Published : 15 Nov 2015 12:56 PM
Last Updated : 15 Nov 2015 12:56 PM
எனக்கு 23 வயது. என் கணவருக்கு 33 வயது. எங்களுக்கு இரண்டு வயதில் மகன் இருக்கிறான். எனக்கும் என் கணவருக்கும் பத்து ஆண்டுகள் வயது வித்தியாசம் இருப்பதால் என் உறவினர்கள், தோழிகள் எல்லோரும் என்னை கிண்டல் செய்கிறார்கள். அத்துடன், அவர் தலைமுடி பாதிக்கும்மேல் வெள்ளையாக இருக்கும். இதை வைத்தும் என்னை கிண்டல் செய்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைந்துவருகிறது. ஆனால், என் கணவர் என்னை வற்புறுத்துகிறார். என்ன செய்வதென்று தெரியாமல், நான் என் தோழிகளிடம் இதைப் பகிர்ந்துகொண்டேன். ஒருத்தி, என் கணவர்மீது வழக்கு போடச் சொல்கிறாள். இன்னொருத்தி, பிடிக்கவில்லையென்றால் சேர்ந்து வாழ வேண்டாம், விவாகரத்து செய்துவிடு என்று சொல்கிறாள். ஆனால், என் கணவர் நல்லவர். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர். அதனால், அவரைப் பிரிய மனம் வரவில்லை.
தாம்பத்ய உறவு பிரச்சினைதான் என்னை வேதனைப்படுத்துகிறது. அவரைப் பிரிந்துவிட்டால், என் குழந்தையின் எதிர்காலமும், என் எதிர்காலமும் என்னாகும் என்ற பயம் இருக்கிறது. எனக்கு என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை. ஆலோசனை சொல்லுங்கள்.
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
டாக்டர் சரஸ் பாஸ்கர், உளவியல் நிபுணர், சென்னை.
உங்கள் தோழிகள் பிரச்சினைக்கு உணர்வுபூர்வமாகச் சிந்தித்து வழி சொல்கிறார்கள். அதனால் வரப்போகும் பின்விளைவுகளைப் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. ஆனால், நீங்கள் யோசிக்கிறீர்கள். அத்துடன், உங்கள் கணவர் நல்லவர் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இருக்கும் வயது வித்தியாசம் ஒரு பிரச்சினைதான். அவரது வயது, நீங்கள் ஒரு கீழ்ப்படியும் மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவைக்கிறது.
அவருடைய இந்த அணுகுமுறையால் உங்களுக்குச் சலிப்பும் வெறுப்பும் வந்திருக்கலாம். அது நியாயமானதுதான். ஆனால், உங்களுக்குத் தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைந்ததற்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும். உங்கள் கணவர் பற்றி தோழிகள் உங்கள் மனதில் விதைத்த கருத்துக்கள் இதற்குக் காரணமா, அல்லது உங்கள் கணவரின் அணுகுமுறைதான் பிரச்சினையா என்று யோசித்துப்பாருங்கள். ஒருவேளை, தோழிகளின் கருத்துகள்தான் காரணம் என்றால், அதை எளிதாக மனதில் இருந்து உங்களால் தூக்கி எறிய முடியும். அப்படியில்லாமல், உங்கள் கணவரின் அணுகுமுறை பிரச்சினை என்றால், அதை அவரிடம் பேசி அவருக்குப் புரியவைக்க முயலுங்கள்.
உங்களால் புரியவைக்க முடியவில்லையென்றால், ஒரு குடும்பநல ஆலோசகரை அணுகலாம். உங்கள் தோழிகள் சொன்ன உணர்வுபூர்வமான வழிகளைப் பற்றி யோசிக்காமல், அறிவுபூர்வமாகச் சிந்தித்து ஒரு முடிவெடுங்கள்.
உங்கள் கேள்வி என்ன?
‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் உங்கள் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002.
மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT