Published : 14 Dec 2015 09:08 AM
Last Updated : 14 Dec 2015 09:08 AM
சுமதி - கற்றலில் குறைபாடு உள்ளதாகச் சொல்லப்படும் குழந்தைகளுக்குக் கிடைத்திருக்கும் நல்லதொரு வழிகாட்டி. எம்.எஸ்சி. உளவியல் பட்டம் பெற்ற இவர், பி.எட். படிப்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் படிப்பும் முடித்தவர். நம்மாழ்வாரின் சீடரான சுமதி, கற்றலில் குறைபாடு (Learning Disabled) உள்ள குழந்தைகளுக்கான ஆசிரியராக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு சமீபத்தில் தமிழகம் திரும்பியிருக்கிறார். இங்கேயும் அவரது ஆசிரியப் பணி தொடர்கிறது, மற்ற ஆசிரியர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக.
“அமெரிக்காவில் கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் காண உளவியல் ரீதியிலான முறைகளை கையாள்கிறார்கள். ஆனால், இங்கே நாம் அப்படிச் செய்வதில்லை. நமக்கு மொழி ஒரு தடையாக இருக்கிறது. நம் பிள்ளைகள் ஆங்கிலத்தில்தான் மூச்சு விட வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அமெரிக்காவில் அப்படியில்லை. அங்கே எல்லாமே தாய்மொழியில்தான். அதனால், ஒரு குழந்தையின் செயல்திறனை எளிதில் அடையாளம் கண்டுவிடுகிறார்கள்.
கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்குத் தனியான வகுப்பறைகள் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை மற்ற குழந்தைகளை விட்டு நிரந்தரமாக தனிமைப்படுத்துவதில்லை. அவர்களுக்கான சிறப்பு கவன வகுப்புகள் முடிந்ததும் அவர்களையும் சக குழந்தைகளோடு கலந்திருக்க வைக்கிறார்கள்” - கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை இனம் கண்டறிவதில் இங்கேயுள்ள சிக்கலைப் பகிர்ந்துகொள்கிறார் சுமதி.
கல்விக்காக அமெரிக்க அரசு ஏராளமாகச் செலவு செய்கிறது என்று சொல்லும் சுமதி, மதிப்பெண் எடுக்கவில்லை என்பதற்காக மற்ற திறமைகள் நிரம்பியிருக்கும் மாணவர்களைப் புறந்தள்ளிவிட முடியுமா என்று கேட்கிறார்.
“மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவர்களைத் தள்ளிவைத்தால் அவர்களுக்குள் இருக்கும் இன்னொரு அதீத அறிவு முடங்கிப் போகும். அப்படியே மெனக்கெட்டு அவர்களைப் படிக்கவைத்து நாற்பது மதிப்பெண் எடுக்க வைத்தால் எங்காவது ஓரிடத்தில் குறைவான சம்பளத்துக்கு வேலைக்குப் போவார்கள், அவ்வளவுதான். ஆனால், மதிப்பெண்ணைப் பற்றி கவலைப்படாமல், அவர்களுக்குள் இருக்கும் திறமைக்கு ஊக்கமளித்து அதை வெளிக்கொண்டுவந்தால் நாற்பது பேருக்கு வேலை கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் முதலாளியாகக்கூட அவர்களை உருவாக்க முடியும்’’ என்று சிக்கலுக்குத் தீர்வு சொல்கிறார் சுமதி.
கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை மேம்படுத்துவது குறித்து மதுரை பகுதியில் பள்ளி ஆசிரியர்களுக்கு கவுன்செலிங் கொடுத்துவருகிறார் இவர். அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் இதற்காக எவ்விதக் கட்டணமும் இவர் பெறுவதில்லை. தவிர, கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ‘ஸ்வஸ்தம்’ (முழு ஆரோக்கியம்) என்ற பள்ளியையும் இவர் நடத்திவருகிறார். இங்கேயும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா சேவைதான்.
“கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளைக் கவனிப்பதற்கு முன்பாக பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அதற்கேற்ப தயார்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு குழந்தைக்கு இருபது வழிகளில் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால், அப்படி யாரும் முயற்சிப்பதில்லை.
கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கு குழந்தை கருவில் இருக்கும்போது அந்தக் குழந்தையின் தாயின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாக இருக்கலாம். அதனால்தான் அந்தக் காலத்தில், கருவுற்றப் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தி அவளை மகிழ்வுடன் வைத்தார்கள்” என்று அழுத்தமாகச் சொல்லும் சுமதி, அறுவை சிகிச்சை மூலம் முன்கூட்டியே குழந்தையைப் பிரசவிக்க வைப்பதன் பாதிப்பு குறித்தும் பேசினார்.
“இப்போது சுகப் பிரசவங்கள் அரிதாகிவருகின்றன. நாள், நேரம் குறித்து வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுக்கிறார்கள். ஒரு குழந்தை இவ்வளவு மணி நேரம், இத்தனை நொடிகள்வரை தாயின் வயிற்றில் இருக்க வேண்டும் என்று கணக்கு இருக்கிறது. அதற்கு முரணாக அந்தக் குழந்தையை முன்கூட்டியே வெளியில் எடுக்கிறோம். எதிலெல்லாம் இயற்கையோடு நாம் முரண்படுகிறோமோ அதிலெல்லாம் நமக்குத்தான் பாதிப்பு. இவற்றுடன் பெண்களின் ஆரோக்கியம் குறித்து கல்லூரி மாணவிகள் மத்தியிலும் பேசிவருகிறேன்’’ - சிரித்தபடி விடைகொடுக்கிறார் சுமதி.
படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT