Last Updated : 07 Dec, 2015 11:14 AM

 

Published : 07 Dec 2015 11:14 AM
Last Updated : 07 Dec 2015 11:14 AM

பெண் எழுத்து: சுமையோடு ஓடும் ஓட்டம்!

பெண்களுக்கான விழிப்புணர்வுத் தொடர்களும், தன்னம்பிக்கை கட்டுரைகளும் அவ்வப்போது வெகுஜனப் பத்திரிகைகளில் வாசிக்கக் கிடைக்கின்றன. அந்த வகையில் மங்கையர் மலரில் வெளிவந்த பாரதி பாஸ்கரின் தொடர் முக்கியமான ஒன்று.

பன்னாட்டு வங்கிப் பணி, பட்டிமன்ற உரைகள், குடும்பப் பொறுப்புகள் என்று அத்தனைக்கும் ஈடுகொடுத்துக்கொண்டிருக்கும் பாரதி பாஸ்கருக்கு எழுத்தாளர் என்ற ஒரு பரிமாணத்தை ஈட்டித்தந்திருக்கும் தொடர், புத்தக வடிவம் பெற்று வெளிவந்திருக்கிறது.

சுற்றி நடக்கும் நிகழ்வுகளுடன் தான் படித்தறிந்த தகவல்களைச் சேர்த்து, சொந்த அனுபவத்தையும் அவ்வப்போது தொட்டுக்கொண்டு கோவையாக எழுதும் ஆற்றல் பாரதிக்கு வாய்த்திருக்கிறது. அவரது பேச்சும் குரலும் வெகு பிரபலம் என்பதால் அவர் பேசுவதைக் கேட்பதைப் போலவே வாசிப்பு அனுபவமும் இருக்கிறது.

நிர்பயா சம்பவத்திலிருந்து தொடங்குகிறார் பாரதி. அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டு சமூகப் பிரக்ஞை சிறிதும் இல்லாமல் வளையவரும் பெண்களைச் சாடும் அதே வேகத்தில் பாலியல் குற்றங்களுக்குப் பெண்களின் ஆடையை மட்டும் காரணம் காட்டுவது அபத்தம் என்கிறார்.

நடுத்தர வர்க்கத்து அம்மாக்களின் போராட்டத்தையும், அவர்கள் சந்திக்கும் அவமரியாதையையும் குறித்து நிறையச் சொல்கிறார் பாரதி. அன்று முதல் இன்று வரை வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் பெண்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்டுரை முதிய வயதில் நிராகரிக்கப்படும் பெண்களைப் பற்றியது. அந்த நிலைமையிலும் விதிக்கப்பட்டதை முகம் சுளிக்காமல் ஏற்று வாழும் பெண்கள் எத்தனையோ பேர். “பேரப் பிள்ளைகள் சூழ வாழும் வாழ்வோ, முதியோர் இல்ல நண்பர்களுடன் தள்ளும் பொழுதோ எது விதிக்கப்பட்டதோ அதை ஏற்று மீதமிருக்கும் ருசிகளுக்காக, பார்க்க வேண்டிய மலர்களுக்காக, சிந்த வேண்டிய புன்னகைக்காக, வடிக்க வேண்டிய கண்ணீருக்காக வாழ்வை அதன் தீரத்துடனும் அன்புடனும் எதிர்கொள்ளும் இந்த முதுமைக்கு முன் கைகுவிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?”

விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்குச் சென்று கூட்டுக்குடும்ப வாழ்வின் சுகத்தை அனுபவித்த தலைமுறையைச் சேர்ந்தவர் பாரதி. அநேகமாகக் கடைசித் தலைமுறையாகவும் இருந்திருக்கலாம். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகள் அனுபவித்த கதகதப்பின் மையமாக லட்சுமி அத்தையைப் போல் பெருந்தன்மையான சில பெண்கள் இயங்கிக்கொண்டிருந்ததை நினைவுகூர்கிறார். இன்றைய குழந்தைகளுக்குத்தான் எத்தனை பெரிய இழப்பு? நான் மட்டுமே என்ற மனப்பான்மையுடன் வளர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டார்களே என்ற ஆதங்கம்தான் மிஞ்சுகிறது.

“குடும்பம் எனும் பாற்கடலில் உறவுகளின் உரசல்களால் ஊறும் விஷத்தை எல்லாம் தன் நெஞ்சுள் தேக்கி, மன்னிப்பு என்ற அமுதத்தால் குடும்ப உறவுகளை நிரந்தரமாக்கிய நூறு நூறு லஷ்மிகளின் வாழ்க்கை, தடுமாறும் நம் பயணத்தில் வழிகாட்டும் ஒளிக்கீற்று!” என்ற பாரதியின் வரிகள் லா.ச.ராவின் ‘பாற்கடல்’ சிறுகதையை நினைவூட்டுகின்றன.

பெண் என்பவள் தன் மீது இயற்கை சுமத்தும் பிரத்யேக வலிகளோடும், சமூகம் சுமத்தும் அபவாதங்களோடும், வீடு சுமத்தும் கூடுதல் பொறுப்புகளோடும்தான் முன்னேற வேண்டியிருக்கிறது. “சுமையின்றி ஓடும் ஆண் முயலுக்கும், முதுகில் ஓட்டைச் சுமந்து நகரும் பெண் ஆமைக்குமான விசித்திரமான போட்டி இது” என்கிறார் பாரதி.

பெண்ணுக்குள்ளே எத்தனை படிமங்கள்! அவள் ஆதித்தாய்! அகிலத்துக்கெல்லாம் கருணை சுரக்கும் கனிவின் பிம்பம். உறவின் உக்கிரங்களையெல்லாம் பொறுமையோடு தாங்கிக் குடும்பங்களைக் கொண்டுசெலுத்தும் அன்பின் ஸ்வரூபம். ஆனால், அவளேதான் வெறிகொண்ட உக்கிரக் காளி.

மகாபாரத பாஞ்சாலியைப் பற்றிய கட்டுரை மிக ஆழமான ஒன்று. “நெருப்பில் பிறந்த அவளின் வாழ்க்கை நெருப்பாற்றில் நீந்திக் கழிந்தது. பாஞ்சாலத்திற்கும் அஸ்தினாபுரத்திற்கும் இந்திரப் பிரஸ்தத்திற்கும், காட்டுக்கும், போர் நடந்த குருஷேத்திரத்திற்கும் பாதை தேயப் பயணம் செய்த இந்தப் பயணியின் கால்களுக்கு முன்னே முட்களைத் தூவிச் சிரித்தது காலம். அதனால்தானோ என்னவோ எந்த உத்திரவாதமும், பாதுகாப்பும் இல்லாத எளிய மக்களின் தெய்வமாக அவள் இருக்கிறாள்” என்று வியக்கிறார் பாரதி.

ஆட்டிஸக் குழந்தைகளின் அம்மாக்களைக் குறித்தும் ஒரு கட்டுரை. பதின் வயதில் இருக்கும் ஆட்டிஸ மகள் ஒருத்தி வயதுக்குரிய உந்துதலால் இளைஞன் ஒருவனின் கையில் முத்தமிட்டுவிடுகிறாள். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் தாய் தன் கருணை மிகுந்த கண்களால் மகளைக் கட்டுப்படுத்தி அந்த இளைஞனிடம் மன்னிப்பு கேட்கிறாள். “எல்லோரையும் போல் இவங்களுக்கும் சில தேவைகள் இருக்கத்தானே செய்யும். எங்க மாதிரி அம்மாக்கள் கொஞ்சம் கஷ்டப்படுகிற இடம் இது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடமும் இதுதான்” என்று அந்தத் தாய் கூறியதான பாரதியின் பதிவு நெகிழ்ச்சியானது.

பெண்களுக்கும் சமையலுக்குமான தொடர்பை விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறார் பாரதி. இந்த வேலை சுமை என்பது எத்தனை உண்மையோ அந்தச் சுமையைப் பெண் இழக்க விரும்புவதில்லை என்பதும் ஒரு சுவாரசியமான மனோதத்துவ உண்மை என்று உறுதி செய்தவாரே கரண்டிகள் கைமாறும் பொற்காலத்தையும் கனவு காண்கிறார்.

விளையாட்டுத் துறை, கர்நாடக இசைத் துறை, கிராமப்புறக் கலைகள் என்று ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்கள் முதல் அடியை எடுத்து வைத்த நாட்களையும் எதிர்கொண்ட சவால்களையும் விவரிக்கிறார் பாரதி.

நெருடலாக இருந்த ஒரே விஷயம் “சாவித்திரி எனும் குண்டம்மா” என்ற தலைப்பு. தன் உடல் பருமன் காரணமாக அன்றாடம் எதிர்கொள்ளும் கேலி, கிண்டல்களைப் புறந்தள்ளிவிட்டுக் குடும்பத்துக்காக உழைக்கும் ஒரு பெண்ணைப் பாராட்டுகிறார் பாரதி. பெருத்த உடல் மட்டுமே தனது அடையாளமல்ல என்று நிறுவிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அதே அடையாளத்தைத் திணிப்பது நியாயம்தானா என்ற கேள்வி எழுகிறது.

ஒவ்வொரு கட்டுரையிலும், போராடி வெற்றி கொண்ட சாதனை பெண்களைப் பற்றி புதிய தகவல்களையும், புதிய கோணங்களையும் முன்வைப்பது புத்தகத்தின் மதிப்பை உயர்த்துகிறது. பார்வதி கிருஷ்ணன், சாந்தி ரங்கநாதன், அர்ச்சனா குமாரி, மீனாட்சி அம்மாள், பில்லி ஜீன் கிங், சோம்லே மாம், ஆர்.சூடாமணி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பூனம் நடராஜன், ஐடா ஸ்கடர், அருந்ததி பட்டாச்சார்யா, ஔவையார் என்று வேறு வேறு தளத்தில் இயங்கிய முன்னோடிப் பெண்களின் அனுபவங்களை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் பாரதி.

விளம்பரங்களிலும் சினிமாக்களிலும் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் குறித்தும் விவாதிக்கிறார். எளிமையான வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தில் எந்த வித பிரச்சார தொனியோ முழக்கமோ இல்லை என்பதே இதன் தனிச்சிறப்பு.

சில பாதைகள்… சில பயணங்கள்

பாரதி பாஸ்கர், விலை: ரூ. 90

வெளியீடு: கவிதா பதிப்பகம், சென்னை-17.

தொலைபேசி: 044-2436 4243. மின்னஞ்சல்: kavitha_publication@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x