Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM
விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் உடல் வலு, வீரம், உறுதி, துணிச்சல் என்று ஆண்களுக்கான குணங்களாக வரையறைக்கப்பட்டவை எல்லாமே விளையாட்டுடன் நேரடி தொடர்பில் இருப்பவை. அப்படியொரு துறையில் பெண்கள் கால்பதிக்கிறபோது, இருவிதமான கற்பிதங்கள் உடையும். மேலே குறிப்பிட்டவை பெண்களுக்கும் பொதுவானவை என்பதை உணர்த்துவதுடன் ஆண்களுக்கான குணங்கள் என்று இந்தச் சமூகம் வரையறைத்து வைத்திருக்கும் குணங்கள் மீதான கேள்வியையும் எழுப்பக்கூடும்.
டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளை அப்படியொரு முக்கியச் செயல்பாட்டுக்காகக் கொண்டாட வேண்டும். 1896-ல் ஏதென்ஸ் நகரில் முதன்முதலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரேயொரு பெண்கூட இல்லாத நிலையில் 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கில் 49 சதவீதப் பெண்கள் பங்கேற்று பாலினச் சமத்துவத்தை நெருங்கிவிட்டனர். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீராங்கனையாவது இருக்க வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கழகம் வலியுறுத்தியுள்ளது. அதற்கேற்ப, பெண்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் போட்டிகளையும், ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கேற்கும் கலப்புப் போட்டிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல் பதக்கம்
2020 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்று பெண்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. அவரைத் தொடர்ந்து குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா அடுத்த பதக்கத்தை உறுதிபடுத்தியிருக்கிறார். இந்தப் பிரிவில் ஒலிம்பிக் பதக்கம் வெல்லப் போகும் மூன்றாம் இந்தியர் இவர். வட்டு எறிதலில் கமல்பிரீத் கவுர், இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பிரிவில் இறுதிச் சுற்றை எட்டிய முதல் இந்தியர் இவர். இந்திய ஹாக்கி அணியின் வந்தனா கட்டாரியா, தென்னாப்ரிக்கவுக்கு எதிரான போட்டியில் மூன்று கோல்களை எடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார். ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் இந்திய வீராங்கனை வந்தனா
வரலாற்று வெற்றி
தன் நாட்டுக்கான முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்று சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கிறார் பிலிப்பைன்ஸ் நாட்டின் பளுதூக்கும் வீராங்கனை ஹிடில்யன் டியாஸ். 30 வயதாகும் இவர் பங்குபெறும் நான்காம் ஒலிம்பிக் இது. மூன்று போட்டிகளின் அழுத்தத்தால் நம்பிக்கை தகர்ந்துபோயிருந்த இவர், இந்தப் போட்டியோடு ஓய்வுபெற நினைத்திருந்தார். அதற்கு முன் தன் திறமையை நிரூபித்துவிடும் உறுதியோடு பங்கேற்றவர், தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
அட்லாண்டிக் பெருங்கடலின் மையத்தில் இருக்கும் தீவுக்கூட்டங்களில் பெர்முடாவும் ஒன்று. அதைப் போன்ற சிறு நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்பதே அசாத்திய சாதனை. அதிலும் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் ஃப்ளோரா டஃப்பி. டிரையத்லான் வீராங்கனை யான இவர், பெர்முடா சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற இருவரில் ஒருவர். 33 வயதாகும் இவர், முழங்காலிலும் காலிலும் பல்வேறு காயங்களால் அவதிப்பட்டுவந்தார். வெற்றிக் கோட்டைத் தொடும் ஓட்டத்தில் காயமெல்லாம் பொருட்டல்ல என்பதைத் தான் வென்ற தங்கப் பதக்கத்தின் மூலம் நிரூபித்துள்ளார் ஃப்ளோரா. பெர்முடாவின் முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்த பெருமையும் இவருக்குத்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT