Published : 23 May 2021 05:50 AM
Last Updated : 23 May 2021 05:50 AM
அனைவராலும் கி.ரா. என்று அழைக்கப்படும் கரிசல் மண்ணின் புதல்வரான கி.ராஜ நாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். தேர்ந்த கதைசொல்லியான இவர் நாட்டுப்புறக் கதை வழக்குகளைத் தொகுத்து, ஒரு புதிய வழித் தடத்தைத் தமிழ் இலக்கியத்துக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்.
கி.ரா.வின் எழுத்துகளில் அவரது ஆழ்ந்த ரசனை வெளிப்பட்டிருக்கும். வாழ்க்கையில் தான் கண்ட, கேட்ட அனுபவங்களைக் கதைகளாக வடித்துத் தந்துள்ளார். இவரது கதைகள் எளிய மொழி, தெளிவான கதையாடல், இயல்பான வர்ணனைகள், சாதாரண மக்களின் வாழ்க்கை முறை, கரிசல் நிலத்து மக்களின் மண்சார்ந்த பதிவுகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும். வேளாண் சமூகத்தினரின் வாழ்வும் உழைப்பும் இழப்பும் வாழ்க்கைப் பயணங்களும் கதைகளாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
‘நாற்காலி’, ‘கதவு’, ‘வேட்டி’, ‘மின்னல்’, ‘கனிவு’, ‘ஜடாயு’ போன்ற சிறுகதைகள் சாதாரண மக்களின் வாழ்க்கையை இலக்கியமாகி அழியாநிலைப் பேற்றைப் பெற்று சிறப்பைப் பெற்றுள்ளன. ‘கொத்தை பருத்தி’ என்கிற கதை, வேளாண் தொழில் மதிப்பிழந்து, அரசு வேலை சமூக அந்தஸ்து பெற்ற கால மாற்றத்தை விவரித்துள்ளது.
பெண் எனும் பெருங்கதை
கி.ரா. எழுத்துகளில் பெண்களுக்கென்று தனி இடம் உண்டு. பெண்ணுலகு என்பது தனி உலகம். அதற்குள் நுழைந்து, அதன் மகத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துரைக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார். ‘பெண் கதைகள்’, ‘பெண் மனம்’, ‘பெண் கதை எனும் பெருங்கதை’ஆகிய நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.
அவருடைய பல சிறுகதைகள் பெண்களை மையமிட்டு எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் பல்வேறு விதமான பெண்களைப் படைத்துக் காட்டியுள்ளார். கி.ரா.வை எழுத்து உலகுக்கு அடையாளம் காட்டிய அவரது முதல் நாவலான ‘கோபல்ல கிராமம்’, ஒரு பெண்ணின் வாய்மொழியிலேயே கூறப்பட்டுள்ளது. இந்நாவலின் கதைசொல்லி, 137 வயதான மங்கத்தாயாரம்மாள்.
மனித வரலாற்றின் தொடக்கக் காலத்தில் பெண்களே இனக் குழுவின் தலைவியாக இருந்திருக்கிறார்கள். அத்தகைய இனக்குழு சமூகம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தொடர்ந்துள்ளது என்பதை அந்நாவலின் மூலம் அவர் பதிவுசெய்துள்ளார். மங்கத்தாயாரம்மாள் இன்றைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகம் வந்த கம்மவார் இனக்குழுவின் பொறுப்புமிக்க தலைவியாக விளங்கு கிறாள். அவள் கோபல்ல கிராமத்தை வழிநடத்திச் செல்லும் திறனாளி. கிராமத்து மக்களும் அவளை மதித்து அவள் வழிகாட்டுதலை ஏற்று வாழ்கின்றனர் என்பதாக அவர் படைத்துக் காட்டியுள்ளார்.
கி.ரா. பெண்கள் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவர். மனிதர்கள் மனிதக் கறியைச் சாப்பிடுபவர்களாக மாறாததற்குப் பெண்கள்தாம் காரணம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். “நல்ல நல்ல பெண்களுடைய வாழ்நாளெல்லாம் வீண் நாளாகப் போவதற்கு ஜாதகம் பொருந்தவில்லை, அந்த தோஷம் இந்த தோஷம், வீட்டுப் பெயர் ஒத்துவரவில்லை - இப்படித்தான் ஆயிரம் காரணங்கள் கூறப்படு கின்றன” என்று தன் எழுத்தில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
பெண்களின் அந்தரங்க வெளி
கி.ரா. பெண்களின் அறிவையும் அனுபவத்தை யும் பல இடங்களில் போற்றி எழுதியுள்ளார். “பாட்டி வைத்தியம் என்றுதான் உண்டு. தாத்தா வைத்தியம் என்று கிடையாது. பெண்ணிடத்திலிருந்து வளர்ந்ததுதான் எல்லாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளது நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையையும் எடுத்துரைக்கிறது.
பெண்கள் தங்களுக்கென்று ஒரு ‘அந்தரங்க வெளி’ இல்லாமல் வாழ்ந்துள்ளனர். அந்த அந்தரங்க வெளியை உண்டாக்கத் தொடங்கியதுதான் செவ்வாய்க்கிழமை விரதம். ஆண்கள் நுழைய முடியாத உலகம் அது. ஆண்கள் வந்தால் அவர்கள் ‘கண்ணவிஞ்சி போய்விடும்' என்கிற பயமுறுத்தலோடு, செவ்வாய்க்கிழமை இரவு அவ்விரதம் மேற்கொள்ளப்படும். ‘ஒடுக்கப்பட்ட பெண்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட கமுக்கங்கள் இப்படி எத்தனை எத்தனையோ’ என்று கி.ரா. எடுத்துரைத்துள்ளார்.
அவருடைய ‘கன்னிமை’ கதையில் வரும் நாச்சியார், ‘கிடை’ குறுநாவலில் வரும் செவனி, ‘கோமதி’ என்கிற சிறுகதையில் வரும் திருநங்கையான கோமதி இவர்களெல்லாம் அவர் செதுக்கிய அழியாச்சுடர்கள்.
தாய் வீட்டில் நாச்சியார் கன்னிப் பெண்ணாக இருந்தபோது தாய்மையின் வடிவாக நின்று, இல்லத்துக்கு வரும் ஒவ்வொரு மனிதரையும் உபசரிக்கிறாள். அவர்களுக்குப் பிடித்த உணவைச் சமைத்துப் பரிமாறுகிறாள். எல்லோரிடமும் ஒரே விதமாக அன்பு பாராட்டுகிறாள். அவளே திருமணம் செய்துகொண்டு போன பின்பு, தன் அன்பைத் தன் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கென்று குறுக்கிக்கொண்டு விடுகிறாள். கன்னித்தாய் என்பதற்கு இக்கதை ஒரு புதுப் பொருள் தந்துள்ளது. குமரிமுனையில் கன்னியாக நின்று உலகை ஆள்பவளை இந்த அடிப்படையில்தான் பார்க்க வேண்டுமென்று, ஒரு புது அர்த்தத்தை இக்கதையில் தந்துள்ளார் கி. ரா.
பெண்களை ஒடுக்கும் சாதியம்
‘கிடை’ குறுநாவலில் வரும் செவனி, ஒடுக்கப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள், மாடு மேய்ப்பவள். மேல் சாதியைச் சேர்ந்த கீதாரி எல்லப்பனுக்கும் அவளுக்கும் ஏற்பட்ட காதல், சாதிக் கலவரத்தில் முடிந்துவிடும் என்பதால், ஊர்ப் பொது ஆளான திம்மநாயக்கன், தங்கள் சாதி வழக்கப்படி அவனுக்கு இருதாரம் கட்டிவைக்கிறார். ஆண் என்றால் அவனுக்கு ஒரே மேடையில், பூப்பெய்திய பெண் ஒருத்தி, பூப்படையாத பெண் ஒருத்தி எனக் கட்டி வைத்து அழகு பார்க்கின்றனர். ஆனால், ஒடுக்கப்பட்ட சாதி என்கிற ஒரே காரணத்துக்காக மறுக்கப்பட்ட செவனி பித்துப் பிடித்து அலைய, அவளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கூறி, அவளைச் சாட்டையால் அடித்துத் துன்புறுத்து கின்றனர். சாதியம் பெண்களின் வாழ்க்கையில் கடக்க முடியாத கடலாக முன் நிற்கிறது என்று கி.ரா. எடுத்துக்காட்டியுள்ளார்.
திருநங்கையரின் உலகம்
1964-ல் எழுதப்பட்ட ‘கோமதி’ என்கிற சிறுகதை, திருநங்கை பற்றி எழுதிப்பட்ட முதல் கதை எனலாம். ஆணாகப் பிறந்து, பெண்ணாகத் தன்னை உருவகித்துக்கொண்டு வாழ்ந்த திருநங்கையின் உடல் - உளப் பாதிப்புகளை மிக அருமையாக இக்கதையில் முன்வைத்துள்ளார். இவ்வாறு பெண்களின் மீது சாதி, இனம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் சுமத்தப்பட்ட கொடுமைகளைத் தன் படைப்புகளின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார்.
ஆண், பெண் உறவு பற்றி ‘அண்டரெண்டப்பட்சி’ என்கிற நூலில் எழுதியுள்ளார். ஆண், பெண் உறவு குறித்து வெட்கப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், அந்தக் கல்வி வயது வந்தவர்களுக்கு அவசியம்தானே என்கிறார். நாட்டுப்புறப் பாலியல் கதைகளைத் தொகுத்து, ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்கிற பெயரில் வெளியிட்டுள்ளார். பெண் சார்ந்த தொன்மக் கதையாடல்களைத் தம் கதையாக்கங்களின் இடையே எடுத்தாண்டு, அவற்றுக்குச் சாகாவரம் தந்துள்ளார்.
கி.ரா.வின் பெண்ணுலகம், புனையப்பட்ட உலகம் அன்று; நடப்பைக் காட்சிப்படுத்தும் உலகம் அது. அவ்வுலகில் ஆணாதிக்க அதிகார நோக்கமோ சொல்லாடல்களோ இல்லை. உண்மையான தோழமை உணர்வுடன் எழுதப்பட்ட எதார்த்த உலகம் அது!
கட்டுரையாளர், பேராசிரியர்
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT