Published : 13 Dec 2015 02:23 PM
Last Updated : 13 Dec 2015 02:23 PM
இருப்பவர்கள் கொடுப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இல்லாதவர்கள் கொடுப்பதென்பது நம் சமூகத்தில் சாத்தியமில்லை என்றே இந்த 21-ம் நூற்றாண்டில் நம்புகிறோம். ஆனால், தாங்கள் சம்பாதிக்கும் ஒரு ரூபாயும்கூட அடுத்தவருக்குப் பயன்பட வேண்டும், பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றனர் மகாராஷ்டிர மாநிலம் அஹமத்நகர் மாவட்ட பாலியல் தொழிலாளிகள்.
அஹமத்நகர் பாலியல் தொழிலாளிகள் அனைவரும், இரண்டு வேளை பட்டினி இருந்து சேமித்த ரூ. 1 லட்சத்தை சென்னை வெள்ள நிவாரணத்துக்கு அளித்துள்ளனர். இந்த நிவாரண உதவியை அஹமத்நகர் மாவட்ட ஆட்சியர் அனில் காவடேயிடம் அவர்கள் கொடுத்துள்ளனர். அது பிரதமரின் நிவாரண நிதிக்குச் செல்லும். இப்படிப் பேரிடர் காலங்களில் நிதியுதவி செய்வது அவர்களுக்குப் புதிதல்ல.
துயரம் தெரியும்
“நாங்கள் ஏழைகள், அதனால் நிராதரவாக நிற்பவர்களின் துயரம் எங்களுக்குப் புரியும். ஒரு தனிநபராக என்னால் பெரிய பணஉதவியைச் செய்ய முடியாது. ஆனால், பாலியல் தொழிலாளிகள் அனைவரும் இணைந்து பணம் கொடுத்தால், எங்களால் இயன்ற உதவியைத் தேவைப்படும் சகமனிதர்களுக்கு நிச்சயம் செய்ய முடியும்.
இதற்கு முன்னதாக நிலநடுக்கம், ஆழிப் பேரலை காலத்தில் நிவாரண உதவி வழங்கியுள்ளோம். நாங்கள் கொடுப்பது சொற்பத் தொகைதான் என்றாலும், எங்களால் முடிந்த உதவியை இணைந்து செய்வதில் உறுதியாக இருக்கிறோம்” என்கிறார் 20 ஆண்டுகளாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் தீபா.
வருமானத்தில் 10 சதவீதம்
அஹமத்நகரில் உள்ள பாலியல் தொழிலாளிகளின் நலன்களுக்காகப் பாடுபட்டுவரும் ‘ஸ்நேகாலயா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைப் பேராசிரியர் கிரீஷ் குல்கர்னி என்பவர் நிறுவியுள்ளார். அஹமத்நகரில் உள்ள 3,500 பாலியல் தொழிலாளிகளும் ஸ்நேகாலயாவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தங்களுடைய வருமானத்தில் 10 சதவீதத்தை இந்த நிறுவனத்துக்கு அவர்கள் வழங்குகின்றனர். இந்த அமைப்பின் அறங்காவலர்களாக முன்னாள் பாலியல் தொழிலாளிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பின் மூலம் பாலியல் தொழிலாளிகள் உதவுவது இது முதன்முறையல்ல. தேசிய அளவிலான ஒவ்வொரு பேரழிவின்போதும் அவர்கள் உதவி வருகின்றனர். 1993-ம் ஆண்டு குஜராத் மாநிலம் லூத்தூரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின்போது, அவர்களுடைய நிதியுதவி சேவை தொடங்கியது. மும்பை குண்டுவெடிப்பின்போது ரூ. 12,000 வழங்கினார்கள்.
அதிலிருந்து குஜராத் நிலநடுக்கம் (2001), கார்கில் போர் (1999), ஆழிப் பேரலை (2004), மகாராஷ்டிரப் பஞ்சம் (2013), காஷ்மீர் வெள்ளம் (2014) போன்ற பேரிடர்களுக்கு இவர்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர். இயற்கைப் பேரிடர்களின்போது உதவுவதுடன் இவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை.
வெள்ளத்தில் மட்டுமல்ல
கடந்த ஆண்டு காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகள், ஸ்நேகாலயா நடத்தும் ஆசிரமத்தில் படித்துவருகின்றனர். அவர்களுக்கான செலவுகள் அனைத்தும் பாலியல் தொழிலாளிகள் வழங்கும் பணத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் நலனுக்காக 1989-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் ஸ்நேகாலயா நிறுவனம் நடத்தும் ஆசிரமத்தில் 400 குழந்தைகள் படித்துவருகின்றனர்.
ஒரு வீட்டுவேலைப் பணியாளரின் மகளுக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தபோது பாலியல் தொழிலாளிகள் ரூ. 30,000 வழங்கினார்கள். அண்ணா ஹசாரேயின் லோக்பால் சட்டத்துக்கான போராட்டங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கான ஆர்ப்பாட்டங்களில் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அஹமத்நகரில் 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதைத் தடுப்பதிலும் இவர்கள் உறுதியாக உள்ளனர். தங்கள் தோழிகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால்கூட, உடனே அனைவரும் பாரத்தைப் பகிர்ந்துகொண்டு பொருளாதார உதவிக்கரம் நீட்டுகின்றனர். தங்களுடைய பகுதிகளில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்குத் துணி, புத்தகங்கள் எனத் தேவைப்படும் உதவிகளைச் செய்வது என இவர்களுடைய சேவைக்கு முற்றுப்புள்ளியே விழவில்லை.
மனநிறைவு
“இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் காலம் முதல் நல்ல காரியங்களுக்கு முடிந்த உதவியைச் செய்து வருகிறேன். ஒரு மாதத்தில் எங்களுடைய வருமானத்தில் 10 சதவீதத்தைச் சமூக நலச் சேவைகளுக்கு வழங்கிவருகிறோம். இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. தேவைப்படுபவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்வதில் மனநிறைவடைகிறோம்.
சென்னை வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 200 கொடுத்திருக்கிறேன். நாங்கள் ஏழைகள்தான். எங்களைவிட அதிகத் தேவை உள்ளவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம்.
சில நாட்களில் எங்களுக்கே பணம் இருக்காது. ஆனால், ஒரு ஏழையால்தானே மற்றொரு ஏழையின் துயரத்தைப் புரிந்துகொள்ள முடியும். எங்கள் தோழிகள் அனைவரிடமிருந்தும் நிதி திரட்டினால், நிராதரவாக நிற்பவர்களுக்கு அது சிறிய அளவிலாவது உதவும்” என்கிறார் மற்றொரு பாலியல் தொழிலாளி ஆஷா.
தொடர் உதவி
அடுத்து வரும் மாதங்களில் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 4 லட்சம் திரட்டும் முயற்சியை ஸ்நேகாலயா தொடங்கியுள்ளது. சென்னையில் சேவை செய்துவரும் கூஞ்ச் (Goonj) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு அந்த நிதி வழங்கப்பட உள்ளது. அதேபோல நிவாரணப் பொருட்கள், இரண்டு ஆம்புலன்ஸ்கள், புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவற்றைச் சென்னைக்கு அனுப்ப ஸ்நேகாலயா திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment