Published : 06 Dec 2015 02:42 PM
Last Updated : 06 Dec 2015 02:42 PM

இயற்கைப் பேரிடர்களும் பெண்களின் துயரங்களும்

கடந்த வார ஆரம்பத்தில் சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கிண்டலாக இப்படிச் சொன்னார் - சென்னை மக்கள் இப்போதெல்லாம் பைப்பில் தண்ணீர் வந்தால்கூட பயந்துதான்போகிறார்கள் என்று. அவர் அப்படிச் சொன்னதற்கு முன்பாக அடைமழை சென்னையில் இரண்டு முறை தலைகாட்டிவிட்டுச் சென்றிருந்தது. ஆனால், அந்தக் கிண்டலை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு மிரட்டியிருக்கிறது டிசம்பர் முதல் வாரம் பெய்த மழை.

மழையின் நாதம் இனிமையான கிங்கிணிச் சத்தங்களுடன் ஒப்பிடுவதெல்லாம் சென்னைவாசிகளுக்கு இப்போது எரிச்சலையே ஏற்படுத்துகிறது. மழையின் தூறல் ஒலி ஆரம்பித்தவுடன் அவர்களுடைய மனதில் பற்றிக்கொள்ளும் பதற்றம், நேரம் ஆக ஆக மழையின் சத்தம் வலுப்பதைப் போலவே வலுத்து முடிவில்லாமல் நீள்கிறது.

அடைமழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் பொதுவாகவே எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள் என்றபோதும், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வழக்கம் போலவே பெண்களும் குழந்தைகளும்தான். காரணம், ஒவ்வொரு பெண்ணும் தன்னைவிடவும் தன் குழந்தை, குடும்பம், அதன் உறுப்பினர்களை தார்மீகமாக தூக்கிச் சுமப்பதும், பாதுகாத்துவருவதுமே.

சென்னையை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் அடைமழை-வெள்ளம் மட்டுமின்றி, உலகில் நிகழும் பெரும்பாலான இயற்கைச் சீற்றங்களில் கடுமையாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. காலம்காலமாகப் பெண்களுக்கு சமஉரிமைகள் மறுக்கப்பட்டுவந்துள்ளன. இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களிலும் அது கடுமையாக எதிரொலிக்கிறது. நம்மூரில் பெரும்பாலான குடும்பங்களுக்கு பொருளாதாரத் தூணாக இருந்து காப்பாற்றுகிறவர் ஆண் என்ற நம்பிக்கை உள்ளது.

நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி பெண்கள் பரவலாக வேலைக்குச் செல்கிறார்கள். அது மேல்தட்டு வர்க்கம், நடுத்தர வர்க்கம், அடித்தட்டு வர்க்கம் என எதுவென்றாலும் சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்று வீட்டு வேலையை முடித்துவிட்டு, வெளி வேலைக்குச் செல்கிறார்கள். அப்போதுதான் குடும்ப பாரத்தை சமாளிக்க முடியும் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

அப்படியே வெளி வேலைக்குச் செல்லாத இல்லத்தரசிகள், பணத்தைக் கொண்டுவரவில்லையே தவிர, வீட்டு வேலைகள், குடும்ப வேலைகள் என்று அவர்கள் ஈடுபடும் வேலையைக் கணக்கிட்டால், அவற்றுக்குக் கொடுக்கத் தேவைப்படும் சம்பளம் குறிப்பிடத்தக்க அளவு இருக்கும்.

அது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்துக்குத் தேவையான நல்ல தண்ணீர் முதல், காய்கறி, தானியங்கள், சமையல் போன்ற பல்வேறு விஷயங்களுக்குத் தேவையான வளங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி வருவது, எடுத்து வருவது பெண்களின் வேலையாக இருக்கிறது.

வரலாற்றுரீதியில் தங்கள் குழந்தைகளையும் குடும்பங்களையும் உடல்ரீதியிலும், உணர்வுரீதியிலும் எப்படி வளர்க்கப் பாடுபட்டோர்களோ, அதேபோலவே இன்றைக்கும் பெண்கள் பாடுபடுகிறார்கள். வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது நமக்கு நல்ல தண்ணீர் கிடைக்காததை,

மாநகராட்சிக் குழாய்களில் தண்ணீர் வராததை வெறும் மாநகராட்சிப் பிரச்சினையாகவே பார்க்கிறோம். ஆனால், மற்ற நாட்களில் அடி பம்பிலோ, லாரியிலோ தண்ணீரைப் பிடித்து வீட்டுக்கு எடுத்து வரும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களுடையதாகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

அதேபோல உணவு, பால், சமைப்பதற்கான விறகு சேகரிப்பு, அடுப்பு போன்றவற்றை இன்றைக்கும் பெண்களே பெருமளவு கையாள்கிறார்கள். வெள்ள நேரத்தில் வீட்டுக்குள்ளும் வெளியிலும் தண்ணீர் புகுந்துவிட்டதை ஒரு நகரமைப்புப் பிரச்சினையாகப் பார்க்கிறோம்.

இயற்கைச் சீற்றங்கள் அனைத்தும் பெண்களின் வேலைகளைக் கடுமையாக்குகின்றன, மோசமடையச் செய்கின்றன என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், வீட்டுக்கு வரும் பால் முதல் உணவுப் பொருட்கள்வரை அனைத்தையும் நிர்வகிப்பவள் பெண்தான்.

அதேபோல இயற்கைச் சீற்றங்கள் குறித்த உடனடித் தகவல்கள் பெரும்பாலும் ஆண்களுக்கே தெரிந்திருக்கின்றன. தற்போதைய வெள்ளத்திலும்கூட வாட்ஸ்ஆப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பெருமளவு ஆண்களின் பங்கேற்பையே பார்க்க முடிந்தது.

அது மட்டுமல்லாமல், அடுத்து என்ன செய்வது என்று ஒரு அம்மா யோசித்துக்கொண்டிருக்கும்போது, சில ஆண்கள் ஸ்மார்ட் போனை நோண்டிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. எனவே, சரியான நேரத்தில், சரியான தகவல்கள் முழுமையாகப் பெண்களைச் சென்றடைவதில்லை.இதன் காரணமாகவும், பொதுவாகவே முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்களிடமே இருப்பதாலும், இயற்கைச் சீற்றங்களின்போது பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறார்கள்.

தற்போதைய வெள்ளத்திலும்கூட இந்த நிலையை நன்றாகப் பார்க்க முடிகிறது. அதிலும் தனித் தாய்மார்களின் பிரச்சினையை வார்த்தைகளில் எளிதாக வடிக்க முடியாதது. உயிர் போகும் நெருக்கடிகளில்கூட எதை முதலில் காப்பாற்றுவது என்பது போன்ற எல்லா முக்கிய முடிவுகளையும் தனியொரு பெண்ணாகவே ஒவ்வொருவரும் சிந்தித்து எடுக்க வேண்டும்.

உலகிலுள்ள ஏழைகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள், அவர்கள் இன்னும் மோசமாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிலை சென்னைக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட கடலூர், மற்ற ஊர்களில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தினர், குறிப்பாகப் பெண்களே அதிக பாதிப்பை தங்கள் முதுகில் சுமந்திருக்கிறார்கள்.

உலக இயற்கைச் சீற்றங்களும் இதையே உணர்த்துகின்றன. அமெரிக்காவில் நிகழ்ந்த கத்ரீனா புயலில் ஏழைப் பெண்கள் மேலும் ஏழையானார்கள். இந்தோனேசியாவின் பண்டா அசே பகுதியில் நிகழ்ந்த ஆழிப் பேரலையின்போது பலியான இறப்பில் 55 முதல் 70 சதவீதம் பேர் பெண்கள். இது மிகப் பெரிய முரண்பாடு.

தண்ணீர், உணவு உட்பட இயற்கை வளத்தை நேரடியாகச் சேகரிப்பவர்கள், நிர்வகிப்பவர்கள் பெண்களே. ஆனால், இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்களும் அவர்களே. இது எவ்வளவு பெரிய முரண்பாடு. அத்தியாவசியத் தேவைகளைச் சிறப்பாக நிர்வகிக்கும் பெண்களால், இயற்கைச் சீற்றங்களைச் சரியாகக் கணித்து, சரியான முடிவுகளை எடுப்பதில் பெருமளவு உதவ முடியும்.

இயற்கை வளத்தைக் காலம்காலமாகப் பேணி வளர்த்துப் பெருக்கி, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஊட்டமாக வளர உழைத்த பெண்களால் இயற்கைச் சீற்ற இடர்ப்பாடுகளைச் சீரமைப்பதில் சிறப்பாக செயலாற்ற முடியும்.

அது மட்டுமல்லாமல் காலம்காலமாக இயற்கை வளங்களை நிர்வகித்துவந்த பெண்களால், இயற்கைச் சீற்றம் போன்ற நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாகச் செயல்பட முடியும். ஒரே நிபந்தனை ஆணுக்குக் கிடைக்கும் எல்லாச் சுதந்திரமும் பெண்களுக்கும் இது சார்ந்து கிடைக்க வேண்டும் என்பதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x