Published : 27 Dec 2015 12:33 PM
Last Updated : 27 Dec 2015 12:33 PM
நம் நாட்டில் பல பெண்கள் பிரச்சினை என்று வந்துவிட்டால் போதும், தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். இப்படி அவர்கள் செய்வதால் மட்டும் மாற்றம் நிகழ்ந்துவிடுகிறதா என்ன? மாற்றம் நிகழாததுடன் அவர்களுடைய பிரச்சினைகள் அதிகமாவதுதானே இங்கே நிதர்சனம்?
என்னுடைய தோழி ஒருத்தி ஒரு நாள் மிகவும் வாடிப்போய் என் வீட்டுக்கு வந்தார். இரண்டு நாட்களாகச் சாப்பிடாததுதான் அந்த முக வாட்டத்துக்குக் காரணம் என்பதை அறிந்தபோது உண்மையிலேயே எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. தனது தங்கை திருமணத்துக்கு வர மறுத்த தன் கணவரை எதிர்த்து சத்தியாகிரகம் பண்ணிக்கொண்டிருப்பதாக என்னிடம் சொன்னார். கணவர் வராவிட்டால் சங்கடமாகத்தான் இருக்கும்.ஆனால் அதற்காக இருக்கிற துன்பம் போதாதென்று உடல்நலக் குறைவு என்ற இன்னொரு துயரத்தையும் இழுத்து வைத்துக்கொள்ள வேண்டுமா என்ன? மனசு பொறுக்க மாட்டாமல் என்னால் முடிந்த அளவு அறிவுரை சொல்லி அனுப்பினேன். ஆனால் அத்தனையும் காற்றில் கரைந்த கற்பூரமானது. தன் உண்ணாவிரதப் போராட்டத்தை நீடித்த தோழியின் உடல்நிலை மோசமாக, கடைசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்கையின் திருமண நாளன்றும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தார். உடல்நிலை மோசமாகி, மனம் இன்னும் பாதிக்கப்பட்டு வேதனை அதிகமானதுதான் மிச்சம்.
எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண், தன் உறவுக்காரப் பெண் ஒருவரை அழைத்துவந்திருந்தார். சுமார் இருபது வயதேயான அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்தன. வேலை முடிந்ததும் இருவருக்கும் காபி போட்டுக் கொடுத்தேன். ஆவலுடன் வாங்கிய அந்த இளம்பெண், வாயில் காபியை ஊற்றியதும் முகம் அஷ்டகோணலாக மாறியது. அத்தனை மோசமாகவா இருக்கிறது நான் போட்ட காபி என்று யோசித்துக்கொண்டே காபியில் சர்க்கரை சரியாக இருக்கிறதா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டேன். என் கேள்விக்குப் பதிலே இல்லை. அந்தப் பெண்ணின் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
பிறகு என் வீட்டில் வேலை செய்யும் பெண்ணே நிலைமையை விளக்கினார். கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் அந்தப் பெண் ஆசிட்டைக் குடித்துவிட்டாளாம். சிகிச்சை எடுத்த பிறகும் வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கிறாள். ‘கோபத்துல ஏதோ தெரியாத்தனமா குடிச்சிட்டேம்மா. இப்ப சாப்பிட முடியல, எதையும் குடிக்கக்கூட முடியலம்மா. தெனம் தெனம் நரக வேதனைதான். ஏன்தான் அப்பிடி செஞ்சேனோ?’ என்று அந்தப் பெண் சொல்லும்போதே வேதனையாக இருந்தது.
அழகின் உறைவிடமாக இருந்த என் உறவுக்கார அக்கா ஒருவர், கணவர் சந்தேகப்படுகிறார் என்ற வருத்தத்தில் உடல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுக்க மாட்டேன் என்று தகராறு பண்ணி இப்போது பிறர் தயவின்றி எந்த வேலையையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்.
பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எங்கள் வீட்டுக்குக் குடி வந்த அக்காவும் அப்படித்தான். மாமியாருடன் ஏற்பட்ட சண்டையால் விஷம் குடித்து சாவின் வாசல்வரை எட்டிப் பார்த்துவிட்டு வந்திருந்தார். அந்த நொடியில் ஏற்பட்ட மரண பயமே அவருக்கு வாழ்வின் மீது அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தியதை அவர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.
நாம் அனைவரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, நமக்கு நாமே தண்டனை கொடுத்துக்கொள்வது ஏற்புடையதல்ல. பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் தப்பி ஓடுவதால் எந்தப் பலனும் வரப் போவதில்லை. துணிந்து நின்றாலே துயரம் விலகும்.
- ஜே. லூர்து, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment