Published : 07 Dec 2015 11:11 AM
Last Updated : 07 Dec 2015 11:11 AM
இந்தியாவில் ஆண்களின் கோட்டையாக இருந்த காட்டுயிரியல் துறைக்குள் டி.என்.சி வித்யா நுழைந்தபோது அந்தத் துறையில் கிட்டத்தட்ட பெண்களே இல்லாத காலம். அந்தத் துறையைச் சேர்ந்தவர்களில் சிலர் இவர் சாதிப்பாரா, தாக்குப்பிடிக்க முடியுமா என்ற சந்தேகத்துடன் இருந்தாலும் மற்றவர்கள் ஆதரவுடனும் நட்புணர்வுடனும் நடந்துகொண்டார்கள். பொதுவாகப் பெண்கள் எந்த சாதனையைச் செய்தாலும் ஆண்களை அளவீடாகக் கொண்டுதான் அந்தச் சாதனை மதிப்பிடப்படுகிறது. ஆனால், பெண்களோ தாங்கள் எந்தத் துறைக்குள் நுழைந்தாலும் அதில் தங்களுக்கென்றேயான அளவீடுகளை, மதிப்பீடுகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதன் மூலம் ஆண்கள் உருவாக்கிவைத்திருக்கும் மதிப்பீடுகளைத் தகர்த்தெறிவது மட்டுமல்லாமல் அவர்களை மறுபரிசீலனை செய்யவும் வைக்கிறார்கள். அப்படித்தான் வித்யாவும். தனது இதயத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்த பிறகு ஆணென்ன, பெண்ணென்ன?
சென்னையில் பிறந்த வித்யாவுக்குச் சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது ஈடுபாடு அதிகம். பறவைகள், பாலூட்டிகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு அப்போதே இருந்தது. எப்படிப்பட்ட ஆராய்ச்சி என்பதைப் பற்றி அவருக்கு அப்போது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் காடுகள், மலைகளின் இயற்கையோடு இயற்கையாகத் திரிவது குறித்து ஈர்ப்பு இருந்திருக்கிறது. ‘ஏன்?’ என்று கேட்டால் ‘என்னவோ தெரியவில்லை, மனிதர்கள் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை’ என்பார் வித்யா, சிரித்துக்கொண்டே.
காட்டுயிர் தொடர்பான ஏதோவொரு துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலிருந்தே இருந்தாலும் பள்ளி இறுதியாண்டுகளின்போது ஒரு பயமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. தனது காட்டுயிர் ஆர்வத்துக்கு இடையூறு தராத வேலை கிடைக்க வேண்டுமே என்பதுதான் அந்த பயம். இந்த பயத்தின் காரணமாக மாற்று யோசனைகளாக கால்நடை மருத்துவராவது, பத்திரிகையாளர், ஆங்கில விரிவுரையாளர், சிறுவர் புத்தகங்களுக்கு ஓவியம் வரைபவர், பிராணிகளைப் பதப்படுத்துபவராக ஆவது என்று பல்வேறு திட்டங்களும் அவர் மனதில் ஓடியிருக்கிறது.
இளங்கலையில் தாவரவியல், விலங்கியல், வேதியியல் ஆகியவற்றை முடித்த வித்யா பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் ஒருங்கிணைந்த முனைவர் பட்டத்தில் சேர்ந்தார். அதில் அவரது முதல் பணி குளவிகளைப் பற்றியதுதான். அது ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு. காட்டுயிரியலில் அவருக்கு பாலபாடம் அங்கிருந்துதான் கிடைத்தது. ஆய்வகத்தைவிட வனங்களில் பணிபுரிவதுதான் அவருக்குப் பிடிக்கும் என்பதான் பேராசிரியர் சுகுமாரின் குழுவுடன் இணைந்துகொண்டு யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்.
அதற்குப் பிறகு நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பிருது ஃபெர்னாண்டோ, பேராசிரியர் டான் மெல்னிக் ஆகியோரின் வழிகாட்டுதலில் பயின்றார். முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆய்வுப் பணிக்காக விலங்குகள் குணவியல்புகளைத் தேர்ந்தெடுத்து ஸ்டெல்லென்பாஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக் செர்ரியின் குழுவில் இணைந்துகொண்டார். பிறகு, இந்தியா திரும்பி வந்து யானைகளின் குணவியல்புகள் மீது முழுக் கவனமும் செலுத்த ஆரம்பித்தார்.
டாக்டர் சுகுமார் போன்ற முக்கியமான உயிரியலாளர்களுடன் சேர்ந்து குறிப்பிடத் தக்க ஆராய்ச்சிகளை வித்யா இதுவரை செய்திருக்கிறார். துறைசார்ந்த இதழ்களில் அவருடைய கட்டுரைகள் நிறைய வெளியாகியிருக்கின்றன. இந்த இளம் வயதிலேயே (வயது 39) குறிப்பிடத்தக்க அங்கீகாரங்களும் விருதுகளும் பெற்றிருக்கிறார் வித்யா. அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையிடமிருந்து ‘ராமானுஜன் ஃபெல்லோஷிப்’ பெற்றது, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ‘விசிட்டிங் ஸ்காலர்ஷிப்’ பெற்றது, இந்திய அறிவியல் மையத்தில் ஏழு வருட ஆராய்ச்சிக்காக ‘ஃபெல்லோஷிப்’ பெற்றது, 2007-க்கான ‘இளம் அறிவியலாளர் விருது’ இந்திய தேசிய அறிவியல் அகாடமியால் வழங்கப்பெற்றது போன்றவை இவரது குறிப்பிடத் தக்க சாதனைகள்.
காட்டுயிரியலில் வித்யாவின் பணி என்பது யானைகளை ஆய்வுசெய்வது மட்டுமல்ல, வருடத்தின் கணிசமான பகுதியில் அவர் காட்டுயிரியல் குறித்து மாணவர்களுக்குப் பாடம் எடுக்கவும் செய்கிறார். ஆக, காட்டுயிர் களப்பணி, காட்டுயிர் கல்வி ஆகிய இரண்டுக்கும் போதுமான நேரத்தைப் பிரித்துக்கொள்கிறார்.
தற்போது பெங்களூருவில் இருக்கும் ‘உயர்நிலை அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவாஹர்லால் நேரு மைய’த்தில் ‘பரிணாமவியல் மற்றும் உயிரமைப்பு உயிரியல் பிரி’வில் (Evolutionary and Organismal Biology Unit) பணிபுரிகிறார் வித்யா. பந்திப்பூர் தேசியப் பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட யானைகளைத் தனித்தனியாக அடையாளம் கண்டு அவற்றைக் கண்காணித்து ஆய்வு செய்யும் நீண்ட காலத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கொண்டு வரும் குழுவுடன் இணைந்து செயலாற்றிக்கொண்டிருக்கிறா வித்யா. ஆசிய யானைகளின் சமூக முறையை வடிவமைப் பதில் சுற்றுச்சூழலின் பங்கையும், தனிப்பட்ட யானைகளுக்கிடையிலான உறவுகளின் பங்கையும் புரிந்துகொள்வது இந்தத் திட்டத்தின் நோக்கம். ஆப்பிரிக்க யானைகளைப் பற்றி நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதனோடு ஒப்பிட்டால் இந்திய யானைகளைப் பற்றிய ஆய்வுகள் மிகவும் குறைவு. இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய யானைகளின் சமூக அமைப்புக்கும் ஆப்பிரிக்க யானைகளின் சமூக அமைப்புக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் கண்டறிவதில் வித்யாவின் குழு முனைப்பு காட்டிவருகிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனிப்பட்ட யானைகளுடன் ஒப்பிட்டால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய யானைகள் தங்களை எப்படி ஒருங்கிணைத்துக்கொள்கின்றன என்பதையும் இந்தக் குழு ஆய்வு செய்துவருகிறது. ஆண்டின் வெவ்வேறு பருவங்களிலும் அல்லது வெவ்வேறு ஆண்டுகளிலும் உணவு எந்த அளவுக்குக் கிடைக்கிறது என்ற அடிப்படையில் யானைகளின் சமூகங்கள் எப்படி மாற்றமடைகின்றன என்பதையும் இந்த ஆய்வு உள்ளடக்குகிறது.
இந்தத் துறையில் தனக்குக் கிடைக்கும் மனநிறைவு அலாதியானது என்று அவர் கருதுகிறார். வழக்கமாக, ஆய்வுகள், தரவுகள் சேகரிப்பது என்பது சலிப்பூட்டும் தினசரி வேலைகள் போன்றவை. காட்டுயிரியலில் அப்படியில்லை. இங்கு தரவுகள் என்பவை எண்கள் இல்லை. நேரடியாக விலங்குகளைப் பார்த்து நீங்கள் பெறும் மனப்பதிவுகள்தான். ஆக, ஒவ்வொரு தரவுக்குப் பின்னாலும் எண்ணுக்குப் பின்னாலும் பரவசம் தந்த, பதற்றம் தந்த, அழகான நிமிடங்கள் இருக்கின்றன. அவை காட்டுயிரியலின் தரவுகள். எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையை நேருக்கு நேர் எதிர்கொள்வதின் பரவசம்தான் காட்டுயிர் துறையை மேலும் அழகான தாகவும் அர்த்தபூர்வமாகவும் ஆக்குகிறது என்கிறார் வித்யா. தினமும் பார்க்கும் யானைதான் என்றாலும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையை அதனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார்.
அவருடைய ஆதர்ச நாயகர் யாரென்று கேட்டால், ஒருவரில்லை பல பேர் இருக்கிறார்கள் என்பார். ஜெரால்டு டியூரல், சாலிம் அலி, ஜேன் கூடால், டேவிட் அட்டன்பரோ போன்றவர்கள்தான் அவருடைய ஆதர்ச நாயகர்கள். கூடவே, தனக்கு ஆதரவளித்துவரும் பெற்றோர்களும் சகோதரி, சகோதரரும் தனது ஆதர்ச நாயகர்கள்தான் என்கிறார்.
‘தி இந்து’ தீபாவளி மலரில் வெளியான கட்டுரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment