Published : 09 Jun 2014 11:31 AM
Last Updated : 09 Jun 2014 11:31 AM
விபத்தில் உயிரிழந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் இறுதிச் சடங்கை அவருடைய மூத்த மகளும் அரசியல் வாரிசுமான பங்கஜா முண்டே நிறைவேற்றினார். பொதுவாக நம் இந்திய சமூகத்தில் இதுபோன்ற இறுதிச் சடங்குகளை குடும்பத்தில் உள்ள ஆண்களே நிறைவேற்றுவர். பொதுமக்கள் முன்னிலையில் பங்கஜா முண்டே தன் தந்தையின் ஈமச் சடங்குகளைச் செய்தது, ஆண்-பெண் சமத்துவமின்மைக்குப் பெரும் அடியாக இருந்தது. பங்கஜா, எம்.எல்.ஏ-வாகவும், அரசியல் செல்வாக்குடனும் இருப்பதால்தான் அவருக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமை வழங்கப்பட்டதா? சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் பெண்களும் இதேபோல தன் பெற்றோருக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமையைப் பெற்றிருக்கிறார்களா?
ஒரு பெண், தன் தந்தைக்கு இறுதிச் சடங்கைச் செய்தது இதுதான் முதல் முறை என்று சொல்ல முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும் இன்றும் அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இறுதிச் சடங்கில் பெண்கள் கலந்துகொள்ளக் கூடாது, மயானம் வரை வரக்கூடாது போன்ற சம்பிரதாயங்கள் இப்போதும் கடைபிடிக்கப்பட்டுத்தான் வருகின்றன.
பெண்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்காமல் தடுக்கப்படுவதற்கு சடங்கு, சம்பிரதாயம் எனப் பல காரணங்கள் அடுக்கப் பட்டாலும், சொத்துரிமை என்பதும் முக்கியக் காரணமாக இருக்கிறது. இறுதிச் சடங்கை நிறைவேற்றுவதால் எங்கே பெண்ணுக்குச் சொத்து சேர்ந்துவிடுமோ என்ற பயத்தாலேயே பெண்களுக்கு இறுதிச் சடங்கில் அனுமதி இல்லை.
தற்போது பெருநகரங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் பெற்றோர்கள் பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுக்கு நிகராக வளர்த்து வருகின்றனர். கல்வி, கலை, விளையாட்டு என அனைத்திலும் பெண்கள் தேர்ச்சி பெறுகின்றனர். அப்படியிருந்தும் ஒரு குடும்பத்தில் ஒரே மகளாகப் பிறந்து தன் பெற்றோரைக் காப்பாற்றுகிற வாய்ப்பு எத்தனை பெண்களுக்குக் கிடைக்கும்? திருமணம் முடிந்து வேறு வீட்டுப் பெண் ஆகிவிட்டால், தன் பிறந்த வீட்டில் நடக்கும் இறுதிச் சடங்கில் பங்கேற்கக்கூடாதா? வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புள்ள ஒரு பெண், தன் பெற்றோரின் இறுதிச் சடங்குகளை உறவுக்கார ஆண் ஒருவர் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வாள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT