Published : 04 Jul 2021 07:13 AM
Last Updated : 04 Jul 2021 07:13 AM
கேரள மாநிலம் வர்க்கலை பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் துணை ஆய்வாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார் ஆனி சிவா (31). இவர் ஒருகாலத்தில் அதே ஊரில் சுற்றுலாப் பயணிகளுக்கு எலுமிச்சைச் சாறு, ஐஸ்க்ரீம் விற்று பிழைப்பு நடத்தியவர். பிறந்தவீட்டை எதிர்த்துக் காதலனைத் திருமணம் செய்துகொண்ட ஆனி, 18 வயதில் கைக்குழந்தையுடன் இருந்த நிலையில் கணவனால் புறக்கணிக்கப்பட்டார். அதன் பிறகு வீடுகளுக்குச் சென்று பொருட்களை விற்பது, சுற்றுலாப் பயணிகளுக்கு ஐஸ்கிரீம், எலுமிச்சைச்சாறு விற்பது ஆகியவற்றில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தார். உறவினர் ஒருவரின் ஆலோசனையால் காவல்துறை பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்றார். இடையில் இளங்கலை.சமூகவியல் பட்டப்படிப்பை முடித்தார். இப்போது காவல்துறை பணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனி துணை ஆய்வாளராக்கப்பட்டிருக்கும் செய்தியை “சக்திக்கும் தன்னம்பிக்கைக்குமான முன்மாதிரி” என்னும் வாசகத்துடன் கேரள காவல்துறை தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் ஆனியின் கதையை ட்விட்டரில் பகிர்ந்து அவரைப் பாராட்டியிருக்கிறார்கள்.
ஆண்களைப் போல் தலைமுடியைக் கத்தரித்துக்கொண்டு சீருடையுடன் காவல்துறை வாகனத்தின் முன்னால் நின்றுகொண்டிருக்கும் ஆனி சிவாவின் கம்பீரமான புகைப்படம் கடந்த வாரம் சமூக ஊடகங்களைக் கலக்கியது. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சமூகத் தடைகளை மீறி வாழ்க்கையில் எவ்வகையிலேனும் முன்னேறுவதே கடினமாக இருக்கும் சூழலில் ஆனி காவல்துறை பணியில் சேர்ந்திருக்கிறார். எந்த நிலையிலிருந்தாலும் எத்தகைய சாதனையையும் பெண்களால் நிகழ்த்த முடியும் என்பதற்கான நிரூபணம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT