Published : 18 Jul 2021 08:09 AM
Last Updated : 18 Jul 2021 08:09 AM

விவாதம்: குழந்தைப்பேறு பெண்ணின் உரிமையில்லையா?

அண்மையில் வெளியான ‘சாரா’ஸ்’ மலையாளத் திரைப்படம், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமையும் அதிகாரமும் பெண்ணுக்கு உண்டா என்கிற விவாதத்தை ஏற்படுத்தியது. தனக்குப் பிடித்ததைப் படிக்கவும், பிடித்தவனை மணக்கவும் பெண்ணுக்கு உரிமை மறுக்கப்படும் இந்தியச் சமூகத்தில் குழந்தைப்பேறை மறுக்க மட்டும் உரிமை உண்டா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

பெண்ணுக்கு எல்லாமே ‘அளிக்கப்பட்ட’ சுதந்திரமாகவோ உரிமை யாகவோதான் இருக்கின்றன. ஒரு பெண் தானாகவே தன் விருப்பத்தில் கைகொள்கிற உரிமை என்பது அவள் காணும் கனவாகத்தான் இருக்க முடியும். அன்பின் பெயரால், காதல் உரிமையால் உறவின் அதிகாரத்தால் இங்கே பலரும் பெண்களைத் தங்கள் விருப்பப்படி ஆட்டிவைக்கவே விரும்புகிறார்கள். பெரும்பாலான பெண்களும் இப்படி ஆட்டுவிக்கப்படுவதற்காகவே தாங்கள் பிறப்பெடுத்ததுபோல் வாழும் அறியாமை கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

நான் என் மனைவிக்கு/மகளுக்கு/சகோதரிக்கு எல்லா உரிமைகளையும் தந்திருக்கிறேன் என்று சொல்லும் ஆண்களை நாம் பார்த்திருப்போம். ‘தந்திருக்கிறேன்’ என்றால் என்ன பொருள்? இவ்வளவு நாட்களாக உன் உரிமையை நான் மறுத்துவந்துள்ளேன் என்பதுதானே. அவர்கள் தந்து, இவர்கள் பெற்றுக்கொள்ள பெண்ணின் உரிமை என்ன ஆணின் உடைமைப் பொருளா? பெண், ஆண், மாற்றுப்பாலினத்தவர் உள்ளிட்ட இந்தப் புவியைச் சேர்ந்த அனைவரும் சமமான வாழ்க்கை வாழத் தகுதியும் உரிமையும் படைத்தவர்கள்தாம். ஆனால், ஓரினம் மட்டும் தன்னை உயர்வாகவும் மற்ற பாலினங்களைத் தனக்குக் கீழாகவும் நடத்தும் அவலத்துக்கும் ஆணாதிக்கம் என்றே பெயர்.

பெண்ணுக்குப் பின்னடைவு

விண்வெளி வீராங்கனை, நோபல் பரிசு வென்றவர்கள், ஒலிம்பிக் போட்டியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் எனச் சிலரது பெயரைச் சொல்லி பெண்களுக்குச் சுதந்திரம் இல்லாமல்தான் இவர்கள் எல்லாம் இந்த அளவுக்கு உயர்ந்தார்களா எனச் சிலர் கேட்கக் கூடும். உண்மைதான், அன்றிருந்த நிலை இன்று பெண்களுக்கு இல்லை. அதற்காக எல்லாருமே ஏற்றம்பெற்றுவிட்டார்கள் என்று பொருள் அல்ல. பெண்கள் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் நீளம் அதிகரித்துள்ளதே தவிர அறுபடவில்லை.

இப்படிச் சில துறைகளில் சாதித்த ஒன்றிரண்டு உதாரணப் பெண்களிடம் கேட்டால், தாங்கள் போராடிக் களைத்த ஆயிரமாயிரம் கதைகளை அவர்களும் சொல்லக்கூடும். ஓர் ஆணுக்கு மிக இயல்பாகச் நிகழக்கூடிய எல்லாமே பெண்ணுக்கு மந்திரத்தில் மாங்காய் வரவழைப்பதைப் போல நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. ஆண் என்பதே தகுதியாகக் கருதப்படும் அதேவேளை பெண் என்பது இரட்டிப்புப் பின்னடைவாகவே உள்ளது.

குடும்பப் பொறுப்பு யாருக்கு?

எந்தத் துறையிலும் ஆணால் குடும்பப் பொறுப்புகளின் அழுத்த மின்றி முழுமூச்சுடன் ஈடுபட முடிகிறது. அவனை அப்படி வைத்துக்கொள்வது பெண்ணின் கடமையாகச் சொல்லப் படுகிறது. ஆண்களுக்கு இருக்கும் அழுத்தமெல்லாம் பெரும்பாலும் பொருளாதாரம் சார்ந்ததாக இருக்குமே தவிர குடும்பப் பொறுப்புகளின் கட்டுகளின்றி அவர்களால் சுதந்திரமாக இயங்க முடிகிறது. பெண்ணுக்கோ அது இரட்டைக் குதிரை சவாரி யாகத்தான் பெரும்பாலும் அமைந்து விடுகிறது. சமாளிக்க முடிந்தவர்கள் வெற்றிக்கோட்டைத் தொடுகிறார்கள். முடியாதவர்கள் இரண்டில் ஒரு போட்டியிலிருந்து விலகுகிறார்கள். வேலையா, குடும்பமா என்கிற முடிவை எடுக்கிற உரிமைகூடப் பெண்ணுக்கு அளிக்கப்படுவதில்லை.

இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது; ஆண்களும் வீட்டு வேலைகளில் உதவுகிறார்களே என்று சில குரல்கள் எழலாம். அந்த ஆண்களும் உதவுகிறார்களே ஒழிய, முழுதாகப் பங்கெடுப்பதில்லை. சமையலறை தன் கொடுங்கரங்களால் பெண்ணை எப்போதும் இறுக்கிக்கொண்டிருக்கிறது என்றால் பிள்ளை வளர்ப்பு என்பது மற்றுமொரு சவால். சிறு குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதையும், பாடம் சொல்லித்தருவதையும் மனைவிக்குச் செய்யும் மாபெரும் உதவியாக நினைக்கிற ஆண்களுக்கு நடுவே அவற்றைத் தங்கள் கடமையாக நினைக்கிறவர்கள் மிகக் குறைவு.

ஆணின் அளப்பரிய பங்கு

ஆண் வெளியே சென்று சம்பாதிக்கிறபோது பெண் வீட்டு வேலைகளைச் செய்வதில் என்ன தவறு என்பது நியாயமான வாதமாகத் தோன்றலாம். ஆனால், வீட்டு வேலைகள் பெண்ணின் விருப்பத் தேர்வா என்பது குறித்து யாருமே பேசுவதில்லை. வீட்டுக்குள்ளேயே புதைந்துவிடுகிற பெண்களின் உழைப்பு எந்தக் கணக்கிலும் வருவதே இல்லை. சரி, அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து சமூகத்துக்கு அப்படியென்ன பங்களித்துவிடப் போகிறார்கள் என்று சில ஆண் மனங்களுக்குத் தோன்றலாம். இவ்வளவு ஆண்டுகளாக ஆண்கள் பங்களித்துவருவதைத்தான் பெண் களும் செய்வார்கள். அதற்காகப் பெண்களுக்கென்று தனியாக ஒரு நாட்டையா உருவாக்க முடியும்? ஆண் செய்கிற எதுவுமே பொருளாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்தப்படுகையில், பெண்ணின் உடலுழைப்பு எந்தக் கணக்கிலும் சேர்வதே இல்லை. இது ஒரு பக்கம் என்றால், ‘பாவம் அவர் வெளியே போய் கஷ்டப்பட்டுட்டு வர்றாரு. நாமதானே அவர் மனம் கோணாம நடந்துக்கணும்’ என்று பெண்ணையே குற்றவுணர்வுக்குத் தள்ளுவதைத்தான் நம் சமூகம் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கிறது.தனக்கு விருப்பமானதை உடுத்துவதையோ, தேவையானதை வாங்குவதையோகூட ஏதோ குற்றம்புரிவதைப் போல் பெண்களை உணரவைத்துவிடுகிறோம். தன் மீது திணிக்கப்படும் எதைப் பற்றியும் தவறிக்கூட கேள்வி கேட்டுவிடாத வகையில்தான் நாம் பெண்களை வளர்த்தெடுக்கிறோம்.

கற்பிதச் சங்கிலிகள்

அடிப்படை உரிமைகளை விட்டுவிடுவோம். தனிப்பட்ட வாழ்க்கையிலோ திருமண உறவிலோ ஆணுக்குக் கிடைக்கிற எல்லா உரிமைகளையும் பெண் அனுபவிப்பதில்லை. குறிப்பாகப் பாலியல் சார்ந்த செயல்பாடுகளில் பெண்ணின் உரிமையும் சம்மதமும் இரண்டாம்பட்சமாகக்கூட அணுகப்படுவதில்லை. கணவன் என்பதே தனக்குக் கிடைத்திருக்கிற அனுமதியாகப் பலர் நினைத்துக்கொள்கிறார்கள். நாம்தான் பெண்மைக்கும் ஆண்மைக்கும் மாபெரும் கற்பித அகராதிகளை உருவாக்கி வைத்திருக்கிறோமே. அதன்படி அடக்குபவன் ஆண், அடங்கிப்போக வேண்டியவள் பெண். இதில் கொஞ்சம் பிசகினாலும் பெண் தூற்றப்படுவாள். பெண்மை என்கிற கற்பிதத்துக்குள் பொருந்திவிட வேண்டும் என்பதற்காகவே தன் ஆசை, லட்சியம், கனவு எனப் பலவற்றையும் தொலைத்து ‘தியாகிப் பட்டம்’ பெறத் துடிக்கும் பெண்கள் நம்மிடையே ஏராளம். உண்மையில் அது பெருமையல்ல; காலம் காலமாக அவர்களுக்கு நாம் பூட்டியிருக்கும் விலங்கு என்பதைக்கூட உணராத வகையில்தான் பெண்களை வைத்திருக்கிறோம்.

பாலினம் தொடங்கி, வர்க்கம், சாதி என எல்லா நிலைகளிலும் பாகுபாடு நிலவும்போதுதான் அதிகாரப் பிரிவினை இருக்கும். அதிகாரத்தைச் செயல்படுத்துகிற எல்லா அமைப்புகளும் இந்தப் பாகுபாட்டைப் போற்றி வளர்க்கத்தான் செய்யும். இந்த அதிகாரச் சூட்சுமத்தை விளங்கிக்கொள்ளாமல் நாமும் சமூகக் கற்பிதங்களுக்குப் பெண்களின் வாழ்க்கையைப் பலியாக்குகிறோம்.
எல்லா நிலைகளிலும் பெண்கள் மீது நாம் செலுத்துகிற ஆதிக்கத்தைவிட இழிவானது வேறில்லை. யாரோ சிலர் தங்களது வசதிக்காக ஏற்படுத்திய நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் நாம் இப்போது பின்பற்றிக்கொண்டு, பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். திருமணம் செய்துகொள்ளவோ அதை மறுக்கவோ பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் உரிமை உண்டு. அதுபோலத்தான் குழந்தையைப் பெற்றுக்கொள்வதும் வேண்டாம் என்று மறுப்பதும். குழந்தை பெறுவதுதான் தாய்மையின் பூரணம் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை. தாய்மை என்பதே கற்பிதம்தான். அதைக் கட்டிக்காக்கும்வரைக்கும்தான் பல ஆண்களுக்கு இங்கே வாழ்க்கையே. அதனால்தான் எதற்கெடுத்தாலும் பெண்மை, புனிதம், தாய்மை, தியாகம் போன்றவற்றைச் சொல்லியே பெண்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். பெண்கள் விழித்துக்கொண்டால்தான் இங்கே பிழைத்திருக்க முடியும். அதேபோல் ஆணாதிக்கம் என்பதை வாழ்க்கையின் அங்கமாக நினைத்துச் செயல்படுத்துகிற ஆண்களின் அறியாமையைக் களைய வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.

கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

***

நீங்க என்ன சொல்றீங்க?

வாசகியரே, பெண்களுக்குக் குழந்தைப்பேறில் முடிவெடுக்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் இருக்கின்றனவா? உரிமை மறுக்கப்படுகையில் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? தங்கள் உரிமையைச் செயல்படுத்துவது எப்படி? இதில் உங்கள் கருத்தும் அனுபவமும் என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

மின்னஞ்சல்: penindru@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x