Published : 01 Aug 2021 08:50 AM
Last Updated : 01 Aug 2021 08:50 AM
பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், குறிப்பாக குழந்தைப்பேறு உரிமை குறித்து 18 ஜூலை அன்று வெளியான ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். குழந்தைப்பேறு சார்ந்து முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருக்கிறதா எனக் கேட்டிருந்தோம். அந்த உரிமை மறுக்கப்படுவது குறித்தும் பெண்களே அதை உணராத நிலை குறித்தும் பலரும் எழுதியிருந்தனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் உங்கள் பார்வைக்கு:
திருமணமான புதிதில் மகப்பேறு மருத்துவரை அணுகி தன் உடல்கூறுக்கு ஏற்ற முடிவை எடுத்து ஒரு பெண் தனது உரிமையை நிலைநாட்டலாம். திருமணப் பேச்சை எடுக்கும்போதோ, திருமணத் தகவல் மையத்தில் பதிவுசெய்யும்போதோ பிள்ளை பெற்றுக்கொள்வதில் ஆர்வமில்லை அல்லது குழந்தைப்பேறைத் தள்ளிப்போடும் எண்ணம் உள்ளது என்று சொல்லிவிடலாம். ஏனெனில், இதே போன்ற மனநிலை கொண்ட ஆண்களும் இருக்கலாம். பெண்கள் முன்னேற்றம் குறித்து பெரியார் சொன்ன கருத்துகளைக் கவனத்தில்கொள்வோம். தனது இணையைத் தேர்ந்தெடுத்தல், குடும்பக் கட்டுப்பாடு முதல், குழந்தை வளர்ப்பு, பாகுபாடற்ற கல்வி புகட்டுதல், சொத்துரிமை, வீட்டுவேலை பகிர்வு வரை எல்லாமே இரு பாலினத்துக்குமானவை என்கிற எண்ணத்தை விதைத்தலில் உள்ளது பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பது.
- நா.ஜெஸிமா ஹுசைன், திருப்புவனம் புதூர்.
பெண்களுக்கு குழந்தைப்பேறில் மட்டுமல்ல, வேறெந்த உரிமை மறுக்கப்பட்டாலும் அதைப் புரியவைக்க முயல வேண்டும். அப்படியும் புரிந்து கொள்ளவில்லை என்றால் அடுத்து வரும் சந்ததியரிடம் பாகுபாடற்ற வளர்ப்பின்மூலம் பாலினச் சமத்துவத்தை விதைப்போம். இது நிச்சயம் சமூகத்தை மாற்றும்.
- பிரியங்கா
குழந்தை வேண்டும் என்கிற ஆசையில் ஒரு பெண்ணின் மனநிலை, உடல்நிலை இரண்டையும் துச்சமாக நினைத்துக் கடக்கும் அவலம் இன்றும் தொடர்கிறது. கல்வியும், பொருளாதாரச் சுதந்திரமும் இருக்கும் பெண்கள் அத்தகைய சூழல்களை எதிர்கொள்ளும் துணிவு பெறுகிறார்கள். இல்லாதவர்கள், மருகுகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகப் பிற பெண்கள் எடுத்துரைத்துப் புரியவைக்க வேண்டும். தாய்மை, தியாகம் என்று பக்குவமாகப் பெண்களை வட்டமிட்டு அடிமைப்படுத்தும் பாங்கு மாற வேண்டும்.
- இரா.பொன்னரசி, சத்துவாச்சாரி, வேலூர்.
நம் உரிமைகளுக்காகப் போராடும்போது பிறருக்கு எதிரிகளாகவும், பிறர் சொல் கேட்காதவர் களாகவும்தான் தெரிவோம். இப்போது இருக்கும் தலைமுறையை மாற்ற முடியவில்லை என்றாலும்கூட, தங்கள் ஆண் குழந்தைகளுக்காவது சமத்து வத்தைக் கற்றுக்கொடுத்து, சமத்துவத்துக்கு வித்திடுவோம்.
- ராஜேஸ்வரி ரிஷிகர்
தனக்குக் குழந்தை பிறந்தால்தான் ஆண்மையுள்ளவன் என்று இந்தச் சமூகம் தன்னை மதிக்கும் என்கிற மூடநம்பிக்கையாலேயே பல ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ள பெண்ணை வற்புறுத்துகின்றனர். பெரும்பாலான ஆண்களுக்கு ஒரு பெண் கர்ப்பமாவது முதல் பிரசவம்வரைக்கும் படும் மரண அவஸ்தைகள் தெரிவதில்லை. ஏதாவது செயற்கை முறையில் பிரசவ வேதனையை கணவன்களும் உணரும் கட்டாயத்தை ஏற்படுத்தினால் அது நாட்டுக்கே சுதந்திரம் கிடைத்த மாதிரி. குறைந்தபட்சம் பிரசவ நேரத்தில் கணவனை உடன் இருக்க வைத்தால் பெண்ணின் வேதனை புரிய வாய்ப்புள்ளது.
- ஜே. லூர்து, மதுரை.
இந்தச் சமூகச் சூழலுக்கு ஆண்களின் பங்கு அதிகம் என்றாலும்கூட, அவர்கள் மட்டுமே முழு காரணம் அல்ல. அதற்கு ஆண்கள் வளரும் சூழலும் முறையும், பெரும்பாலான பெண்களின் அறியாமையும்தான் காரணம். குழந்தை வளர்ப்பில் சமத்துவம் வேண்டும். புகுந்த வீட்டில் பெண்களை அடிமைப்படுத்த முயல்வது பெரும்பாலும் மாமியார் என்கிற பெண்ணாகத்தான் இருப்பார்.
- இளையகுமார்
தன் உடல்நிலை, மனநிலை, பணி உள்ளிட்டவற்றுக்காகக் குழந்தைப்பேறினைத் தள்ளிப்போடும் உரிமை பெண்ணுக்குக் கட்டாயம் தேவை. குழந்தையின் வளர்ப்பிலும் பராமரிப்பிலும் ஆணைக் காட்டிலும் பெண்ணுக்குத்தான் அதிக பங்கு உண்டு. அதனால், குழந்தைப்பேறு என்பது பெண்ணின் உரிமையாக இருக்க வேண்டும்.
- த. செல்வி, நல்லறிக்கை, குன்னம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT