Last Updated : 21 Feb, 2016 02:27 PM

 

Published : 21 Feb 2016 02:27 PM
Last Updated : 21 Feb 2016 02:27 PM

ஈஷா குப்தா@இந்திய சாலைகள்: சிலிர்ப்பூட்டும் சாகசப் பயணம்

பாயும் நதி, வாழும் ஊர், தொழும் தெய்வம், திசையெங்கிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இயற்கை என காணும் யாவையும் பாவையாக நேசிக்கும் தேசம் இது. நிலா, கனா, மொழி, கவிதை என அனைத்தையும் பெண்மையால் நிரப்பி, அதை பாரதத் தாயாக பாவிக்கும் நாடு. ஆனால் உண்மையில் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக இருக்கிறதா?

‘உலகில் மிக அழகான நாடு இந்தியா, இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்’ என்ற முழக்கத்துடன், இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகிற்கு உணர்த்தும் நோக்கத்துடன், சவால்கள் மிகுந்த இந்திய‌ச் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தனி ஒருத்தியாக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான இவர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர். பணி நிமித்தமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூருவில் குடியேறிய ஈஷா, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேனேஜர் பதவிவரை உயர்ந்தார். பின்னர் வழக்கம்போல எல்லா அலுவலகங்களிலும் நிகழும் அரசியல் சூழ்ச்சிகள், தொடர் பணி நெருக்கடி, கடும் மனஅழுத்தம் ஆகியவற்றைத் தாங்க முடியாமல் அதிலிருந்து விலகி, சுதந்திரப் பறவையாக பறக்கத் தொடங்கினார்.

பயணம் இனிது!

கடந்த 2013-ல் ஈஷா குப்தா, லடாக் பனிமலை பிரதேசத்துக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது, பைக்கில் இந்தியாவை வலம்வரும் பைக்கர்களைப் பார்த்தார். தினம் தினம் புதிய வானம், புதிய சூரியோதயம், புதிய‌ மனிதர்கள், புத்தம்புது வண்ணங்கள் என பைக்கர் வாழ்க்கைதான் எத்தனை அழகானது! நாமும் பைக்கர் ஆக வேண்டுமென சட்டென முடிவெடுத்தார். இயல்பாகவே துணிச்சலான பெண்ணான ஈஷா, பெங்களூரு திரும்பியதும் பஜாஜ் அவெஞ்சர் 220 சிசி பைக்கை முன் பதிவு செய்தார். ஷோ ரூமில் பைக் சாவியை வாங்கும்வரை, தனக்கு பைக் ஓட்ட தெரியாது என்ற உண்மையை ஈஷா உணரவில்லை.

நண்பர் ஒருவரின் உதவியுடன் புது பைக்கை வீட்டுக்குக் கொண்டுவந்து, அதற்கு ‘மைக்கி’ எனப் பெயரிட்டார். சுற்றத்தினரின் ஏளனம், ஈஷாவுக்கு ஒரே வாரத்தில் பைக் ஓட்டுவதைக் கற்றுக்கொடுத்தது. அடுத்தடுத்த நாட்களில் ஆசையும் பெட்ரோலும் தீரும்வரை பெங்களூருவைச் சுற்றினார். அடுத்தடுத்த‌ மாதங்களில் பெங்களூருவில் இருந்து நந்தி மலை, மைசூரு என சற்று தூரமான இடங்களுக்கு பைக் கிளப் உறுப்பினர்களுடன் சேர்ந்து சென்று வந்தார். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்து சென்னை, கோவா, புனே ஆகிய இடங்களுக்குத் தனியாகப் போய் வந்தார். இந்தப் பயணம் ஈஷா குப்தாவுக்கு புது உத்வேகத்தைக் கொடுத்தது.

பெங்களூரு திரும்பிய சில மாதங்களிலேயே, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை நேசிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நீண்ட பயணத்தைத் திட்டமிட்டார். கடந்த 2014-ம் ஆண்டு கர்நாடகம், மஹாராஷ்டிரம், டெல்லி, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் என 7 ஆயிரம் கிலோ மீட்டர் தனி ஒருத்தியாக இந்தியா முழுவதும் வலம்வந்து சாதனை படைத்தார். அடுத்த கணத்தை யூகிக்க முடியாத சவால்கள், அடுத்தடுத்து நிகழும் ஆச்சர்யங்கள், அச்ச உணர்வுடன் கூடிய த்ரில்லிங் பயணம் ஈஷாவின் வாழ்வை முழுமையாக மாற்றியது.

பெண்மையைப் போற்றுவோம்

இமயமலை அடிவாரத்தில், பனிச்சூழலில் மேற்கொள்ளும் ஆழ் தியானம், நிதர்சனம் தேடும் ஆன்மிகம், பேர‌மைதி நிலைகொள்ளும் உள்ளம், வலியறியா பிள்ளை மனம் ஆகியவை தரும் ஆன்ம‌ பலத்தை, தேடல் நிறைந்த பயணம் அள்ளித் தருகிறது. வானத்துப் பறவையாக நீளும் இந்தப் பயணம் ஈஷா மனதில் நிழல் தரும் மரத்தை வளரச் செய்திருக்கிறது. அந்த மரம் வழியில் நின்ற அத்தனை பேரின் மனங்களில் இல்லையென்றாலும் ஒரு சிலரின் மனங்களிலாவது நல்ல விதைகளை விதைத்திருக்கிறது என்பதற்கு ஏராளமான சாட்சிகள் இருக்கின்றன.

இந்த நிலையில் கருக்கொலையில் தொடங்கி கௌரவக்கொலைவரை பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளும் சகித்துக்கொள்ளவே முடியாத பாலியல் பலாத்காரங்களும் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடா என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பின. குற்றங்கள் நிறைந்த சமூகமாகச் சித்தரிக்கப்படும் இந்தியாவில் நிறைய நன்மைகளும் நிறைந்திருக்கின்றன. குற்றங்களைக் களையவும், நன்மைகளை அடையாளம் காட்டவும், நாட்டின் பெருமையைப் பறைச்சாற்றவும், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி தனது நீண்ட பயணத்தை சென்னையில் தொடங்கினார் ஈஷா.

இருசக்கர வாகனத்தில் தனியொரு பெண்ணாக 110 நாட்களில் 17 மாநிலங்கள் வழியாக 110 நகரங்களில் 38 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறார். இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என உலகிற்கு உணர்த்தும் வகையிலான இந்த விழிப்புணர்வு பயணத்தில், ஈஷா தான் சந்திக்கும் சக மனிதர்களிடம் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுகிறார். சவால்கள் நிறைந்த சாலைகள், ஆபத்துகள் நிறைந்த சூழல்கள், வித்தியாசமான விஷயங்கள், மறக்க முடியாத சம்பவங்கள், புதிய மனிதர்கள் என ஒரு சாமானிய பெண்ணான ஈஷா, இந்த சாகச பயணத்தில் ஏராளமான அனுபவங்களை எதிர்க்கொண்டிருக்கிறார். அந்த மோட்டார் சைக்கிள் டைரி குறிப்புகளை ஈஷா குப்தா, அடுத்தடுத்த வாரங்களில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

- பயணம் தொடரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x