Published : 14 Feb 2016 04:15 PM
Last Updated : 14 Feb 2016 04:15 PM

விவாதக் களம்: அன்பால் திருத்துவோம் குழந்தைகளை!

கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பூர் தனியார் பள்ளியில் நடந்த துயர சம்பவத்தை முன்வைத்து, ‘பெருகிவரும் சிறார் குற்றங்களுக்கு யார் காரணம்?’ என்று கேட்டிருந்தோம். கடிதம் மூலமாகவும் மின்னஞ்சல், இணையதளம் வழியாகவும் பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்களை இங்கே பார்க்கலாம்.

திருப்பூர் சம்பவத்தைப் படிக்கும்போதே மனம் பதைத்தது. கட்டிடத்துக்கு எப்படி அஸ்திவாரம் முக்கியமோ அப்படித்தான் குழந்தைகளுக்குக் கல்வியுடன் ஒழுக்கம் சார்ந்த படிப்பும். குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

- அர்ச்சனா லெட்சுமணன், மதுரை.

பிற உயிரைக் கொல்லும் அளவுக்குப் பிஞ்சு மனங்களில் துளிர்விடுகிற வன்முறைக்குக் குழப்பமான குடும்பச் சூழல், குழந்தைகளுக்குத் தரப்படும் அதீத சுதந்திரம் அல்லது அடக்குமுறை, சமுதாய ஏற்றத் தாழ்வுகள், பள்ளிக்கூடங்களில் தரப்படுகிற மன அழுத்தம், திரைப்படங்கள், தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன் என்று ஏகபட்ட காரணங்கள் இருக்கின்றன. ஒரு குழந்தையின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் மேலே குறிப்பிட்ட அனைத்துக்குமே பங்கு இருப்பதால் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நற்பண்புகளைப் பசுமரத்தாணி போல அவர்களின் மனதில் பதியவைக்க வேண்டும்.

- மனோகர், சென்னை.

பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். கதைகள் மூலமாகவும் விளையாட்டு மூலமாகவும் அவர்களுக்கு நல்ல பண்பை எடுத்துச் சொல்லி வளர்க்க வேண்டும். குழந்தைகளின் நச்சரிப்பிலிருந்து தப்பிக்க அவர்களிடன் செல்போனைக் கொடுத்துவிட்டு, தங்கள் வேலையைக் கவனிப்பது மிக தவறான அணுகுமுறை. குழந்தைகளைப் படிப்பாளிகளாக மட்டுமே வளர்க்க நினைக்காமல் நல்ல பண்பாளர்களாகவும் வளர்க்க வேண்டும்.

- எஸ். தமிழரசி, திருச்சி.

ற்றக் குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிடுவதையும் அதில் தங்கள் குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக்காட்டி அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைப்பதையும் பெற்றோர் நிறுத்த வேண்டும். தங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார் என்ற தெளிவும் பெற்றோருக்கு வேண்டும். காரணம் குழந்தைகளின் ஆளுமையில் அவர்களது நண்பர்கள் வட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

- பா. சுபிசுதா, காவேரிப்பாக்கம்.

ன்று பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். தனியாக வளரும் குழந்தை, அதுவும் ஒற்றைக் குழந்தையாக இருந்துவிட்டால் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். வீட்டில் தாத்தா, பாட்டிகூட இல்லாமல் தனிமையில் வளரும் குழந்தைகளுக்குத் தொலைக்காட்சிப் பெட்டியும், செல்போனும் நண்பர்களாகின்றன. தனிமையும் வன்முறையும் இணையும் புள்ளியில் அந்தக் குழந்தை விபரீதமான செயல்களை அரங்கேற்றிவிடுகிறது.

- லலிதா சண்முகம், திருச்சி.

ந்தக் காலத்து குழந்தைகள் பிறந்தது முதலே பெற்றோரின் பூரண கவனிப்பில் இருப்பதில்லை. பள்ளி, டியூஷன் என்று வதைபடும் குழந்தைகள் விடுமுறை நாட்களிலும் பெற்றோருடன் இருக்க முடிவதில்லை. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தைகளுக்கு நன்னெறி புகட்ட முடியும். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைவிட சிறு வயது முதலே குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை வேண்டும்.

- அ. கருப்பையா, தொட்டியம்பட்டி.

குழந்தைகள் தொலைக்காட்சியில் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். எப்போது சண்டை மற்றும் வன்முறைக் காட்சிகளில் லயித்திருக்கும் குழந்தைகள் அவற்றைத்தானே வெளிப்படுத்துவார்கள்? இதுபோன்ற சம்பவங்களுக்குக் கூட்டுக் குடும்பம் சிதைந்து போனதும் ஒரு காரணம். பள்ளிகளும் நூறு சதவீத தேர்ச்சியில் காட்டும் அக்கறையை, மாணவர்களை நற்பண்புள்ளவர்களாக வளர்ப்பதில் காட்டுவதில்லை.

- எஸ். மங்கையர்கரசி, நெய்வேலி.

நாம் நம் குழந்தைகளுக்கு அன்பை, நேசத்தை, மரியாதையை, விட்டுக் கொடுத்தலை, மற்றவர் வலியை, பொது நலத்தைக் கற்றுத் தருகிறோமா? ‘மார்க் வாங்கு, விளையாடப் போகாதே, அவனைப் பாரு’ - இப்படி சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள், எதைப் பிரதிபலிப்பார்கள்? அடுத்தவர் மீதான அன்பும் அக்கறையும் துடைத்தெடுக்கப்பட்ட உணர்வுடன் வன்மம், கொடூரம், சுயநலம் அனைத்தும் சேர்ந்துவிட்டால் அதன் விளைவு மோசமானதாகத்தான் இருக்கும்.

- ஜெரினாகாந்த், சென்னை.

மது கூட்டுக் குடும்ப முறை சிதைந்து போனதும் இப்படியான அவலங்களுக்கு முக்கியமான காரணம். பெரும்பாலும் தாத்தா - பாட்டி அரவணைப்பில் வளரும் குழந்தைகள், தவறான பாதையில் போவதற்கான சாத்தியங்கள் குறைவு. கணவன் - மனைவி இருவருமே வேலைக்குப் போகும் குடும்பங்களில் ஒருவிதமான இயந்திரத்தன்மை நிலவுகிறது. குழந்தைகளுக்குப் போதிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காததுடன் பள்ளிகளில் திணிக்கப்படும் படிப்புச் சுமையும் அவர்களுடைய ஆளுமையை பாதிக்கிறது.

- பொன். கருணாநிதி, கோட்டூர்.

டி விளையாடு பாப்பா என்ற காலம் மலையேறி இன்று உட்கார்ந்து விளையாடு பாப்பா என்று சொல்லித் தருகிறோம். கையோடு இணைந்த கவச குண்டலமாக மின்னணு சாதனங்கள் மாறிவிட்டன. சமூக வலைத்தளங்கள் அனைத்து குப்பைகளையும் நம் வீட்டுக்கே கொண்டுவந்து கொட்டுகின்றன. ஏட்டுச்சுரைக்காயை மட்டுமே புசித்து வளரும் குழந்தைகளுக்கு ஒழுக்க நெறிகளைப் போதிக்க இங்கே யாருக்கும் நேரமில்லை.

- ச. மகாலட்சுமி, பழனிக்கவுண்டன் புதூர்.

குழந்தைகளின் ஆளுமையைத் தீர்மானிப்பதில் பெற்றோருக்கு முதன்மைப் பங்குண்டு. குழந்தைகளின் பழக்க வழக்கங்கள், நடத்தை, சிந்தனை, செயல்பாடுகளைக் கவனித்து அவற்றில் உள்ள குறைகளைக் களைந்து நிறைகளைப் போற்றி வளர்க்க வேண்டும். கல்வி முறை பாடத்திட்டத்திலும் ஆசிரியர்களின் அணுகுமுறையிலும் மாற்றம் தேவை. சமூக ஊடகங்கள் ஓரளவுக்கேனும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

- கவிதாசன், மேட்டுப்பாளையம்.

வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்களின் பெற்றோரை உடன் வைத்துக்கொள்வது குழந்தைகளுக்குப் பெரிய உபகாரமாக இருக்கும். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் தினமும் ஒரு மணி நேரமாவது மனம்விட்டுப் பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் நம்முடைய குடும்பத்தில் நடந்தாலே சிறார் குற்றங்கள் குறையும்.

- எஸ். கிருஷ்ணவேணி பால்ராஜ், சேலம்.

நாம் என்ன வேலை செய்தாலும் நமது குழந்தைகளையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். துணி துவைக்கும்போது, உங்கள் குழந்தையின் கையிலும் சிறியதாக ஒரு சோப்புத்துண்டு கொடுங்கள். செடிக்கு நீங்கள் பெரிய வாளியில் தண்ணீர் ஊற்றினால், உங்கள் குழந்தையின் கையில் ஒரு சிறிய பாத்திரத்தைக் கொடுங்கள். சேர்ந்து ஒரு செயலைச் செய்வதில் இருக்கும் இன்பத்தைப் புரியவையுங்கள்.

- மு.பாரதி, சென்னை.

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கும், பள்ளிகளின் பங்கும் சமமானவை. பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளும், விளையாட்டு வகுப்புகளும் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும். விளையாட்டின் மூலம் நட்பு, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்வது போன்ற குணங்களை குழந்தைகளிடம் வளர்க்கலாம்.

- உமாராணி, தர்மபுரி.

குடும்பச் சூழலில் பெற்றோர்களின் சண்டைகள், தேவையற்ற வாக்குவாதங்கள், குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும். குழந்தைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் ஏக்கங்களுக்கு சிறந்த வலிநிவாரணியாக, களிம்பாகப் பெற்றோர்கள் இருந்தால் இதுபோன்ற தவறுகள் நடக்காது.

- மலர்மகள், மதுரை.

ழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், இளம் தலைமுறையினருக்கு உழைக்கக் கற்றுக் கொடுக்காமல் பிழைக்கக் கற்றுக் கொடுக்கின்றனர். முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள், கட்டுப்பாடின்றி தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டால், குழந்தைகள் அவர்களைப் பார்த்து தடம்புரண்டு போகின்றனர்.

- மா. வேல்முருகன், மேலக்கிடாரம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மற்றவர்களின் வலி,வேதனையை எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டும். தற்போது பிள்ளைகளிடம் பேசும் நேரம் குறைந்துவிட்டதால் அவர்களுடைய எண்ணங்களையும் குறைகளையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத சூழல். அந்த வெறுப்பும் கோபமும் மனதை ஆக்கிரமித்து இருக்க, பள்ளியிலும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளின் ஒழுக்கம் சார்ந்தும், நன்னெறி சார்ந்தும் பள்ளிகள் முறைப்படுத்துவதில்லை.

- நான்ஸிராணி, சென்னை.

கேட்கின்ற இசை, பார்க்கும் திரைப்படங்கள், செல்போன்-கணினி போன்றவற்றில் விளையாடும் விளையாட்டுகள் என்று எல்லாவற்றிலும் அடிதடியான இரைச்சலுடன் கூடிய நிலை, இளம் சிறார்களின் மனதில் ஒரு விதமான கடின போக்கை ஏற்படுத்துகிறது. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிற கதையாக, சின்னச் சின்ன தவறுகள் நடக்கும்போது, அதனைக் கண்டித்து நெறிப்படுத்தாமல் பெற்றோர் காட்டும் சலுகைகள், சிறார்கள் வளரும்போது பெரிய தவறுகள் செய்வதில் அவர்களை தடுக்க முடியாமல் போகிறது.

- சு.தட்சிணாமூர்த்தி, கோயம்புத்தூர்.

டந்த தலைமுறையினருக்குக் கிடைத்த அன்பும் அரவணைப்பும் இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. பள்ளிகள் அவர்களுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கவில்லை. பெற்றோருக்கோ ஒழுக்கத்தைப் போதிக்க நேரமில்லை. கணினி சார்ந்த விளையாட்டுகள் குழந்தைகளின் நேரத்தையும், ஆரோக்கியத்தையும் எடுத்துக் கொள்கின்றன. குழந்தைகள் தாங்கள் தவறு செய்கின்றோம் என்பதை அறியாமலேயே தவறு செய்கிறார்கள். அந்தத் தவறை உணர்ந்து கொள்ளவோ அதைத் திருத்திக் கொள்ளவோ வாய்ப்பு கிடைப்பதில்லை.

- ஜீவன்.பி.கே, கும்பகோணம்.

திருக்குறளையும், பாரதியின் பாடலையும், நன்நெறிகளையும் அர்த்தம் புரிந்து படித்தாலும், இன்றைய வாழ்கையின் ஓட்டத்துக்கு சரி வராது என்று பெரியவர்களுக்கே அறிவுரை கூறுகிறார்கள் இன்றைய பிள்ளைகள். ஆறாம் வகுப்பிலேயே போட்டி தேர்வுக்கும் சேர்த்துப் படிக்கும் நிலைமை. தீமையை அறிந்து கொள்ள நேரம் எங்கே? குழந்தை வளர்ப்பு, சமூகம், கல்வி முறை அனைத்திலும் மாற்றம் வேண்டும்.

- வீ. யமுனா ராணி, சென்னை.

பெற்றோர், கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் அனைவருக்குமே சிறார் குற்றங்களில் பங்கு உண்டு. இன்று திரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகள் மிகவும் கொடூரமானவையாக இருக்கின்றன. இதுபோன்ற காட்சிகளால் கவரப்படும் சிறார்கள், அவற்றை நிஜத்தில் வெளிப்படுத்த முயல்கிறார்கள். ஓரிரு வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை அருகே பள்ளி ஒன்றில் ஒரு மாணவன் சக மாணவனின் உயிரைப் பறித்த நிகழ்வு நினைவிருக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது முழுமையான அன்பும் அரவணைப்பும் காட்ட வேண்டும். படிப்பில் கவனம் சிதைந்த மாணவர்கள் மீது தனிகவனம் செலுத்தி அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும். ஊடகங்களையும், வன்முறை நிறைந்த திரைப்படங்களையும் ஒழுங்குபடுத்துவது நமது ஆட்சியாளர்களிடம் மட்டுமே உள்ளது.

- ப. சுகுமார், தூத்துக்குடி.

து போன்ற கொடுமைகளுக்கு அடிப்படை நம் குடும்பக் கட்டமைப்புகளின் விதி விலகல்தான். மூத்தோரை, பெற்றோரை வீட்டோடு வைத்து பராமரிக்கும் நம் பண்பாடு இப்போதைய தலைமுறைக்கு இல்லாமல் போனதும் ஒரு காரணம். குழந்தைகள் அன்புக்கும் பிரியத்துகும் கட்டுப்படுபவர்கள். வீட்டில் தாத்தா-பாட்டி போன்ற மூத்தோர் இருந்தால் அவர்களின் அன்பில், நீதிக்கதை சொல்லித்தரும் கரிசனத்தில், தவறு சொல்லித் திருத்துதலில் குழந்தைகளுக்கு வாழ்வின் நெறிமுறைகள் பிடிபடும். குழந்தைகளின் மனதில் அன்பையும், பாசத்தையும், நேர்மையையும், சகிப்புத்தன்மையையும் விதைக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

- கண்ணம்மாள் பகவதி.

குழந்தைகள் மீது கொடுக்கப்படும் அதிகப்படியான அழுத்தமும் ஒரு காரணம். குழந்தைகள் மீதான வன்முறை என்பது பால்மணம் மாறாத பருவத்தில் ப்ரீ.கேஜி. என்ற பெயரில் அவர்களை அடைத்து வைப்பதிலேயே தொடங்கிவிடுகிறது. அந்தக் காலத்தில் ஐந்து வயது முடிந்த பிறகுதான் பள்ளியில் சேர்ப்பார்கள். அதுவரை குழந்தைகள் வீட்டினரோடு நெருங்கி மனதளவில் மிகவும் இணக்கமாகவே இருப்பார்கள். தங்களது எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினர் இல்லாததால் அவர்கள் மீது வன்முறை நிழல் மெல்லப் படருகிறது. அதுவே பின்னாட்களில் அவர்கள் குற்றங்கள் புரியத் தூண்டுதலாக அமைகிறது. இன்று ஒரு நாளின் 20 மணி நேரத்தைக் குழந்தைகள் பாடப் புத்தகங்கள் படிப்பதிலேயே கழித்துவிடுகிறார்கள். நீதியும், போதனையும் வழக்கொழிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் கல்விமுறையில் மாற்றம் ஏற்படுத்த எப்போது புரட்சி ஏற்படப்போகிறது? சமூக விரோதிகளை நாயகர்களாகக் கொண்டாடும் திரைப்படங்களும், சமூக அவலங்களை மட்டுமே அதிக அளவில் விவரித்து விஸ்தாரமாக வெளியிடும் பத்திரிகைகளும் நமது சமூகத்தில் மனப்பிறழ்வு கொண்டவை. அவற்றைத் தொடர்ந்து செல்லும் குழந்தைகள் அவற்றையே தங்களது ஆதர்சமாகக் கொள்கிறார்கள். அதன் விளைவுதான் இத்தகைய நிகழ்வுகள்.

- தேஜஸ், காளப்பட்டி.

குழந்தைகள் களிமண் போன்றவர்கள். உருவகப்படுத்தும் பெற்றோர்களின் தவறே அவர்கள் மீது பிரதிபலிக்கிறது. இயந்திரமாய்ப் போன இன்றைய வாழ்க்கையில் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளைச் சொல்லி வளர்க்கத் தவறிவிடுகிறோம். வன்முறையை வீரசாகசமாகக் காட்டும் ஊடகங்கள் அவர்களை வழி தவற வைக்கின்றன.

- இரா.பொன்னரசி, வேலூர்.

ல்லா மனிதருக்கும் வடிகால் தேவை, குழந்தைகளுக்கும் அது தேவை. இதை நாம் எளிதாக மறந்துவிடுகிறோம். சிறு பிள்ளைகளது வடிகால் விளையாட்டுதான். ஆனால் அந்த வாய்ப்பு கல்வி என்ற பெயரால் அவர்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது. குழந்தைகளை குழந்தைகளாக வளரவிட்டாலே போதும். அழகான அவர்களது உலகத்தில் பெரியவர்களின் இயந்திரத்தனமான,வெறுமையான உலகத்தைப் புகுத்தி சிதைக்காமல் இருந்தாலே போதும், பிஞ்சு உள்ளங்கள் நஞ்சாக மாறாது.

- ஜே. லூர்து, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x