Last Updated : 15 Jun, 2014 01:00 AM

 

Published : 15 Jun 2014 01:00 AM
Last Updated : 15 Jun 2014 01:00 AM

பெண்ணின் திறமை மதிக்கப்படுகிறதா?

பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சாதனைகள் செய்வதை நம் சமூகத்தில் பெரும்பாலும் குடும்பமே தீர்மானிக்கிறது. பெண்கள் ஆர்வத்துடன் செயல்படுவதில் சாதகமாகவோ பாதகமாகவோ ஏதோவொரு பங்கைக் குடும்பம் ஆற்றிவருகிறது. அப்படிக் குடும்ப வாழ்க்கைத் தரும் நெருக்கடிகளையும் சமாளித்து, வெற்றிகரமாக இயங்கிவரும் பெண் ஆளுமைகள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் களம் இது.

வசந்தா கந்தசாமி

சென்னை ஐ.ஐ.டி.யில் கணிதத்துறை இணைப் பேராசிரியரான டாக்டர் வசந்தா கந்தசாமி சிறந்த கணித விஞ்ஞானி. கணிதத் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகிறார். 94 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவற்றில் 91 புத்தகங்கள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டவை. 600க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகளை வெளியிட்டிருக்கிறார். பதிமூன்றுக்கும் மேற்பட்ட கல்வி மற்றும் சமூக இதழ்களுக்கு ஆசிரியர் என இவரது களம் விரிவானது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்ற நிறுவனங்களின் திட்டங்களில் பங்கேற்றுள்ளார். கணிதவியலாளர் என்ற அடையாளத்தோடு சமூகநீதிக் கோட்பாட்டாளராகவும் அறியப்படுபவர். ஐ.ஐ.டி.யில் பயிலும் கிராமப்புறத் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்திவரும் இவர், 2006 –ல் தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்றவர்.

வளர்ப்பு முறையில் தவறு

பெண்கள் தங்கள் வேலையிலும் குடும்ப வாழ்க்கையிலும் சமநிலை பேணுவது சவாலான விஷயமாகவே இருக்கிறது என்கிறார் வசந்தா கந்தசாமி. “நம் குடும்பங்களில் பெண் குழந்தைகளை வளர்க்கும் விதத்திலேயே பிரச்சினை தொடங்கிவிடுகிறது. ஒரு பெண் குழந்தையைப் பாராட்டும்போது, அந்தப் பாராட்டு அவளது தோற்றத்திற்காக இல்லாமல் திறமைகளுக்காக இருக்க வேண்டும். பெண் குழந்தை வளரும்போது, திருமண வாழ்க்கைக்காகவே அவளைத் தயார் செய்கிறார்கள். அதை விடுத்து அவளது ஆளுமையை மேம்படுத்தும் கல்வி வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த எண்ணம் மாறாமல், பெண்கள் தங்கள் வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இணக்கம் காண்பது சாத்தியமில்லை” என்கிறார்.

குடும்பம்

குடும்பத்தில் ஆதரவு இல்லாததால் பல பெண்கள் வேலைக்குச் செல்லும் கனவை விட்டு விடுகிறார்கள். வீட்டைக் கவனிக்கும் பொறுப்பை மட்டுமே செய்து வருகிறார்கள். இந்நிலை மாற வேண்டும் என்று சொல்லும் வசந்தா, “என் குடும்பத்தில் எனக்குக் கணிதத்தில் இருக்கும் ஆர்வத்தையும் திறமையையும் புரிந்து கொண்டார்கள். தந்தை, கணவர், குழந்தைகள் என அனைவருமே எனக்கு வீட்டில் சுதந்திரமாக இயங்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அப்படி இல்லாமல் போயிருந்தாலும் நான் போராடி ஜெயித்திருப்பேன்” என்கிறார்.

சவால்கள்

பெண்களின் திறமையை ஆண்களின் திறமைக்கு நிகராக அங்கீகரிக்க இந்தச் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதியுடன் கூறும் வசந்தா, “குடும்பம், பணியிடம் என எங்கும் பெண்களின் திறமையை முழுமையாக அங்கீகரிப்பதில்லை. பெண்கள் பணியிடங்களில் பிரச்சினைகளையும் சவால்களையும் சந்திக்கும்போது குடும்பம் பெரும்பாலும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை” என்று வருத்தம் தெரிவிக்கிறார்.

நேர நிர்வாகம்

குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேர நிர்வாகம் பெரும் பிரச்சினைதான். வசந்தா இதை எப்படிக் கையாள்கிறார்? “நான் எப்போதுமே டி.வி. பார்த்ததில்லை. ஷாப்பிங்கும் சென்றதில்லை. நான் இளைப்பாறுவது உட்பட அனைத்துமே ஆராய்ச்சியில்தான். வீட்டு வேலை, ஆராய்ச்சிக்கு மட்டுமே நேரம் ஒதுக்குவேன். என் ஆராய்ச்சிப் பணிகள் முழுவதும் இரவில்தான் இருக்கும். இது எனது அணுகுமுறை. மற்றவர்கள் அவரவர் வேலைக்கு ஏற்ப பொறுப்புகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஆலோசனை சொல்கிறார்.

இந்திய பெண்களின் எதிர்காலம்

“அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தேவை. பெண்ணின் திறமைகளைச் சரிசமமாகப் பயன்படுத்தும்போதுதான் இந்தியா வல்லரசாக மாறும். ஆணிற்கும் பெண்ணிற்கும் சமூகச் செயல்பாடுகளுக்கு தனித்தனி விதிகளை நிர்ணயம் செய்துவைத்திருக்கும் ஒரு நாடு வளர்ச்சியடைவது சாத்தியமில்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் வசந்தா கந்தசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x