Published : 14 Dec 2015 10:16 AM
Last Updated : 14 Dec 2015 10:16 AM

அடைமழை வரும்; அதை வெல்வோம்

l இது அடைமழைக்காலம் மட்டுமல்ல, அடாத மழைக் காலம். ஏற்கெனவே சளி, ஆஸ்துமா தொல்லையால் பாதிப்புக்குள்ளானவர்களை இந்த மழைக் காலம் மேலும் படுத்தியெடுக்கும். ஆரோக்கியம் தரும் அருமருந்துகள் வீட்டில் இருக்கும்போது வேறென்ன கவலை?

l தூதுவளை, துளசி, வில்வம், கண்டங்கத்திரி, ஆடு தொடா பொடிகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். காலை, மாலை இரண்டு வேளையும் தண்ணீரில் ஒவ்வொரு டீஸ்பூன் போட்டுக் குடித்துவந்தால், வீசிங் தொல்லை இருக்காது. அதோடு தூதுவளை, முசுமுசுக்கை கீரைகளில் சட்னி செய்து சாப்பிடலாம்.

l குழந்தைகள், வயதானவர்கள் மட்டுமல்ல... இந்த மழைக் காலத்தில் அனைவருக்கும் சளி, இருமல் தொந்தரவு ஏற்படலாம். நாம் சாப்பிடும் உணவிலேயே சில மாறுதல்கள் செய்தாலே போதும். மழைக் காலத்தில் கண்டங்கத்திரிக்காயில் புளிக் குழம்பு செய்து சாப்பிடலாம். முசுமுசுக்கை ரசம் வைத்துச் சாப்பிடலாம். இவை சுவையாகவும் இருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

l சிலருக்கு நெஞ்சில் கபம் நிரந்தரமாக இருக்கும். அவர்கள் மழைக்காலத்தில் இனிப்பு சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டு, இரவு பால் சாப்பிடும்போது அதில் விரலி மஞ்சள் பொடியும், சிறிது குறுமிளகுத் தூளையும் கலந்து குடித்துவந்தால், நெஞ்சில் இருக்கும் கபம் குறைந்துவிடும்.

l சிலருக்கு அடிக்கடி வறட்டு இருமல் வந்து தொல்லை கொடுக்கும். அவர்கள் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் சிறிது தேனில் கலந்து சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

l மழைக்காலத்தில் வாரம் இரு முறை கொள்ளு ரசம் வைத்து சூப் போல் குடிக்கலாம்.

l தொடர்ந்து தண்ணீரில் கால் வைத்துக்கொண்டே இருந்தால் சிலருக்குச் சேற்றுப் புண் வந்துவிடும். சிறிது வேப்ப எண்ணெயைச் சூடாக்கி சுத்தமான மஞ்சள் தூளை அதில் கலந்து கால் விரல் இடுக்குகளில் தடவி வர, சேற்றுப் புண் விரைவில் குணமாகும்.

- சுமதி ரகுநாதன், கோவை- 36.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x