் வெள்ளந்தி மனிதர்களும், பல்லவர் காலத்துச் சிற்பங்களும் மாமல்லபுரத்தின் அழகைக் கூட்டின. ஒரு நாளைக்குச் சுமார் 300 கி.மீ. தூரமாவது கடக்க வேண்டுமெனத் திட்டமிட்டிருப்பதால், புதுவையை நோக்கி 70 கி.மீ. வேகத்தில் பறந்தேன். இந்தப் பயணம் மிகவும் சவாலானது என்பதால் அதிக எடையுள்ள பொருட்களையோ, துணிமணிகளையோ கொண்டு செல்லவில்லை. எனவே எதிர்ப்பார்த்ததை விட மைக்கி வேகமாகவே புதுவையைத் தொட்டது.
அங்கு ஒரு இளநீரைக் குடித்துவிட்டு கடலூர்,விழுப்புரம் வழியாகச் சேலத்துக்கு மோட்டார் பைக்கைச் செலுத்தினேன். ஆங்காங்கே கிராமத்துச் சந்தை, மாட்டு வண்டி, சைக்கிள் மனிதர்கள், ரெட்டை சடை மாணவிகள், ரவிக்கை இல்லாத மூதாட்டிகள் எனக் கடந்து வந்த நகரங்களில் கிராமத்து முகச்சாயல் அழகாக இருந்தது. மாலை மங்கும் வேளையில் சேலத்தைத் தொட்டவாறு, ஏழைகளின் ஊட்டியாகக் கருதப்படும் ஏற்காட்டுக்குள் நுழைந்தேன். ஒரு காலத்தில் பச்சைப்பசேல் வனமும் வனப்புமாக இருந்த ஏற்காடு இப்போது கட்டிடக் காடாக மாறிவருவதாக வழியில் தென்பட்டவர்கள் வருத்தப்பட்டனர். அங்கு ஏரிக்கரையோரம் உள்ள விடுதியில் எளிய முறையில் இரவு உணவை முடித்துவிட்டுத் தலை சாய்த்தேன். 38 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கப்போகும் இந்தப் பயணத்தின் முதல் நாளில் 372 கிமீ தூரத்தை 6 மணி நேரம் 55 நிமிடங்களில் கடந்தது மகிழ்ச்சி அளித்தது.
அடுத்த நாள் அதிகாலை ஏற்காட்டிலிருந்து ஈரோடு வழியாக ஊட்டி நோக்கி புறப்பட்டேன். பெங்களூருவில் இருந்து மைசூரு வழியாகப் பல முறை ஊட்டிக்குச் சென்றிருந்தாலும், இந்த வழியாகச் செல்வது சவாலாக இருந்தது. இந்த வழித்தடத்தில் சென்றபோது கிராமத்து வீடுகளின் வாசலில் மாட்டுச் சாணம் தெளித்து, அதன் நடுவே மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள். வாசல் சுத்தமாக இருப்பதற்காகவும், பூச்சி புழுக்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணியிரிகள் வீட்டுக்குள் வராமல் தடுப்பதற்காகவும் கிராமங்களில் இத்தகைய முறை கடைப்பிடிக்கப்படுகிறது. காலங்காலமாக கிராமவாசிகள் சுற்றுப்புறத்தைச் சுத்திகரிக்க மாட்டுச் சாணத்தை பயன்படுத்தியது, வட இந்தியாவில் வளர்ந்த எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சூரியன் ஓய்வெடுக்கும் வேளையில் ஊட்டியை ரசித்துவிட்டு, கோவையில் அன்றிரவு ஓய்வெடுத்தேன்.
தமிழ்நாடு போற்றுதும்
மறுநாள் காலை கோவையில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் வழியாக சிதம்பரம் நோக்கிப் பயணம் விரிந்தது. காவேரி ஆற்று நீரில் செழித்து விளைந்திருந்த நெற்பயிர்கள் காற்றில் தலையசைத்து எனக்கு டாட்டா காட்டின. தஞ்சாவூர் நெடுஞ்சாலையோர கடையில் வத்தல் குழம்பு, காரக் குழம்பு, மோர்க் குழம்பு என மதிய உணவு பிரமாதமாக இருந்தது. மீண்டும் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிக்கையில் ஒரு நாய்க்குட்டி சீறிப் பாய்ந்த காரின் சக்கரத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தது. சிறு காயத்தோடு உயிர் தப்பிய நாய்க்குட்டியை மீட்டு முதலுதவி அளித்தேன். என்னை நல்ல சமாரியனாக நினைத்த அந்த நாய்க்குட்டி என்னிடம் ஒட்டிக்கொண்டது.
எனது மோட்டார் சைக்கிளின் முன்னால் அதை வைத்துக்கொண்டு அதற்காக ஒரு வீட்டைத் தேடினேன். வழியில் தென்பட்ட சில வீடுகளுக்குச் சென்று அந்த நாய்க்குட்டியைப் பார்த்துக்கொள்ளுமாறு கோரினேன். யார் வீட்டிலும் அந்த அழகிய நாய்க்குட்டிக்கு இடமில்லை. கடவுளே, இந்த ஊரில் நாய்கள் நலனுக்காகப் போராடும் சங்கத்தினர் யாருமில்லையா? சாலையோர மரத்தடியில் நின்றிருந்த இளைஞனிடம், இந்த நாய்க்குட்டியை ஏற்றுக்கொள்ளுமாறு இந்தி கலந்த அரைகுறைத் தமிழில் கேட்டேன்.
சற்றும் யோசிக்காமல் சம்மதம் தெரிவித்த இளைஞன், ‘அக்கா, நாய்க்குட்டியின் பெயரென்ன?’ என கேட்டான். ‘ஏஞ்சல்’ என செத்துப்போன என் நாய்க்குட்டியின் பெயரை சூட்டிவிட்டு, இளைஞனின் பெயரைக் கேட்டேன். ராஜா என்றான். மக்களை அழித்து நாட்டைப் பிடிப்பவன் ராஜா அல்ல. நாய்க்குட்டியை வாழவைக்கக் குடில் தருபவன்தான் உண்மையான ராஜா.
சிதம்பரத்தை அடைந்துவிட்டு, மறுநாள் வேளாங்கண்ணி மாதாவை வணங்கிவிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் புறப்பட்டேன். தாயின் தாலாட்டைப் போல உடலைத் தீண்டும் கடற்காற்றும், மதுரையில் சாப்பிட்ட இட்லியும் பயணத்தைச் சுகமான அனுபவமாக மாற்றின. கொடைக்கானல் நோக்கிப் பயணித்தபோது பழனிக்கு மஞ்சள் உடை அணிந்து, செருப்பு போடாமல், புளிச் சோற்றுடன் ஏராளமானோர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். பிறகு தேனி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, தென்காசி வழியாகக் கன்னியாகுமரியை நோக்கிப் பயணித்தேன். இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி கடலில் கால் வைத்தபோது, பெருமைமிகு இந்தியனாக உணர்ந்தேன்.
மிகத் தொன்மையான மொழியையும், பெருமைமிகு வரலாற்றையும் கொண்ட தமிழகத்தில் 8 நாட்களில் 2 ஆயிரத்து 863 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 கிலோ மீட்டர் வேகத்தில், 7.30 மணி நேரத்தில், 350 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்திருக்கிறேன். இந்தப் பாதையில் திசைகாட்டும் மரங்களாக எத்தனை அன்பான மனிதர்கள், வழிநெடுகிலும் நீண்ட வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல், திசையெங்கும் தெறிக்கும் இளையராஜாவின் பாடல்கள், சுவரெங்கும் படர்ந்திருக்கும் அரசியல், சினிமா போஸ்டர்கள், கிராமத்து பார்லிமென்ட் போல காட்சியளிக்கும் டீக்கடைகள், வயதான பாட்டிகளின் வறுமையை போக்கும் இட்லி பாத்திரங்கள் போன்றவைதான் தமிழ்நாட்டை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. என் மோட்டார் சைக்கிள் பயணத்தையும் இனிமையானதாக மாற்றின.
- பயணம் தொடரும்
பயணத்தில் ஈஷா குப்தா எடுத்த படங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT