Published : 22 Nov 2015 03:44 PM
Last Updated : 22 Nov 2015 03:44 PM
(தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் கவிதாவின் கதை இது. தான் கடந்துவந்த பாதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்)
ஆபரேஷன் நடந்துச்சுன்னா எத்தனை நாள் லீவு போடணும்னு தெரியலை. ஆபரேஷன் முடிஞ்சு கீமோதெரபி வேற இருக்கும். அதுக்கப்புறம் ரேடியேஷன் டிரீட்மெண்ட்டும் உண்டு. இதெல்லாம் முடியணும்னா ஆறு மாசம்கூட லீவு தேவைப்படலாம். இதை கல்லூரி நிர்வாகம் ஏத்துக்குமான்னு யோசிச்சேன். நானும் என் கணவரும் காலேஜ்ல எங்க டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி. ரவி சாரைப் பார்க்க அவரோட வீட்டுக்குப் போனோம். நான் பி.எச்டி., பண்ணிக்கிட்டு இருந்தேன். அதுக்கு ரவி சார்தான் கைடு. அதனால முதல்ல அவர்கிட்டே விஷயத்தைச் சொல்வோம்னு நினைச்சோம். நாங்க சொல்றதைப் பொறுமையா கேட்டார். ‘இதுக்காக நீங்க கவலைப்படாதீங்க. தைரியமா இருங்க. எவ்ளோ நாள் லீவு வேணுமோ அதுக்கு அப்ளை பண்ணுங்க. எல்லாம் சரியாகிடும், பார்த்துக்கலாம்’னு அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நம்பிக்கையின் பிரதிபலிப்பா இருந்துச்சு.
காலேஜ்ல என்ன சொல்வாங்களோன்னு பயந்துகிட்டே இருந்த எனக்கு சாரோட அணுகுமுறை ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. பி.ஹெச்டி.க்காக அந்த மாசம் கொடுக்க வேண்டிய ஆய்வறிக்கையைக்கூட நான் முடிச்சு கொடுத்துட்டேன். செமஸ்டர் நடுவுல மாணவர்களை இப்படி விட்டுட்டு ஆஸ்பத்திரிக்குப் போறோமென்னு எனக்கு வருத்தமா இருந்துச்சு. எங்க கல்லூரியோட தலைவர் என்னோட லீவு அப்ளிகேஷனை ஏத்துக்கிட்டார். என்னோட வேலைப் பளுவையும் பாதியா குறைச்சாங்க.
ஆனந்த், சுஜிதா இவங்க ரெண்டு பேரும் என்னோட சக ஊழியர்கள் மட்டுமல்ல, நல்ல நண்பர்களும்கூட. என்னோட மகிழ்ச்சிகளையும் துக்கங்களையும் இவங்ககிட்டேதான் பகிர்ந்துக்குவேன். நான் நல்லது பண்ணா பாராட்டவும், தப்புன்னா சுட்டிக்காட்டவும் தயங்காத நல்லவர்கள் அவர்கள். எனக்குப் புற்றுநோய்னு சொன்னதுமே ஆனந்த் ரொம்ப இயல்பா எதிர்கொண்டார். சுஜிதாதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டாங்க. ‘நீங்கதான் எனக்கு தைரியம் சொல்லணும். நீங்க கொடுக்கற உற்சாகத்துல நான் சீக்கிரமே சிகிச்சையை முடிச்சுக்கிட்டு வரணும்’னு சொன்னேன். அதுக்குப் பிறகுதான் சுஜிதா இயல்பானாங்க.
எனக்குப் புற்றுநோய்ங்கற நினைப்பே வராம இவங்க ரெண்டு பேரும் பார்த்துக்கிட்டாங்க. ரொம்ப உற்சாகமா பேசுவாங்க. வேலை சார்ந்த விஷயங்களில் ரொம்ப உதவியா இருந்தாங்க. ஆனந்த், என் கணவருக்கும் நல்ல நண்பர். அதனால அவங்க ரெண்டு பேரும் போன்ல பேசி, எனக்குத் தெரியாம எனக்கு நிறைய நல்லது பண்ணுவாங்க. அன்புதான் ஆக்கும் சக்திங்கறதை என்னைச் சுத்தியிருக்கறவங்க மூலமா நான் புரிஞ்சுக்கிட்டேன்.
ஜூலை 1-ம் தேதி எனக்கு ஆபரேஷனுக்கு தேதி குறிச்சாங்க. அதுக்கு ரெண்டு நாள் முன்னாடிவரைக்கும் நான் காலேஜுக்குப் போனேன். ஆபரேஷனுக்கு முதல் நாள் சாயந்திரம் நான், என் கணவர், அக்கா மூணு பேரும் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினோம். பாப்பாவைப் பார்த்துக்கறதுக்காக அம்மா வீட்லயே இருந்துட்டாங்க. எனக்கு ஆபரேஷன் ஒண்ணும் புதுசு கிடையாது. 2008-ல் எனக்கு சினைப்பையில் கட்டி வளர்ந்தது. அதை நீக்கறதுக்காக அப்போ எனக்கு ஆபரேஷன் நடந்தது. பாப்பாவும் செயற்கைக் கருவூட்டல் மூலம் பிறந்தவதான். அதனால எனக்கு மயக்க மருந்து, லேப்ராஸ்கோபி, ஆபரேஷன் எல்லாமே பழகின விஷயமா இருந்துச்சு. ஆனா இப்போ எனக்கு நடக்கப்போறது புற்றுநோய் கட்டியை நீக்கறதுக்கான ஆபரேஷன். கட்டியை நீக்கின பிறகும் உடம்புல ஒரே ஒரு புற்றுநோய் செல் இருந்தாலும் அது லட்சக் கணக்குல பெருகிடும்னு எனக்குத் தெரியும். அதனால இந்த ஆபரேஷன் நல்லபடியா நடக்கணுமேன்னு என் மனசுக்குள்ளே சின்னதா ஒரு பரிதவிப்பு இருந்தது.
அன்னைக்கு ராத்திரி ரொம்ப நேரம் என் கணவரும் அக்காவும் என்கிட்டே சந்தோஷமா சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க. ஆபரேஷனைப் பத்தி நினைச்சு நான் பயப்படக் கூடாதுன்னு எனக்குப் பிடிச்ச விஷயங்களையே பேசினாங்க. ஆஸ்பத்திரியில என்னோட ரூம்ல டி.வி. இருந்துச்சு. எனக்குப் பாட்டு கேட்கறது ரொம்பப் பிடிக்கும். அன்னைக்குத் தூக்கம் வர்ற வரைக்கும் பாட்டு கேட்டேன்.
மறுநாள் காலைல எங்க குடும்ப டாக்டர், மயக்க மருந்து செலுத்தற டாக்டர், அப்புறம் சுப்பையா டாக்டர் எல்லாரும் வந்தாங்க. நான் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே போறதுக்கு முன்னாடி என் கணவரோட முகத்தைப் பார்த்தேன். கொஞ்சம் பதட்டமா இருக்கற மாதிரி தெரிஞ்சுது. ‘கண்ணை மூடிக்கிட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க’ன்னு மயக்க மருந்து டாக்டர் சொன்னார். எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆஸ்பத்திரின்னா அலர்ஜி. ஊசி போடறதுக்குள்ளே ஊரையே கூட்டிடுவேன். ஆனா இப்போ எனக்கு ஆபரேஷன் நடக்கப் போகுது. மயக்க மருந்து கொடுக்கப் போறாங்க. நான் என்னை ரிலாக்ஸ் பண்ணிக்கணும். யோசிச்சிக்கிட்டு இருக்கும்போதே நான் மயங்கிட்டேன்.
அதுக்கப்புறம் நடந்த விஷயத்தை என் கணவர் என்கிட்டே சொன்னார். எனக்கு மார்பகம் முழுவதையும் நீக்காம, புற்றுநோய் கட்டியை மட்டும் எடுத்துடலாம்னு (Lumpectomy) டாக்டர் ஏற்கனவே சொல்லியிருந்தார். அந்தக் கட்டியோட சேர்த்து வலது கை அடியில இருக்கற சில முடிச்சுகளையும் நீக்கிடுவாங்களாம். ஆபரேஷன் நடந்துக்கிட்டு இருக்கும்போதே நீக்கின சில பகுதிகளை பரிசோதனைக்காக வேற ஒரு லேபுக்கு என் கணவரிடம் கொடுத்தனுப்பினாங்களாம். அவர் அங்கிருந்து முடிவு சொல்ற வரைக்கும் இங்கே எனக்கு ஆபரேஷன் நடந்துக்கிட்டு இருக்குமாம்.
உடனே என் கணவரும் சாகச வீரர் மாதிரி டாக்டர்கள் கொடுத்த மாதிரியை எடுத்துக்கிட்டு எங்களுக்குத் தெரிஞ்ச ஆட்டோ டிரைவரோட கிளம்பியிருக்கார். ஆட்டோ டிரைவருக்கும் விஷயம் தெரியும்ங்கறதால அவரும் ரொம்ப கவனமாவும் வேகமாவும் லேபுக்கு அழைச்சுட்டுப் போயிருக்கார். அங்கே பரிசோதனை முடிஞ்சு, நெகட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. உடனே என் கணவர் அதை டாக்டருக்கு போன் மூலமா சொல்லியிருகார். அதுக்கப்புறம்தான் இங்கே ஆபரேஷனை நிறைவு செஞ்சிருக்காங்க. இதை என் கணவர் என்கிட்டே சொல்றப்போ அவரோட பேச்சுல அப்படியொரு பெருமிதம். மனைவியோட ஆபரேஷனுக்கு தானும் ஒரு வகையில உதவி செஞ்ச நிறைவையும் அதுல பார்க்க முடிஞ்சது.
- மீண்டும் வருவேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT