Published : 20 Dec 2015 02:14 PM
Last Updated : 20 Dec 2015 02:14 PM
ஆடைகளின் அழகுக்கு அழகு சேர்க்கும் ஆரி எம்ப்ராய்டரி கலையில் தனி முத்திரை பதித்துவருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த எஸ். மாலதி. இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே மாதம் இருபதாயிரம்வரை சம்பாதிப்பதாகக் குறிப்பிடும் மாலதி, ஆரி வேலைப்பாடு பயிற்சியாளராகவும் விளங்குகிறார்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததுமே மாலதிக்குத் திருமணமானது. குழந்தைகள் பிறந்ததும் அவர்களைக் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருந்ததாகச் சொல்லும் மாலதிக்கு வீட்டில் இருந்தபடியே ஏதாவது செய்து குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாம். குழந்தைகள் வளர்ந்து, பள்ளிக்குச் சென்றதும் தன் எண்ணத்துக்கு வடிவம் கொடுத்தார்.
“எம்ப்ராய்டரிங் கலையில் எனக்கு ஆர்வம் இருந்ததால், அதை முறைப்படி கற்றுக்கொள்ள நினைத்தேன். என் விருப்பத்துக்கு என் கணவரும் ஆதரவு தர, எம்ப்ராய்டரிங் குறித்த தகவல்களை இணையதளத்தில் தேடினேன். ஆரி எம்ப்ராய்டரிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிந்துகொண்டேன். பிறகு ஒரு மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். நாமக்கல்லில் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு நிறுவனத்திலும் ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி அளிக்கப்படுவதை அறிந்து அங்கும் பயிற்சி எடுத்துக்கொண்டேன்” என்று சொல்லும் மாலதி, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆரி எம்ப்ராய்டரி வேலைப்பாட்டைச் செய்துவருகிறார்.
“ஆரி எம்ப்ராய்டரி என்பது நூல் கோக்காமல் ஊசி மூலம் நூல் எடுத்துச் செய்வது. இதில் ஃபினிஷிங் நன்றாக இருக்கும். ஒரு துணியில் எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்து முடிக்கக் குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆகிறதெனில், ஆரி எம்ப்ராய்டரி வேலைப்பாட்டை இரண்டே நாட்களில் செய்துவிடலாம். காலமும் நேரமும் மிச்சமாவது இதன் சிறப்பு” என்கிறார் மாலதி.
பட்டுப் புடவை, காட்டன் புடவை மற்றும் சுடிதாரில் அவற்றின் நிறம், டிசைனுக்கு ஏற்ப ஆரி எம்ப்ராய்டரி செய்துதருகிறார் இவர்.
பயிற்சி அளிப்பது மற்றும் ஆர்டரின் பேரில் எம்ப்ராய்டரி செய்து தருவது ஆகியவற்றின் மூலம் மாதம் இருபதாயிரம்வரை சம்பாதிப்பதாகச் சொல்கிறார் மாலதி. பயிற்சி பெறுகிறவர்களின் ஆர்வத்துக்கு ஏற்றாற்போல் சிலர் விரைவிலேயே இதைப் பழகிவிடுவதாகச் சொல்கிறார் இவர்.
“இருந்தாலும் குறைந்தது மூன்று மாதமாவது பயிற்சி எடுத்துக்கொண்டால்தான் அனைத்து நுணுக்கங்களும் அத்துப்படியாகும். என் தங்கை லலிதா எனக்கு உதவியாக இருக்கிறார். எதிர்காலத்தில் இதை விரிவுபடுத்தும் எண்ணமும் உள்ளது. ஆண்களின் ஆடைகளிலும் எம்ப்ராய்டரிங் செய்யலாம். ஆனாலும் பெண்கள்தான் இந்த வேலைப்பாட்டைப் பெரிதும் விரும்புகின்றனர்” என்று சொல்லும் மாலதி, பேப்பர் மற்றும் டெரகோட்டா நகைகளும் செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT