Published : 22 Jun 2014 08:00 AM
Last Updated : 22 Jun 2014 08:00 AM
சோர்ந்து போகிற நேரத்தில் உற்சாகம் தருகிற தோழியாகவும், குழப்பத்தைப் போக்கி மன அமைதி தருகிற மருந்தாகவும் கைவினைக் கலை இருக்கிறது என்கிறார் கரூரைச் சேர்ந்த சசிகலா எத்திராஜ். ஆரத்தித் தட்டில் தொடங்கி விதவிதமான கைவினைப் பொருட்களைச் செய்யும் இவர், இதற்காக யாரிடமும் பயிற்சி எடுத்ததில்லை.
“எனக்கு எப்பவும் வீட்டு வேலையே சரியா இருக்கும். கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் பயனுள்ளதா செலவிடணும்னு நினைச்சேன். அதற்கு ஒரே வழி கைவினைக் கலைகள்தான்னு முடிவு செய்தேன். எனக்குக் கல்யாணமான புதுசுல ஒரு மாசம் தையல் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அந்த அனுபவத்துல இருந்து தொடங்கலாம்னு முதல்ல எம்ப்ராய்டரியைக் கையில் எடுத்தேன். எனக்கு என்ன தோணுச்சோ அதைத் துணிகளில் டிசைனா வரைந்தேன். அப்புறம் ஆரி வேலைப்பாடுகளையும் செய்தேன்” என்று சொல்லும் சசிகலா படிப்படியாகக் கைவினைப் பொருட்களையும் செய்திருக்கிறார்.
“அஞ்சு வருஷத்துக்கு முன்னால என் தங்கை மகளுக்குக் கல்யாணமாச்சு. அதுக்கு சீர் வரிசை வைக்கிறதுக்காக ஆரத்தித் தட்டு செய்ய முடிவு செய்தேன். அதுதான் என் முதல் முயற்சி. பார்த்தவங்க ரொம்ப அருமையா இருக்குன்னு புகழலைன்னாலும், நல்லா இல்லைன்னு குறை சொல்லலை. அதுவே எனக்கு மகிழ்ச்சியா இருந்தது. தொடர்ந்து எம்போஸ் பெயிண்டிங், செராமிக் டிசைன்கள், வால் ஹேங்கிங்ஸ்னு நிறைய செய்தேன். எங்க வீட்டு பெண் குழந்தைகளுக்கு டிரெஸ்ஸுக்கு மேட்ச்சிங்கா நகைகள் செய்யத் தொடங்கி, அதுல பலவிதமா நகைகள் செய்யற அளவுக்குத் தேறினேன். நான் செய்த பொருட்களை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசாகக் கொடுத்திருக்கிறேன்” என்கிறார் சசிகலா.
ஒரு முறை கைவினைக் கலைக்கான மூலப் பொருட்கள் வாங்கக் கடைக்குச் சென்றவர் கண்களில் க்வில்லிங் பேப்பர் பட்டிருக்கிறது. உடனே அது குறித்துக் கடைக்காரரிடம் விசாரித்திருக்கிறார். அப்போதே அதை வாங்கியவர், வீட்டுக்கு வந்து க்வில்லிங் கிராஃப்ட் செய்ய முயற்சித்திருகிறார். முதல் முயற்சியே வெற்றி தர, க்வில்லிங் பேப்பரில் நகைகள், ஆரத்தித் தட்டு ஆகியவற்றைச் செய்து வருகிறார்.
“எல்லோருமே ஒரு வகையில் செய்வதை நாம் எப்படி புது வகையாகச் செய்ய முடியும்னு யோசிப்பேன். அதோட விளைவுதான் நான் செய்கிற நகைகளும் கைவினைப் பொருட்களும்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் சசிகலா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT