Published : 27 Dec 2015 12:29 PM
Last Updated : 27 Dec 2015 12:29 PM
“பெண்களுக்கு எதிரான வன்முறை களுக்கு முடிவு கட்டுங்கள். உலகம் முழுவதும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மிகப் பெரும் பிரச்சினை. உலக அளவில் மூன்றில் ஒரு பெண் வன்முறையால் பாதிக்கப்படுகிறார். மனித உரிமைகளை மீறிய அந்தச் செயலுக்கு முடிவு கட்ட வேண்டும். பாலினப் பாகுபாட்டின் அடிப்படையில் வன்முறை நிகழக் கூடாது. ஆண் – பெண் சமத்துவம் உருவாக வேண்டும்” என்ற முழக்கத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்வைக்கும் அளவுக்குத்தான் பெண்களின் நிலை உலகெங்கும் இருக்கிறது. ஐ.நா. பெண்கள் நலப் பிரிவின் நிர்வாக இயக்குநரும் செகரட்டரி ஜெனரலுமான பும்ஸைல் லம்போ நகுகா விடுத்துள்ள அறிக்கைதான் இப்படிச் சொல்கிறது.
படித்த/ படிக்காத, பணிபுரிகிற/ இல்லத்தரசிகளாக இருக்கின்ற, பால் மணம் மாறாத குழந்தைகள்/ பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வயது முதிர்ந்த பெண்மணிகள் என எந்த வேறுபாடும் இல்லாமல் இங்கு ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் நம் நாட்டில் நிகழ்ந்தவையே நமக்கு அனைத்தையும் சொல்லாமல் சொல்கின்றன.
பாலியல் வல்லுறவுகளும் தண்டனையும்
நிர்பயா கூட்டுப் பாலியல் வழக்குக்குப் பின் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும்கூட குற்றங்கள் குறையவில்லை. வயது வித்தியாசமற்ற, கூட்டுப் பாலியல் வல்லுறவுகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. மிகச் சமீபத்தில் ஹரியாணாவில் ரோதக் நகரில் நிகழ்ந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கின் தீர்ப்பில் 7 பேருக்குத் தூக்கு தண்டனை, எட்டாவது நபர் நபர் ஒரு சிறார். அப்படியானால் தண்டனையால் என்ன பயன்? இளைஞர்கள், ஆண்களிடம் மன மாற்றம் ஏற்பட்டுவிட்டதா? “உங்களை யாராவது பலாத்காரம் செய்தால், அதை எங்களால் எப்படித் தடுக்க முடியும்?” என்று ஒரு பெண் செய்தியாளரிடம் நாகூசாமல் எதிர்க் கேள்வி எழுப்பும் அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கும்வரை, தண்டனை என்ன செய்துவிட முடியும்?
யாருக்கு அதிகாரம்?
தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து படித்து முன்னேறி காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற விஷ்ணுப்ரியா தொடர்ந்து பணியாற்ற முடியாமல், பல்வேறு வித மன அழுத்தங்களுக்கு ஆட்பட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார். அதைக் கோழைத்தனமென்றும், அவர் காவல்துறை பணிக்குச் சற்றும் பொருத்தமற்ற ஒரு நபர் என்றும் எள்ளி நகையாடுகிறது சமூகம். இங்கு அந்த நிலை என்றால், ஹரியாணா மாநில காவல்துறை அதிகாரி சங்கீதா கலியா எதிர்கொண்டது வேறு மாதிரியான தாக்குதல்.
மக்கள் குறைதீர் கூட்டத்துக்குத் தலைமை ஏற்ற அமைச்சரிடம், மாநில எல்லையில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாகத் தொண்டு நிறுவனம் ஒன்று புகார் அளித்தது. இது பற்றி அமைச்சருக்கும் காவல்துறை அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, சங்கீதா கலியாவைக் கூட்டத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் முன்னிலையில் அநாகரிகமாகக் கூச்சலிடுகிறார் அமைச்சர். ஆனால், அவர் வெளியேறவில்லை. இதனால் கோபத்துடன் அமைச்சர் வெளியேறியதுடன் முதல்வரிடமும் காவல்துறை அதிகாரி சங்கீதா பற்றி புகார் அளிக்கிறார். அதன் பின் 24 மணி நேரத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைக்கு சங்கீதா கலியா இடமாற்றம் என்ற பெயரில் தூக்கி அடிக்கப்படுகிறார். இவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்தான். ஒரே துறை, ஆனால் நடைமுறைகள் எங்கும் மாறவில்லை. வாய் மூடி மௌனியாக இருந்து, மேலதிகாரிகளின் அடக்குமுறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒரு பெண் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார். மற்றவர் துணிச்சலாக அதை எதிர்கொள்ளும்போது தண்டனையாக இந்தியாவின் எங்கோ ஒரு பகுதிக்கு மாற்றப்படுகிறார்.
அனைத்துத் தளங்களிலும் உடைக் கட்டுப்பாடு
ஈவ் டீஸிங் என்பது மாணவிகள், இளம் பெண்கள் மீது மட்டுமல்ல, கல்வி போதிக்கும் பெண் ஆசிரியர்கள் மீதும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட வேதனைச் சம்பவங்கள் நம் கிராமப்புறப் பள்ளிகளில் நிகழ்ந்திருக்கின்றன. மதுரை அருகே வன்னிவேலம்பட்டி கிராமத்தின் அரசுப் பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் உதிர்க்கும் கமெண்ட்டுகளிலிருந்து தப்பிக்க, கல்வித் துறை அதிகாரியே அவர்களுக்கு ஓவர் கோட் அளித்து அணிந்து வரச்செய்த சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. பெண் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் கோட் அணிந்து கொள்ளும்போது ஆசிரியர்களும் அவ்வாறு அணிவதில் தவறு ஏதுமில்லை என்றும், அதனால் ஆசிரியைகளுக்கு மதிப்பு கூடும், மாணவர்களால் மதிக்கப்படுவார்கள் என்றும் தலைமை ஆசிரியர் அதை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார். அவர் ஒரு ஆண் என்பதையும் மறைமுகமாக இங்கு உடைக் கட்டுப்பாடு திணிக்கப்படுவதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
தமிழ்நாட்டில் பெண்கள் லெகிங்ஸ் அணிவது கலாச்சார மீறல், கண்ணியக் குறைவு என்றால், வட கிழக்குப் பகுதிகளின் உச்சியில் இருக்கும் அஸ்ஸாமில் பெண்கள் ஸ்கர்ட் அணிவது சர்ச்சைக்குரியதாகிறது. குரங்குகள் பேண்ட் அணிவதுடன் ஒப்பிட்டுத் தொலைக்காட்சிகளில் அது செய்தியாக்கப்படுகிறது. பாரம்பரியம், கலாசாரம் என்ற பெயரில் கோயில்களில் நுழையவும் உடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
கடவுளுக்கும் ஆகாதவளா பெண்?
உச்சகட்ட அராஜகமாக பெண்களே நுழைய முடியாத கோயில்களும் இருக்கின்றன. சனீஸ்வரனைப் பார்க்கவும் வணங்கவும் ஒரு பெண் கள்ளத்தனமாக மகாராஷ்டிர மாநிலத்தின் குட்டிச்சுவர் மட்டுமே கொண்ட அந்தக் கோயிலுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. அந்தப் பெண் உள்ளே வந்ததாலேயே சனீஸ்வரனுக்குச் சனி பிடித்ததாக ஆசாரத்துடன் அங்கு தீட்டுக் கழிக்கப்படுகிறது. மற்றொரு புகழ் வாய்ந்த கோயிலின் அறங்காவலர் ஒருவர் பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்படுகிறதா என்று சோதித்துப் பார்த்த பிறகே உள்ளே விடுவோம் என்கிறார். சோதனை செய்யக் கருவி கண்டுபிடிக்கவும் அவரின் விஞ்ஞான மூளை குயுக்தியுடன் செயல்படுகிறது. கடவுள்தான் அனைத்தையும் படைத்தார் என்றால் பெண்ணை யார் படைத்தது? அவளுக்குள் ‘தீட்டு’ என்ற மாதவிடாயை உருவாக்கியது யார்?
பிள்ளை பெற்றால் மட்டும் போதும்
மதத்தின் பெயராலும், மூட நம்பிக்கைக் கருத்துகள் விஷ வித்துக்களாக ஊன்றப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினரான இந்து சன்னியாசி சாக்ஷி மகராஜ், ‘ஒவ்வொரு இந்துப் பெண்ணும் குறைந்தது நான்கு பிள்ளைகளாவது பெற வேண்டும்’ என்று முத்து உதிர்க்கிறார் என்றால், மலையாளக் கரையோரம் அகில இந்திய சன்னி ஜமாத்தின் இஸ்லாமியத் தலைவர், ‘பெண்கள் பிள்ளை பெறுவதற்கு மட்டுமே லாயக்கானவர்கள்’ என்று அதிர்வேட்டு வெடிக்கிறார். பெண் என்பவள் இவர்களை எல்லாம் பொறுத்தவரை வெறும் பிள்ளை பெறும் கருவி மட்டுமே.
அனைத்துத் தரப்பிலும் எதிர் நிலையே
நம் வீட்டுக் கூடத்துக்குள் நடுவில் உட்கார்ந்துகொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியோ விளம்பரங்களால் நிறைந்து வழிந்துகொண்டிருக்கிறது. பெண்நிலைக்கு எதிரானதாகவே அதன் வாசகங்களும் பல நேரங்களில் நம் காதுகளில் தேள் கொடுக்காய்க் கொட்டுகின்றன.
பெண்கள் நிலை இதுவென்றால், மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் வைக்கும் கோரிக்கைகள் காதுகளில் ஏறுமா? எல்லாத் தடைகளையும் மீறி அவர்களில் சிலர் காவல்துறையிலும், கலைத்துறையிலும், அரசியலிலும் பங்கு பெறும்போது மனசு துள்ளத்தான் செய்கிறது.
பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்றச் செயல்களின் அடி நாதமாக, ஒற்றைச்சரடாக ஓடுவது பெண் வெறும் உடலாக மட்டுமே பார்க்கவும், பாவிக்கவும் படுகிறாள் என்பதுதான். சிறு குழந்தைகளிலிருந்தே கண்பிக்கப்படும் ஆண் / பெண் பாகுபாடு முற்றிலும் களையப்பட்டாலொழிய இதற்கு விமோசனம் இல்லை. பாலினப் பாகுபாடு நீக்கப்பட வேண்டியது பற்றியும் பாலின சமத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் தீவிரம் குறித்தும் நாம் பேசாவிட்டால், அதற்காக முயற்சி செய்யாவிட்டால் ஆண் மையக் கருத்தாடலும் கலாச்சாரமும்தான் அனைத்து மட்டத்திலும் விஷக் கிருமிகளெனப் பரவும். எந்தத் துறையிலும் சாதனைகளின் வீச்சைவிட வேதனைகளே மிஞ்சுவதை என்னவென்று சொல்ல?
புதிதாய்ப் பிறக்கவிருக்கும் இந்த ஆண்டிலாவது மனித குலத்தின் சரிபாதியான பெண்கள் பாரபட்சம் காண்பிக்கப்படாமல், பாலியல் சமத்துவத்துடன் நடத்தப்படுவார்கள் என்று நம்புவோம்; நம்பிக்கைதான் வாழ்க்கை.
ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறிக்கை கூறும் தகவல்கள் மேலும் கவலை கொள்ள வைக்கிறது.
* நம் நாட்டின் 10 சதவீதப் பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை.
* மொத்த உள் நாட்டு உற்பத்தியில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு 39 சதவீதம்.
* பாலினச் சமத்துவ நிலையில் இந்தியா 130-வது இடத்தையே பெறுகிறது.
* பாராளுமன்ற உறுப்பினர்களில் 12.2 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள்.
* இடைநிலைக் கல்வி பெற்ற பெண்கள் 27 சதவீதத்தினர் மட்டுமே
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT