Published : 07 Dec 2015 10:48 AM
Last Updated : 07 Dec 2015 10:48 AM
இசை, எழுத்து, ஆய்வு எனப் பல ஆளுமைகளைக் கொண்ட கர்னாடக இசைப் பாடகர் மும்பையைச் சேர்ந்த டாக்டர் வசுமதி பத்ரிநாத். இவருடைய தாய் பத்மா சேஷாத்ரியே இவரின் முதல் குரு. பின்னாளில் டி.ஆர். பாலாமணியிடமும் இசையின் நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார். கர்னாடக இசைப் பாடகராக மட்டும் தன்னுடைய எல்லையைக் குறுக்கிக்கொள்ளாமல், இசை சார்ந்த பல தேடல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலம் பல பங்களிப்புகளை இசைத் துறைக்கு அவர் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்ற வசுமதி, பிரெஞ்சு மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர்
இந்திய இசை வடிவங்கள் குறித்து ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உலகின் பல பகுதிகளிலிருந்து வெளிவரும் இதழ்களில் எழுதியிருப் பவர் இவர். ‘ஏசியன் ஏஜ் நியூஸ்’ நாளிதழில் இவர் எழுதும் இசைப் பத்திகள் புகழ் பெற்றவை.
ஆண்டாள் போன்று புகழ்பெற்ற பெண் சாகித்ய கர்த்தாக்களின் பாடல்களைக் கொண்டே ‘ஸ்த்ரீ கானம்’ என்னும் நிகழ்ச்சியை நடத்தினார். அதில் இந்த நூற்றாண்டின் பெண் சாகித்ய கர்த்தாக்களான அம்புஜம் கிருஷ்ணா, மங்களம் கணபதி ஆகியோரின் பாடல்கள் இடம்பெற்றன.
இசையில் தேடல்
ஆழ்வார்களால் எழுதப்பட்ட திவ்யப் பிரபந்தந்தின் பாடல்களைக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தார். கர்னாடக இசை மேடையில் பாடப்படும் பாடல்களுக்கும் பரதநாட்டியத்துக்காகப் பாடப்படும் பாடல்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை விளக்கி இவர் நடத்திய ஒரு நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. பல இசைக் கலைஞர்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் விவாதி ராகங்களைக் கொண்டே முழுக்க முழுக்க ஒரு நிகழ்ச்சியை நடத்திய பெருமைக்கு உரியவர் வசுமதி.
அசர்பைஜானுக்குச் சென்ற முதல் இந்தியர்
உள்ளூர் மேடைகளில் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த இவரை, மார்ச் 2009-ம் ஆண்டு, அசர்பைஜான் நாட்டின் குடியரசுத் தலைவர், அந்நாட்டில் நடைபெறும் சர்வதேச ‘முகம்’ இசைத் திருவிழாவில் பங்கெடுக்க அழைத்தார். அந்த நாட்டின் இசைக்குப் பெயர் ‘முகம்’. அசர்பைஜான் நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியர், தமிழர் என்ற பெருமையோடு இந்தியாவிலிருந்து சென்ற அவருக்கு, அசர்பைஜானில் சிவப்புக் கம்பள மரியாதை அளிக்கப்பட்டது. பல நாட்டு இசைக் கலைஞர்கள் பங்கெடுத்த அந்தத் திருவிழாவில் வசுமதி பத்ரிநாத்தின் கர்னாடக இசைக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அந்த நாட்டின் திருவிழாவுக்கு வசுமதி சென்றதில் அவருக்கும் ‘முகம்’ இசையை இசைத்த கலைஞர் ஷகினா இஸ்மை லோவாவுக்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டது. இந்தப் புரிதல், இரண்டு நாட்டின் இசையையும் இணைத்து ‘முராகம்’ என்னும் தலைப்பில் ஓர் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்குக் காரணமானது.
துபாயில் மகாத்மர்ப்பன்
துபாய் இந்திய தூதரகத்தின் அழைப்பை ஏற்று மகாத்மர்ப்பன் என்னும் நிகழ்ச்சியை நடத்தினார். மகாகவி பாரதியாரின் காந்தி பஞ்சகத்திலிருந்து சில பாடல்களையும் இந்தி பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் பாடினார்.
ஃபுல்பிரைட் நிதியுதவி
தற்போது வசுமதி பத்ரிநாத்துக்கு அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற ஃபுல்பிரைட் நிதியுதவி அந்நாட்டில் அவரின் இசைப் பணிகளுக்காக கிடைத்துள்ளது. புளோரிடாவின் செயின்ட் லியோ பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக உள்ளார். அங்கு ‘கன்ஸர்டோ சங்கீதம்’ என்னும் பெயரில் கிழக்கத்திய இசையையும் மேற்கத்திய இசையையும் சங்கமிக்கவைக்கும் நிகழ்ச்சிகளை அமெரிக்காவின் புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களில் நடத்தி வருகிறார். பாஸ்டனில் இருக்கும் வெல்ஸ்லி கல்லூரியில் (Shree Feminine & Divine) என்னும் பெயரில் நவராத்திரி விழாவையும் நடத்தியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT