Published : 07 Feb 2016 02:37 PM
Last Updated : 07 Feb 2016 02:37 PM
ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்களுக்கான வாய்ப்பும் வரவேற்பும் குறைவாகவே இருக்கிறது. ஆனால் அப்படியொரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் விஸ்வரூபம் எடுத்துவிடுவார்கள் என்பதற்கு இயக்குநர் சுதா கொங்கரா ஓர் உதாரணம்.பெண் இயக்குநர்கள் என்றாலே காமெடி, காதல், சென்டிமென்ட் படங்கள் மட்டுமே எடுப்பார்கள் என்ற பொதுவான கருத்தை தன் முதல் படமான ‘துரோகி’ மூலம் உடைத்தெறிந்தவர் அவர். தற்போது ‘இறுதிச்சுற்று’ மூலம் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி, வெற்றியைத் தக்கவைத்துக்கொண்ட இயக்குநர் சுதாவைச் சந்தித்து பேசியதிலிருந்து...
எப்படி வந்தது சினிமா ஆர்வம்?
நான் பக்கா சென்னை பொண்ணு. சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தேன். எனக்குச் சின்ன வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம். ‘பகல் நிலவு’ படம் பார்த்ததிலிருந்து எனக்கு சினிமா மீதும், மணி சார் மீதும் ஈர்ப்பு அதிகமானது. சினிமா சார்ந்த படிப்பு படிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் என் குடும்பத்தினரோட பழமைவாதம் அதுக்கு இடம் கொடுக்கலை. கல்லூரி படிப்பு முடித்தவுடன் எனக்கு திருமணமாகி விட்டது.
திருமணத்துக்குப் பிறகு என் கணவர்தான், உனக்கு என்ன விருப்பமோ அதைப் படின்னு சொன்னார். அதற்குப் பிறகு மாஸ்காம் படிச்சுட்டு, ரேவதி மேடத்திடம் பணியாற்றினேன். ‘மித்ர மை ஃப்ரெண்ட்’ படத்துக்கு திரைக்கதை எழுதினேன். அப்புறம் மணி சாரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் சுமார் ஆறரை ஆண்டுகள் பணியாற்றினேன்.
மணிரத்னத்திடம் பணியாற்றிய அனுபவம்?
‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்துக்கு சப்-டைட்டில் பண்ணும்போது மணி சாரிடம் சேர்ந்தேன். ‘ஆயுத எழுத்து’, ‘யுவா’ மற்றும் ‘குரு’ ஆகிய படங்களில் அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். மணி சாரிடம் பணிபுரிவது மிகவும் கடினம். அவர் நினைப்பதை கொண்டுவருவதற்கு 24/7 ஒடிக்கொண்டேயிருக்க வேண்டும். மணிரத்னம் ஒரு பெண்ணியவாதி. அவரிடம் நிறைய பெண் உதவி இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள். பெண்ணா, ஆணா என்றெல்லாம் அவர் பாகுபாடு பார்க்கவே மாட்டார். ஒரு காட்சியை இவ்வளவுதான் எடுக்க முடியும் என்று விட்டுவிடுவோம். ஆனால் அப்படி விடவே கூடாது என்று சொல்லிக் கொடுத்தது அவர்தான். தொழில்நுட்ப ரீதியில் நான் கற்றுக் கொண்டது எல்லாமே அவரிடம்தான். மணிரத்னம் எனக்கு ஒரு சிறந்த குரு.
ஒரு பெண் சினிமாவை முழுநேர வாழ்க்கையாக தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏதும் உண்டா?
பெண்கள் இதை மட்டும்தான் பண்ண வேண்டும் என்று சொல்வது எனக்குப் பிடிக்காது. பெண்கள் எல்லாம் சினிமாவுக்கே போகக் கூடாது என்றார்கள், அதனால்தான் சினிமாவையே என் முழுநேர வேலையாகத் தேர்ந்தெடுத்தேன். என் கணவர் முதலில், ‘பொட்டிக் நடத்து, கம்ப்யூட்டர் கத்துக்கோ’ என்றார். ஆனால், எனக்கு சினிமாதான் பிடிக்கும் என்பதால் இங்கு வந்தேன்.
நான் எடுக்கும் படங்கள் முதலில் எனக்குப் பிடிக்க வேண்டும். வேறு யாருக்காகவோ நான் படங்கள் பண்ணுவதில்லை. வங்க இயக்குநர் அபர்ணா சென், ஹாலிவுட் பெண் இயக்குநர் கேத்ரின் பிக்லோ இவர்களின் படங்கள்தான் எனக்குப் பிடிக்கிறது, அதை விடுத்து நான் வேறு என்ன பண்ண முடியும்?
பெண் இயக்குநராக நீங்கள் சந்திக்கும் சவால்கள்?
ஒரு ஆண் இயக்குநர் சொன்னால் ஒரு நொடியில் நடக்கக்கூடிய விஷயம், பெண் இயக்குநர் சொன்னால் மூன்று நொடி ஆகும். ஒரு பெண் சொல்லி நாம செய்யணுமா என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அதே சமயத்தில் பெண் இயக்குநருக்கு கோபமே வரக் கூடாது. படப்பிடிப்பு தளத்தில் என் தலை மீது இருக்கும் பாரம் எனக்குதான் தெரியும். என்னை நம்பி இருபது கோடி ரூபாய் போட்டு படம் எடுத்திருக்கிறார்கள், ஒவ்வொரு நாளும் ஏழு லட்சம் போய்க்கொண்டிருக்கும். அந்த சமயத்தில் நான் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும்? படப்பிடிப்பு தளத்தில் நான் கோபப்பட்டாலே முறைப்பார்கள். அப்படி எல்லாம் பாரபட்சம் இல்லை என்று எந்த பெண் இயக்குநராவது சொன்னால், அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவர் கவனிக்கவில்லை என்று அர்த்தம்.
எப்படி உருவானது ‘இறுதிச்சுற்று’?
‘துரோகி’ வெளியானவுடன் இனிமேல் படம் பண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அந்தப் படம் சரியாக போகவில்லை என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இயக்கும் நேரத்தில் சமைக்கலாம், காய்கறி தோட்டம் வைக்கலாம் என்று எண்ணினேன். அந்தச் சமயத்தில் பிஜாய் நம்பியார்தான் அவனுடைய படப்பிடிப்புக்கு என் உதவி வேண்டும் என்று அழைத்தான். நான் போய் இரண்டு நாட்கள் பணியாற்றியவுடன், மீண்டும் படம் பண்ணலாம் என்று எண்ணம் வந்தது.
மும்பையில் பிஜாய் நம்பியார் வீட்டுக்குப் பக்கத்தில்தான் மாதவன் வீடும். எனக்குப் பன்னிரெண்டு ஆண்டுகளாக மாதவனைத் தெரியும். அவ்வப்போது பேசிக் கொள்வோம். மும்பையில் நான் இருக்கும்போது, மாதவனைச் சந்தித்தேன். பிப்ரவரி 2011-ல் இந்தக் கதையைச் சும்மா சொன்னேன். மாதவனுக்கு இந்தக் கதையை ரொம்ப பிடித்துவிட்டது. ‘இதை நீ பண்ற.. நான் நடிக்கிறேன்’ன்னு சொன்னார். செப்டம்பர் மாதம் முழுக்கதையையும் எழுதி முடித்துவிட்டேன். அதற்குப் பிறகும்கூட இந்தக் கதை தொடர்பா தேடிக்கொண்டே இருந்தேன். முழுக்கதையையும் மாதவனிடம் தெரிவித்து, தயாரிப்பாளர் எல்லாம் முடிவாகி 2014 ஆகஸ்ட்ல படப்பிடிப்புக்குப் போனோம்.
உங்கள் இரண்டு படங்களிலுமே குப்பத்து வாழ்க்கையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
முதல் படம் ‘துரோகி’ முழுக்க முழுக்க தாதாக்கள் குறித்தும் அவர்களின் பழிவாங்கும் களத்தையுமே மையமாகக் கொண்டது. அதுபோன்ற அடிதடி ஆக்ஷன் படத்துக்கு ராயபுரம் பகுதிதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது, அதையே தேர்ந்தெடுத்தேன்.
‘இறுதிச்சுற்று’ படத்துக்கான கள ஆய்வில் ஈடுபட்டபோது பெரும்பாலான குத்துச்சண்டை வீராங்கனைகள், பின்தங்கிய பகுதிகளிலிருந்துதான் வருகிறார்கள் என்பது தெரிந்தது. அதனால்தான் இதில் மீனவ குப்பத்தை ஹீரோயின் வசிக்கும் பகுதியாகப் படமாக்கினோம்.
குடும்பத்தினரின் ஒத்துழைப்பு?
படப்பிடிப்புக்கு முன்புவரை என் குடும்பத்தினர் அனைவரும் என் கண்ணுக்குத் தெரிவார்கள். படப்பிடிப்புக்கு போய்விட்டால் குடும்பத்தைப் பற்றி யோசிக்கவே நேரமிருக்காது. ஆனால், என்ன நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பு, அதை நான் மறுக்கவில்லை. படப்பிடிப்பு நடந்த 60 நாள் மட்டும் அப்பா, அம்மா யாராவது வந்து பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் பார்த்து கொள்வதால் வீட்டில் என்ன நடக்கிறது என்ற டென்ஷன் இல்லாமல் என்னால் வேலைபார்க்க முடிந்தது.
நண்பர்கள்?
தியாகராஜன் குமாராஜா என் நல்ல நண்பர். புஷ்கர் - காயத்ரி, பாலா சார், பிஜாய் நம்பியார், விக்ரம் குமார் என நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை விழவிடவே மாட்டார்கள். ஒரு ரூபாய்கூட வாங்காமல் ‘இறுதிச்சுற்று’ படத்தின் ட்ரெய்லரை கட் பண்ணி கொடுத்தது தியாகராஜன் குமாராஜா. ‘நீ ஜெயிக்கணும்’னு சொல்லிட்டுப் போனார். அந்த மாதிரி நண்பர்கள் எனக்கு இருக்கும்வரை கவலையில்லை. இப்போது எனது நண்பர் ராஜ்குமார் ஹிரானி. அவர் என்றைக்குமே என்னை ஒரு பெண்ணாகப் பார்த்ததே இல்லை. எப்போதுமே என்னை டைரக்டர் என்றுதான் அழைப்பார்.
திரைத்துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?
என்னை நீங்கள் வெளி நிகழ்ச்சிகளில் பார்க்கவே முடியாது. இரண்டு மணி நேரம் கிடைத்தால் படம் பார்ப்பேன். அதற்கு மேல் நேரம் கிடைத்தால் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். திரையுலகில் ஆண் இயக்குநர் வெற்றிப் படம் கொடுத்தால் சம்பளம் உயருகிறது. அதே போலதான் பெண் இயக்குநரும் வெற்றி கொடுத்தால் சம்பளம் உயரும்.
ஐ.டி துறையில் மட்டும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு கிடையாது. எங்களைச் சுற்றி நாங்கள் உருவாக்கிக் கொள்வதுதான் பாதுகாப்பு. பெண்கள் எப்போதுமே முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெண் என்பதால் எளிதில் வீழ்த்திவிடலாம் என்று நினைப்பார்கள். உலகம் முழுவதுமே பெண்ணைச் சுற்றி ஒரு நரிக்கூட்டம் சுற்றிவரத்தான் செய்கிறது. 15 வருடமாக நான் இந்தத் திரையுலகில் இருக்கிறேன், ஆனால் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன். பெண்களின் பாதுகாப்பை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT