Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

தேர்தல் களம்: ‘போடுங்கம்மா ஓட்டு’- யாருக்கு?

அரசியல் திருவிழா களைகட்டத் தொடங்கி யிருக்கும் இந்நாளில் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் தருமியும் புலவரும் பேசிக்கொண்டால், அவர்களது உரையாடல் இப்படியாகவும் இருந்திருக்கக்கூடும். “பிரிந்தே கிடப்பவை எவை?” என்று தருமி கேட்க, முக்காலமும் உணர்ந்தவராகச் சொல்லப்படும் புலவரோ, “பெண்களும் அரசியலும்” என்று மிடுக்குடன் உறுமியிருக்கக்கூடும்.

இவர்கள் இருவருமே ஆண்கள்; இருவருமே நம் சமூகத்துப் பிரதிநிதிகள்தாம்! ஆண்கள் இருவரை இப்படி உரையாடவைத்து அகமகிழ்வதுடன், இதுதான் தர்மமும்கூட என்று பெண்களை நம்பவைத்துக்கொண்டிருக்கும் இந்தச் சமூகம், தாய்வழிச் சமூகத்திலிருந்து தோன்றியதுதான் என்பதை வசதியாகப் பலரும் மறந்துவிடுகிறோம். பிறருக்கும் அதை நினைவுபடுத்தாமல் இருக்கிறவரைக்கும்தான் இங்கே பலருக்கும் வண்டி ஓடும். அதனால்தான் பெண்கள் தங்கள் தார்மிக உரிமையைக்கூடப் போராடிப் பெற வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் 15 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுவிட்ட பிறகும், தேர்தலில் போட்டியிடுகிற பெண்களின் எண்ணிக்கையே அரசியலில் பெண்கள் கடக்க வேண்டிய தொலைவை உணர்த்திவிடும்.

பெண்களின் ஆயுதம்

உண்மையில் ஆண்களைவிடப் பெண்களே அரசியலில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். வாக்களிப்பதன்மூலம் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதில் பெண்களே முன்னணியில் இருக்கிறார்கள். வாக்குச்சாவடிகளில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் கால்கடுக்கக் காத்திருக்கும் பெண்களே அதற்குச் சாட்சி என்பதையே புள்ளிவிவரங்களும் உறுதிபடுத்துகின்றன. 1962இல் எடுக்கபட்ட கணக்கெடுப்பின்படி அப்போதைய தேர்தலில் பெண்களின் வாக்கு விகிதம் 46.7, ஆண்களின் வாக்கு விகிதம் 62.1. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்த பிறகும் ஆண்கள் அதே எண்ணிக்கையிலேயே தேங்கிவிட, பெண்களோ ஆச்சரியப்படும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.

2019 கணக்கெடுப்பின்படி ஆண்களைவிடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். அனைத்திலும் முன்னுரிமையும் வாய்ப்பும் அளிக்கப்பட்ட நிலையிலும் ஆண்கள் 5 சதவீதம் மட்டுமே முன்னேறியிருக்க, பெண்களோ 20 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தனர். தடைகளை எல்லாம் தாண்டி பெண்கள் தங்கள் வாக்குரிமையை நடைமுறைப்படுத்தினாலும், அவர்கள் கையில் இருக்கிற துருப்புச் சீட்டால் அவர்களால் ஆண்களைத்தான் தேர்ந்தெடுக்க முடிந்தது.

பெண்கள் தேர்தலில் நிறுத்தப்பட்டால் தானே, தங்கள் பாலினப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க முடியும்? அந்த நிலை 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் மாறவில்லை என்பது எளிதில் புறக்கணித்துக் கடக்கவேண்டிய செய்தியல்ல. அதுவும் தமிழகத்தில் ஆண்களைவிடக் கிட்டத்தட்ட 10 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகம் இருக்கிற நிலையில், ஒவ்வொரு பெண்ணின் வாக்கும் வெற்றியாளரை நிர்ணயம் செய்வதற்கான ஆயுதம் என்பதைக் கட்சிகள் உணர்ந்துள்ளன. அதேநேரம் அந்த அளவில் மட்டும் பெண்களின் பங்களிப்பு இருந்தால்போதும் என்று முடிவுவெடுத்துவிட்டதுதான் வேதனை!

முதல் மக்களாட்சித் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை இருந்தது என்கிற பெருமையைப் பேசுகிற இந்திய நாடாளுமன்றத்தில்தான் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கேட்டு இப்போதும் விவாதித்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம். விவாதத்தில் பங்கேற்பவர்களில் பெரும்பான்மையினர் ஆண்கள் என்பதே 24 ஆண்டுகளாக அந்த விவாதம் முடிவுபெறாமல் நீண்டுகொண்டிருக்கக் காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. 1952-களில் இந்திய நாடாளுமன்றத்தில் ஆண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 95 சதவீதமாக இருந்தது. இப்போதும் அது 90 சதவீதத்துக்கும் குறையாத அளவில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வதில் இருக்கிறது ஆண்களின் அரசியல் தந்திரம்.

வெறும் வாக்கு வங்கியல்ல

அரசியல் மேடைகளில் பெரியோருக்கு அடுத்தபடியாகத் தாய்மார்களை மையப்படுத்திப் சொற்சமர் புரிவோர் எல்லாம், அரசியல் களத்தில் பெண்களை வெறும் வாக்கு வங்கி என்ற அளவிலேயே இன்னமும் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் தேர்தல் வாக்குறுதிகளில் மட்டுமே பெண்களுக்கு இடமளித்துவிட்டு, வேட்பாளர்களாக ஆண்களையே பெரும்பாலும் முன்னிறுத்துகிறார்கள். இதில் கட்சி பேதமெல்லாம் இல்லை. முதன்மைக் கட்சிகளில் தொடங்கி முற்போக்கு பேசுகிற கட்சிகள்வரை இதுதான் நிலை.

புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சிகள் சிலவற்றில் பெண்கள் பெருவாரியாகத் தேர்தலில் களமிறக்கப்பட்டாலும், அது கவனஈர்ப்புக்காகச் செய்யப்படுவது என்று சொல்லப்படுகிற விமர்சனத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். மற்றொருபுறம் முதன்மைக் கட்சிகள் பெண்களை நிறுத்தினால் அவர்கள் வெற்றிபெறும் வாய்ப்புக் குறைவு என்கிற கட்டுக்கதையை இன்னும்கூடக் கட்சிகள் நம்பிக்கொண்டிருப்பது வேடிக்கை. காரணம், உண்மை இதற்கு நேரெதிராக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டிலுமே ஆண்களின் வெற்றி வீதத்துடன் ஒப்பிடுகையில் பெண்களே வியக்கவைக்கும் அளவுக்கு முந்துகிறார்கள்.

பெண்களுக்காகப் பெண்கள்தான் பேச வேண்டுமா, ஆண் பிரதிநிதிகளும் பெண்களுக்காகக் குரல்கொடுக்கலாமே என்கிற காலத்துக்கு உதவாத கதையை இனியும் பேசிக்கொண்டிருக்க முடியாது. காரணம், நம் அரசியல் வரலாறு அப்படி! சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்த விவாதத்தின்போது, பெண்களின் அடிப்படைத் தேவையான சானிட்டரி நாப்கினுக்கு மிக அதிகமாக 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூட அங்கே போதுமான எண்ணிக்கையில் பெண்கள் இல்லை. பெண்கள் மாதந்தோறும் பயன்படுத்துகிற ஒரு பொருளை, அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கியதுடன், அதை அழகுசாதனப் பொருட்களின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால், பெண்கள் அழகுக்காக வைத்துக்கொள்கிற பொட்டு என்கிற அலங்காரப் பொருளை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்த்திருந்தார்கள். இது பலதரப்பினரையும் கொதிப்படையைச் செய்தாலும், அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. காரணம் பேச வேண்டிய, முடிவெடுக்க வேண்டிய அதிகாரத்தில் பெண்கள் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்புப் போதுமான அளவுக்கு இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு இது ஒரு சோற்றுப் பதம்.

பெண்கள் ஏற்படுத்திய மறுமலர்ச்சி

வரலாறு வேறொரு சேதியையும் நமக்கு வைத்திருக்கிறது. பெண்களின் - ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மகத்தான திட்டங்கள் பலவற்றைப் பெண்கள்தான் நிறைவேற்றியிருக்கிறார்கள். அல்லது அவை நிறைவேற உறுதுணையாக இருந்திருக்கி றார்கள். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பெண்களின் பொதுவாழ்க்கைப் பங்களிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால், கனவில் கைகூடாததைக்கூட நிறைவேற்றினார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். 1930களில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தன் பிறப்புக்கும் தான் தேர்ந்தெடுக்கப்போகும் வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உறுதியுடன் நம்பினார். தன் மீது சுமத்தப்பட்ட தேவதாசி அடையாளத்தைத் துறந்து, தனக்குப் பிடித்தவரை மணந்து பொதுவாழ்க்கைக்குள் நுழைந்தார்.

இதே காலகட்டத்தில்தான் டாக்டர் முத்துலட்சுமியின் அரசியல் நுழைவும் நடந்தது. சென்னை மாகாண சபையின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், வறுமையிலும் வாழ்க்கை நிலையிலும் ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும்விதத்தில் 1930ஆம் ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் குறித்த கோரிக்கையை மாகாண சபையில் வைத்தார். செல்வாக்கான நிலையில் இருந்த தேவதாசிகள் மத்தியிலிருந்து அதற்கு எதிர்ப்பலைகள் எழுந்தபோதும், தன் கொள்கையில் முத்துலட்சுமி ரெட்டி உறுதியுடன் இருந்தார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1947இல் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பெண்களின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய முன்னகர்வாக இதைக் குறிப்பிடலாம். மூவலூர் ராமாமிர்தம் அம்மையர், டாக்டர் முத்துலட்சுமி இருவருமே ஒரு வகையில் திராவிட இயக்கக் கொள்கைகளைச் செயல்படுத்திய முன்னோடிப் பெண்களில் முக்கியமானவர்கள். ஆனால், இன்று அந்தக் கொள்கையை உயர்த்திப் பிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சிகளில்கூடப் பெண்களின் நிலை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

அரசியலும் நமதே

அரசியலில் பங்கேற்கிற பெண்கள் அனைவருமே பெண்களின் உயர்வுக்குப் பாடுபடுவார்கள் என்று உறுதிப்படுத்த முடியாது. அதற்கும் நம்மிடமே போதுமான சான்றுகள் இருக்கின்றன. ஆனால், இதை ஒரு காரணமாகச் சொல்லி பெண்களின் அரசியல் பங்களிப்பைப் புறக்கணித்துவிட முடியாது, புறக்கணிக்கவும் கூடாது. அரசியலில் கறைபடாத கரங்களைக் காண்பது அரிது என்கிறபோதும் அதில் பெண்களின் கரங்களும் இணைய வேண்டும் என்பது உரிமைப் போர். அதைச் செயல்படுத்த பெண்களோடு குடும்பங்களும் முன்வர வேண்டும்.

முதலில் அரசியல் என்பது பணம் பார்ப்பதற்கான துறை என்கிற நினைப்பிலிருந்து மக்கள் வெளிவர வேண்டும். மக்களுக்கு சேவைசெய்ய நினைக்கிற ஒவ்வொருவரும் அது தங்களுக்கான துறை என்பதை உணர வேண்டும். பிற சேவைத் துறைகளுக்குக் குறிப்பிட்ட பணி நேரம் இருந்தாலும், அரசியல் கால, நேர எல்லைகளைக் கடந்து பணியாற்ற வேண்டிய துறை. இதுவே பெண்களின் அரசியல் நுழைவுக்குப் பெரும் தடையாக இருக்கிறது. தனக்கென தனி வேலையோ, உடல்நலக் குறைவோ இருப்பதைச் சொல்லி ஒரு வேளை சமையலை மட்டுமாவது வீட்டின் பிற உறுப்பினரைச் செய்யச் சொல்லும் பெண்ணை, கொலைக் குற்றவாளிபோல் சித்தரிக்கும் மனநிலைதான் இன்றைக்கும் பெரும்பாலான குடும்பங்களில் நிலவுகிறது.

இந்த இடத்தில் இருந்துகொண்டுதான் நாம் பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்துப் பேசுகிறோம். ஆனால், இனியும் பேசிக்கொண்டிருப்பதால் மட்டுமே பலனில்லை. செயலில் இறங்க வேண்டும். அம்மா, மனைவி, சகோதரி என்று எந்தப் பதவியை வகிக்கிற பெண்ணாக இருந்தாலும், தங்கள் அரசியல் உரிமைக்காகவும் போராடியாக வேண்டும். அந்த அடிப்படை உரிமையைப் பெறும் வரையில் கட்சிகளுக்கு அழுத்தம் தரத்தான் வேண்டும். தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரும் கட்சிகளையே வெற்றிபெறச் செய்வது என்கிற முடிவைப் பெண்கள் எடுத்துவிட்டால் எந்தக் கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு இல்லை!

கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x