Published : 27 Dec 2015 12:51 PM
Last Updated : 27 Dec 2015 12:51 PM
(தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் கவிதாவின் கதை இது. தான் கடந்துவந்த பாதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.)
ஆபரேஷனுக்குப் பிறகு இன்னும் எத்தனை நாளுக்குத்தான் வீட்லயே அடைஞ்சு கிடக்கறது? திரும்ப காலேஜுக்குப் போனா என்னன்னு தோணுச்சு. என் விருப்பத்தைக் கேட்டு அம்மா திட்டினாங்க. ‘ஒழுங்கா ரெஸ்ட் எடு. அப்புறமா வேலைக்குப் போலாம்’னு சொன்னாங்க. அவங்க அன்பு எனக்குப் புரியுது. ஆனா ஓய்வுங்கற பேர்ல இப்படி இருக்கறது என்னை நோயாளியா உணரவச்சுக்கிட்டே இருந்துச்சு. அதனால நானும் என் கணவரும் எங்க ஹெ.ஓ.டி. ரவி சாரைப் போய் பார்த்தோம். என் முடிவுக்கு அவர் ஆதரவு தந்தார். வேலைக்கு வந்தா நண்பர்களும் மாணவர்களும் என் மனநிலையில மாற்றத்தை ஏற்படுத்துவாங்கன்னு அவர் நம்பினார். அப்போதான் என் கணவருக்கும் ஒரு தெளிவு ஏற்பட்டுச்சு.
இரண்டு நாள் கழிச்சு நான் காலேஜுக்குக் கிளம்பிட்டேன். ஆபரேஷன் முடிஞ்ச சோர்வு என் முகத்துல தெரிஞ்சிருக்கும் போல. சிலர் ஏன் மேடம் ரொம்ப டல்லா இருக்கீங்கன்னு கேட்டாங்க. சின்னதா ஒரு ஆபரேஷன் நடந்துச்சுன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன். எங்க காலேஜ்ல பலருக்கும் எனக்கு என்ன பிரச்சினைன்னு தெரியாது. தெரிஞ்சா சிலர் இரக்கப்படுவாங்க, சிலர் பரிதாபப்படுவாங்க. இது என் வேதனையை அதிகரிச்சு என்னை முடக்கிப் போட்டுடும். அதனாலேயே நான் யார்கிட்டேயும் எதுவும் சொல்லலை.
என் புறத் தோற்றத்துல மாற்றத்தை ஏற்படுத்தி, என்னை ரொம்ப மகிழ்ச்சியா இருக்கற மாதிரி காட்டிக்கணும்னு நினைச்சேன். வழக்கமா நான் ரொம்ப நல்லா டிரெஸ் பண்ணிப்பேன். ஆபரேஷனுக்குப் பிறகு பளிச்னு புடவை கட்டுறது, அதுக்கு மேட்சிங்கா நகைகள் போடுறதுன்னு என்னை நானே புத்துணர்வோட வச்சிக்கிட்டேன். ‘என்ன மேடம், வாங்குற சம்பளத்தை புடவைக்கே செலவு பண்ணிடுவீங்க போல’ன்னு சில நண்பர்கள் கேலி பண்ணாங்க. பரிதாபத்தைவிட அந்தக் கேலிப் பேச்சு எனக்குப் பிடிச்சிருந்தது.
ஆபரேஷனுக்குப் பிறகு கீமோதெரபி பண்ணிக்கணுமே. அதனால காலேஜ் சேர்ந்து மூணு நாள் கழிச்சு புற்றுநோய் நிபுணர் லட்சுமி நரசிம்மன் சாரைப் போய் பார்த்தோம். அவர் ராணுவத்துல இருந்து ரிடையர் ஆனவரு. அதனாலயோ என்னவோ எப்பவுமே ரொம்ப ஸ்டிரிக்டா இருப்பார். அளந்துதான் பேசுவார், சிரிப்பார். செக்கப் முடிஞ்சதும் கீமோதெரபிக்கு ரெடியாம்மான்னு கேட்டார். எட்டு முறை எடுத்துக்கணும்னு சொன்னார். மருந்து ரொம்ப வீரியமா இருக்கும், அதனால இருபத்தியோரு நாளுக்கு ஒரு முறைதான் கீமோதெரபி இருக்கும்னு சொன்னார்.
கீமோதெரபி குடுத்தா முடி கொட்டிடும்னு டாக்டர் சொன்னதைக் கேட்டப்போ கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. சுருள் சுருளா அழகா இருக்கற கூந்தல் உதிர்ந்து, நான் மொட்டைத் தலையோடு இருக்கறதை என்னால நினைச்சுகூடப் பார்க்க முடியலை. என் மனசைப் படிச்சவர் போல, ‘நாம இன்னைக்கே போய் விக் செய்யறதுக்கு ஆர்டர் கொடுத்துட்டு வந்துடலாம்னு’ என் கணவர் சொன்னார். அதேபோல விக் செய்யற கடைக்குப் போய் என் முக அமைப்புக்கு எது பொருத்தமா இருக்கும்னு பார்த்து, அளவு கொடுத்துட்டு வந்தோம்.
இன்னைக்குதான் எனக்கு கீமோதெரபி. நானும் என் கணவரும் காலையிலேயே கிளம்பிட்டோம். கீமோ கொடுத்தா வாந்தி வரும், இருமல் வரும், தலை வலிக்கும், நகங்கள் நிறம் மாறும், சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அப்படின்னு ஏற்கனவே டாக்டர் சொல்லியிருந்தார். எதுவா இருந்தாலும் தாங்கித்தானே ஆகணும். டிரிப்ஸ்ல மருந்து கலந்து எனக்குக் கை வழியா ஏத்தினாங்க. அந்த மருந்து ரத்த சிவப்பா இருந்துச்சு. நரம்புக்குள்ளே தேள் கொட்டினா மாதிரி வலிச்சுது. என்னோட வலி வெளியே தெரியக் கூடாதுன்னு கண்ணை இறுக்கி மூடிக்கிட்டேன். இரண்டு மணி நேரம் கழிச்சு எனக்கு நாக்கு மரத்துப்போச்சு. வாயெல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு. எனக்கு ரொம்பப் பிடிச்ச இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் கொடுத்தாங்க. எல்லாமே எட்டிக்காயா கசந்துச்சு.
இரண்டு நாட்கள் கழிச்சு திங்கள்கிழமை காலையில காலேஜ் கிளம்பிட்டேன். வீட்ல எல்லாருமே என்னைப் போக வேண்டாம்னு சொன்னாங்க. நான் விடாப்பிடியா கிளம்பிட்டேன். சாப்பிட பிடிக்கவே இல்லை. அதனால ரெண்டு தோசைய டிபன் பாக்ஸ்ல போட்டு எடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன். நான் காலேஜ் போனதும் சாப்பிட்டாச்சான்னு என் கணவர் போன் பண்ணிக் கேட்டார். அவருக்காகவாவது சாப்பிடலாமேன்னு சாப்பிட்டேன். உடனே வாந்தி வந்துடுச்சு. கிட்டத்தட்ட நாலு நாளா வாந்தி இருந்துச்சு. அதைப் பார்த்துட்டு என் காலேஜ் நண்பர்கள் வீட்ல விசேஷமான்னு கேட்டாங்க. சிரிச்சுக்கிட்டே வந்துட்டேன்.
ஒரு வாரத்துல ஓரளவுக்கு நார்மலாகிட்டேன். என் அக்காதான் ரொம்ப வியந்தாங்க. உனக்கு என்ன இரும்பாலயா உடம்பு செஞ்சிருக்கு, இப்போகூட ரெஸ்ட் எடுத்துக்காம வேலைக்குப் போறியேன்னு திட்டினாங்க. என் மன உறுதியை என் கணவர் ரொம்பப் பாராட்டினார். ஆபரேஷன் பண்ணியிருந்ததால வலது கையைத் தூக்கவே முடியலை. அதுக்காகப் பாடம் நடத்தாம இருக்க முடியுமா? செமஸ்டர் வேற வரப்போகுது. என்னோட பி.எச்டி. வேலைகளும் இருக்கு. சோர்ந்து உட்கார்ந்துட்டா அதையெல்லாம் யார் பார்த்துக்கறது?
முதல் கீமோ முடிக்கறதுக் குள்ளேயே எனக்கு விக் வந்துடுச்சு. அதை அடிக்கடி போட்டு பார்ப்பேன். என் தலைக்கு அது செட் ஆகுதா இல்லையான்னு என் வீட்ல இருக்கறவங்ககிட்டே கேட்பேன். பத்து நாள் கழிச்சு தலைசீவும் போது முடி நிறைய கொட்டுற மாதிரி இருந்துச்சு. மறுநாள் காலையில தூங்கி எழுந்ததும் தலையணை முழுக்க தலைமுடி உதிர்ந்து இருந்துச்சு. தலை பாதி வழுக்கையா இருக்கற மாதிரி இருந்துச்சு. என்னால தாங்கிக்கவே முடியலை. உடைஞ்சு அழுதுட்டேன். ‘இது எதிர்பார்த்ததுதானே. எதுக்கு அழணும்? அதான் விக் இருக்கே’ன்னு என் கணவர் சமாதானப்படுத்தினார். அன்னைக்கே கோயிலுக்குப் போய் முடி எடுத்துட்டோம். ‘ஏய் நீ மொட்டையிலதான் ரொம்ப அழகாயிருக்கே’ன்னு அம்மா சொன்னாங்க. நான் உடனே ஸ்கார்ஃப் கட்டிக்கிட்டேன். ‘எப்பவும் போல இயல்பா இரு. இந்த மாதிரி பண்ணாதே’ன்னு எல்லாரும் சொன்னாங்க.
வீட்டுக்கு வந்ததும் விக் எடுத்து மாட்டிக்கிட்டேன். எனக்கே இன்னொரு கவிதாவைப் பார்க்கிற மாதிரி இருந்துச்சு. ஆனா இது மட்டுமே நிரந்தரம் இல்லையே. காலேஜ் போகும் போது கூடுதல் கவனத்தோடு டிரெஸ் பண்ணிக்கிட்டு போனேன். பஸ்ல ஏறினதுமே நிறைய மாணவர்கள் என்னைப் பார்த்து, ‘கவிதா மேம், உங்க முடி என்ன இப்படி மாறியிருக்கு?’ன்னு கேட்டாங்க. ஸ்ட்ரெயிட்னிங் பண்ணிக்கிட்டேன்னு சொன்னாங்க. ‘உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா? ஏன் இவ்ளோ அட்டூழியம் பண்றீங்க’ன்னு கிண்டல் பண்ணாங்க. நானும் அவங்களோட சேர்ந்து சிரிச்சேன்.
- மீண்டும் வருவேன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment