Last Updated : 15 Nov, 2015 12:59 PM

 

Published : 15 Nov 2015 12:59 PM
Last Updated : 15 Nov 2015 12:59 PM

பெண் எனும் பகடைக்காய்: கழிப்பறையும் பெண்ணின் உரிமையும்

கழிப்பறை ஒரு வீட்டின் அத்தியாவசியம். சமையலறை ஒரு பெண்ணுக்கு அவசியம் என்று கருதுகிற சமூகம், கழிவறையின் அவசியத்தை உணர்ந்திருக்கிறதா? கழிவறை, நகரங்களில் மிக மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டாலும், கிராமங்களில் இன்னமும் தொடரும் அவலமாகத்தான் கழிவறைப் பிரச்சனை இருக்கிறது. அவர்கள் அதன் அருமையை உணரவில்லை; முழுமையையும் எட்டவில்லை. காடு கரைகள், கண்மாய்க் கரைகள் என்று தேடிப் போகிறார்கள். நோய்க்கூறுகளை உள்வாங்கும் இடமாக அவை இருக்கின்றன. ஆள் நடமாட்டமில்லாத இடம் தேடிப் போவதும், நடமாட்டம் இருப்பின் இயற்கை உபாதைகளை அடக்கி வைத்துக்கொள்வதும் எவ்வளவு அவஸ்தைகள்?

சில நேரங்களில் பாம்புகளின் ரூபத்தில் மரணத்தையும் ஆண் மன விகாரங்களின் வெளிப்பாடாகப் பாலியல் வல்லுறவு போன்ற ஆபத்துகளையும் இந்தப் ‘பயணங்கள்’ ஏற்படுத்துகின்றன. கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச கிராமம் ஒன்றில் இரு இளம்பெண்கள், இருட்டிய பின் காடு கரைகளைத் தேடிச் சென்றபோது பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கவில்லையா? நடிகை வித்யா பாலன், விளம்பரங்களில் தோன்றி, ’முக்காடு போட்டு முகத்தை மூடிக்கொள்வது மட்டும் பெண்ணின் கௌரவமல்ல, இயற்கை உபாதைகளுக்காக வெளியில் செல்லாமல் இருப்பதும்தான்’ என்று சொல்வது எத்தனை பொருள் பொதிந்தது.

சூரிய உதயத்துக்கு முன் இருள் பிரியாத அதிகாலைப் பொழுதிலும், அதைத் தப்பவிட்டால், ஒரு நாள் முழுதும் அவதியுடன் காத்திருந்து, இருள் கவியும் மாலைப் பொழுதிலும், மறைவிடம் தேடிச் செல்வது வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரங்கள். பதின் பருவப் பெண்கள் மாத விலக்கான காலங்களில் இன்னும் கூடுதல் தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டும் என்பதும் மறுக்க முடியாத நிதர்சனங்கள்.

பன்னிரண்டு வயதை எட்டிப் பிடிக்கும் பெண் குழந்தைகள், பருவமடையும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களில் இதுவும் ஒன்று என்பதை மறுக்க முடியுமா? பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தாலும் போதிய தண்ணீர் வசதி இல்லாவிட்டால், அதைப் பயன்படுத்த முடியாத நிலை. காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் பெண் குழந்தைகள் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் வரை சிறுநீர் கழிக்காமல் இருப்பதும், தாகத்துக்குத் தண்ணீர் குடிக்காமல் தவிர்ப்பதும் கொடூரமில்லையா?

கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பெண் குழந்தைகள், பல மைல் தொலைவிலிருந்து பயணித்து வருபவர்கள் இத்தகைய அத்தியாவசியத் தேவைகள் மறுக்கப்படுவதாலேயே கல்வியின் மீதும் கவனம் குவிக்கத் தவறுகிறார்கள். சில வேளைகளில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி பாதியிலேயே நிறுத்தப்படும் அவலமும் நிகழ்கிறது. குடும்பச் சூழல், பருவமடைதல், இவற்றுடன் கழிப்பறையும் இங்கு ஒரு காரணமாகிறது.

ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். புகழ் பெற்ற யூரோ கைனகாலஜிஸ்ட் ஒருவர் சிறப்பு அழைப்பாளராக அழைப்பப்பட்டிருந்தார். பேச்சாளராக என்னையும் அழைத்திருந்தார்கள். என்னால் அதில் கலந்துகொள்ள இயலவில்லை. அந்தக் கூட்டமே பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரகத்தொற்று நோய் பிரச்சனைகள் தொடர்பானதுதான். நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவர் என் தோழி. பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பிட வசதி இல்லாமையும், அதன் போதாமையும் பற்றி அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இப்படிச் சொன்னார். “இவ்வளவு பேசுகிறோம், பெண்களுக்கான சட்ட உரிமைகளுக்காக வாதாடுகிறோம். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்திலேயேகூட பெண்களுக்குப் போதுமான கழிப்பிட வசதி இல்லை” என்று தடாலென்று போட்டு உடைத்தார். இதுதான் இங்கு உண்மை. விடுதலைக்குப் பின் பெண்ணின் பிரச்சினைகளாக கல்வி, திருமணம், பாலியல் இவற்றினூடாக, நாகரிகத்தில் உச்சமடைந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளும் நாம்தான் இன்னமும் பெண்களுக்கான கழிப்பறைகளின் அவசியம் பற்றியும் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

பேருந்துப் பயணங்களின்போது மோட்டல்களில் அல்லது கட்டணக் கழிவறைகளில் பேருந்து நிறுத்தப்படும்போது, அங்குள்ள கழிவறைகள் சொல்லும் கிராமப் புறங்களின் உண்மை நிகழ்வை. தண்ணீர்ப் பற்றாக்குறையும் சுத்தம் பேணாமையும் சிறுநீர்த் தொற்றைக் கொண்டுவந்து சேர்த்துவிடுமே. பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் நம் மக்களுக்கு சொல்லித் தர வேண்டியிருக்கிறது.

கிராமங்களில் அரசு கட்டித் தந்திருக்கும் கழிப்பறைகளும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல், பூட்டியே வைக்கப்பட்டிருப்பதும், அவை தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டு வைக்கும் இடமாக மாறியிருப்பதும் அந்த மக்களின் மாறாத மனநிலையையே எடுத்துக் காட்டுகின்றன. வீட்டில் கழிப்பறை இருந்தாலும், ’காற்றோட்டமாக’ வெளியில் சென்று வருவதையே விரும்புவதாகச் சொல்லும் சில கிராமத்துப் பெண்களின் மனநிலையை என்னென்பது?

கிராமங்கள் இருக்கட்டும். நகரங்களிலும் பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பிட வசதி என்பது மிக மிகக் குறைவு. அலுவலகங்களில் கழிப்பிட வசதி இருந்தாலும், மாதவிலக்குக் காலங்களில் நாப்கின்களைப் போடுவதற்கான குப்பைக் கூடைகள் இல்லாதது பற்றி யாரிடம் நொந்துகொள்வது? அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பல தோழிகள் இந்த இடர்ப்பாட்டை எதிர்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பெண்களே தங்கள் சொந்தக் கைக்காசு செலவழித்துக் குப்பைக் கூடைகள் வாங்கி வைத்ததாகவும், சில நாட்களின் பின் அந்தக் கூடைகள் காணாமல் போவதையும் வருத்தத்துடன் சொல்வார்கள்.

கிராமங்களில் வீடுகளுக்குள் கழிவறைகளைக் கட்டிப் பயன்படுத்துவதில் சாதி சார்ந்த மனோபாவமும் உள்ளீடாக ஒளிந்திருப்பதை மறுப்பதற்கில்லை. அதை யார் சுத்தம் செய்வது என்பது ஒருபுறம். நாம்தான் அதற்காகவே குறிப்பிட்ட சாதியினரை ஒதுக்கி வைத்திருக்கிறோமே. தீண்டாமை இன்னமும் கைக்கொள்ளப்படும் இந்தச் சமூகத்தில் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாத மனநிலையும் மனத்தடையும்கூட, கழிப்பறைகளை அவர்கள் மறுப்பதற்கான காரணிகள். காந்தி முன்னெடுத்த போராட்டங்களில் எல்லாம் கழிப்பறை பற்றியும், அதன் தூய்மை பற்றியும், அதை நாமே சுத்தம் செய்வது பற்றியும் பேசிய பேச்சுகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. மற்றொன்று கலாசாரத்தின் பெயரால் மறுப்பது. வீட்டுக்குள் கழிவறை என்பது, வீட்டுக்கான புனிதத்தைக் குலைத்துவிடும் என்பது. ‘மனு ஸ்மிருதி’ குறிப்பிடுவதும் இதைத்தானே.

சீமா படேல் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாபூர் கிராமத்துப் பெண். கழிப்பறை வசதி வேண்டுமென்று அவர் கேட்ட பின்னும் அதைக் காதில் போட்டுக்கொள்ளாத கணவன், புகுந்த வீட்டாரின் அலட்சியத்தால் வீட்டையே புறக்கணித்து வெளியேறினார். கணவன் அதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போக, ‘கழிவறை கட்டித் தருவதில் என்ன சிக்கல்?’ என கோர்ட் எதிர்க்கேள்வி கேட்டது. வேறு வழியின்றி கழிப்பறை கட்டிய பின், 20 மாதங்களுக்குப் பின் சீமா படேல், குழந்தையுடன் கணவன் வீடு திரும்பியிருக்கிறார். கோர்ட் தலையிட்டுக் கேள்வி கேட்டதாலேயே கழிவறை கட்டப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு வருத்தத்துக்குரியது. அடிப்படை உரிமைகூட கோர்ட்டுக்குப் போனால்தான் கிடைக்கும் போலிருக்கிறது. அதைக் கட்டுவதற்கு உதவியவரும் உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவி என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

கொசுறு: இந்தியா முழுமைக்கும் இதே நிலை என்றால், நம் தமிழக நிலை என்ன? தமிழகத்தில் 49 சதவீதம் வீடுகளில் கழிப்பறை இல்லை என்று இந்தியக் கணக்குத்துறை அலுவலரின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. அட, நமக்கு டாஸ்மாக் போதாதா?

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x