Published : 14 Feb 2016 04:07 PM
Last Updated : 14 Feb 2016 04:07 PM
சில துறைகள் ஆண்களுக்காகவே நேர்ந்துவிடப்பட்டவை போலத் தோன்றும். ஆனால் அதுபோன்ற கற்பிதங்களை உடைத்து, கிடைக்கிற இடத்திலும் பெண்கள் தங்கள் தடம்பதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ரைஸ் மில்லுக்கு மாவரைக்கச் செல்லும்போது நம் எதிர்ப்பார்ப்புக்குப் பொருந்தாமல் ஒரு பெண் ஓடி வந்து மூட்டைகளை இறக்கினால் எப்படியிருக்கும்? அப்படியொரு ஆச்சரியத்தைத் தருகிறார் சுப்புலெட்சுமி. ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்துவரும் இன்னொரு வெற்றிப் பெண் இவர்.
தேனி பழைய டி.வி.எஸ். ரோடு பகுதியில் வசிக்கும் சுப்புலெட்சுமி, ரைஸ்மில்லில் வேலை செய்கிறார். அரிசி மூட்டைகளை அவர் மிக இயல்பாகத் தூக்கும்போது மன உறுதியில் மட்டுமல்ல, உடல் வலுவிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களே என்பதை நிரூபிக்கிறார். இயந்திரம் பழுதடைந்துவிட்டால் கொஞ்சமும் பதற்றப்படாமல், இயந்திரத்தைக் கழற்றி அதனைச் சரிசெய்து இயக்குகிறார். மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவர், தன் கடின உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவர், இன்று மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
வறுமை நிரந்தரமாகக் குடியிருந்த வீட்டின் ஏழு வாரிசுகளில் ஆறாவது குழந்தையாகப் பிறந்தவர் சுப்புலெட்சுமி. அப்பாவுக்கு எண்ணெய் மில்லில் வேலை. அதில் வந்த சொற்ப வருமானம் கால் வயிற்றை நிரப்பவே தடுமாறிய நிலையில் படிப்புக்கு எங்கே போவது? அதனால் அந்த வீட்டுக் குழந்தைகள் அனைவரும் சிறு வயதிலேயே சின்னச் சின்ன வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினார்கள்.
“நானும் சின்ன வயசுலேயே வேலைக்குப் போனேன். கொஞ்சம் வளர்ந்ததுமே எனக்குக் கல்யாணம் செஞ்சுவச்சாங்க. நேத்துதான் நடந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ளே 24 வருஷம் ஓடிப்போச்சு. என் வீட்டுக்காரர், விசேஷ வீட்ல சமைக்கறவங்களுக்கு உதவியாளா இருக்காரு. பொறந்த வீட்லதான் கஷ்டப்பட்டோம்னா, கல்யாணமாகியும் அதே நிலைமைதான். ஆனா ஏழ்மை எனக்கு ஒண்ணும் புதுசு இல்லையே?” என்று சிரித்தபடியே பேசுகிற சுப்புலெட்சுமி, தன்னை வாட்டிய வறுமையையும் சிரித்தபடியேதான் சமாளித்திருக்கிறார்.
கணவரின் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்ட முடியவில்லை என்பதால் பஞ்சு மில்லில் கூலி வேலைக்குச் சென்றார். அது நிரந்தரமற்ற வேலை என்பதால் புளி தட்டுதல், தேய்காய் மட்டை கம்பெனி என்று கிடைத்த வேலைகளையெல்லாம் செய்தார். ஒரு நாள் மாவு அரைக்க தனது வீட்டின் அருகே இருக்கும் ரைஸ் மில்லுக்குப் போனார் சுப்புலெட்சுமி. மாவரைத்துவரச் சென்றவர், அங்கே வேலை கேட்டு நின்றார். இவரது வறிய நிலையைப் பார்த்த ரைஸ் மில் உரிமையாளர் பாஸ்கரன், ரைஸ் மில்லைச் சுத்தம் செய்யும் வேலையைக் கொடுத்திருக்கிறார்.
“ரைஸ் மில்லைப் பெருக்கினதும் நான் வீட்டுக்குப் போக மாட்டேன். அரிசி, கோதுமை, மிளகாய் வத்தலை எல்லாம் எப்படி அரைக்கறாங்கன்னு கவனிப்பேன். இதைப் பார்த்த ஓனர், ‘நீயும் மிஷினை ஓட்டுறியா?’ன்னு கேட்டார். முதல்ல எனக்கு பயமாவும் தயக்கமாவும் இருந்துச்சு. அப்புறம் சரின்னு சொன்னேன்” என்று சொல்லும் சுப்புலெட்சுமி அதன் பிறகு ரைஸ் மில்லில் மாவரைக்கும் வேலையையும் சேர்த்து செய்தார். இரண்டு மகள்கள் பிறந்த நேரத்தில் மட்டும் விடுப்பு எடுத்தார். அதன் பிறகு விடுமுறை என்ற பேச்சுக்கே இடமிருந்ததில்லை.
இவர் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ரைஸ் மில்லுக்கு மாவு அரைக்க வரும் பலரும் இவர் மாவு அரைத்துக் கொடுப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். சிலர் கேலி, கிண்டலும் செய்தனர். ஆனால் சுப்புலெட்சுமி எதையுமே கண்டுகொள்ளாமல் வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தார். அதுதான் தேனியில் இவருக்கு, ‘ரைஸ் மில் சுப்புலெட்சுமி’ என்ற அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.
“யார் சொல்றதைப் பத்தியும் நான் கவலைப்பட மாட்டேன். அப்படியே எதுக்காவது நான் சோர்ந்துபோனாகூட என் வீட்டுக்காரர் என்னைத் தேத்தி தைரியம் கொடுப்பார். நான் வேலைக்குச் சேர்ந்த புதுசுல என்னைக் கேலி பேசுனவங்க எல்லாம் இன்னைக்கு என்னை சுப்பு அக்கான்னு கூப்பிடறதைக் கேட்கும்போதே மனசுக்கு நிறைவா இருக்கு” என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் சுப்புலெட்சுமி.
இந்த ரைஸ் மில்லில் கடந்த 9 ஆண்டுகளாக வேலை செய்து கிடைத்த வருமானத்தை வைத்து, மூத்த மகளுக்குத் திருமணம் செய்துகொடுத்தார். படிக்காத காரணத்தால் தான் அனுபவித்த துயரத்தைத் தனது மகள்கள் படக் கூடாது என்பதில் சுப்புலெட்சுமி உறுதியாக இருக்கிறார். 10-ம் வகுப்பு படித்துவரும் தன்னுடைய இளைய மகளை அவர் விரும்பும்வரை படிக்கவைக்க வேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என்கிறார்.
“என் பொண்ணு நல்லா படிச்சி வேலைக்குப் போய் சொந்தக் கால்ல நிக்கறவரைக்கும் நான் ஓய்வு எடுக்காமல் ஓடிக்கிட்டே இருப்பேன்” – வார்த்தைகளின் உறுதி குரலிலும் வெளிப்படுகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT