Last Updated : 29 Nov, 2015 02:23 PM

 

Published : 29 Nov 2015 02:23 PM
Last Updated : 29 Nov 2015 02:23 PM

மகன்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்!

பதின்பருவத்தில் இருக்கும் ஓர் இளைஞன், பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் தலைமீது குப்பைகளை மாடியில் மறைந்திருந்து வீசுகிறான். அதே மாதிரி, அடுத்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண் மீதும் வீச முயற்சிக்கிறான். ஆனால், அதற்குள் எதிர்பாராத விதமாக அவனுடைய அம்மா துணி காயப்போட அங்கே வந்துவிடுகிறார்.

அவனது செயலை கவனித்துவிடும் அவர், “நேற்று நான் அலுவலகத்துக்குச் செல்லும் என் மீது சிலர் பாப்கார்ன் வீசினார்கள். யாரென்று திரும்பிப் பார்த்தால், மூன்று பையன்கள் பைக்கில் என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். என்னைத் தொந்தரவு செய்தார்கள். ‘மேடம், உங்கள் தலையில் எங்களுடைய பாப்கார்ன் இருக்கிறது. அதைத் திருப்பித் தாருங்கள்’ என்று கத்தினார்கள். என்ன செய்ய முடியும்? எத்தனை பேருக்கு புரிய வைப்பது?” என்று தன் அனுபவத்தை அவனுக்குச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.

உங்களுக்கு நேர்ந்ததை மற்ற பெண்களுக்கு நடக்க விடாதீர்கள். உங்கள் கதைகளை உங்கள் மகன்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் (share your story with your son) என்ற பிரச்சாரத்தை முன்வைத்து இந்த வீடியோ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையையும் பாகுபாட்டையும் தடுப்பதற்காகச் செயல்படும் ‘பிரேக் த்ரூ’(Breakthrough) என்னும் மனித உரிமைகள் அமைப்பு இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது.

இந்த வீடியோ, ஐம்பது நொடிகள்தான் ஓடுகிறது. ஆனால், பல உண்மைகளைப் பொட்டில் அடித்தாற்போல் உரக்கச் சொல்கிறது. அன்றாட வாழ்க்கையில், பொது இடங்களில் பெரும்பாலான பெண்கள் ஏதொவொரு விதத்தில் பாலியல் தொந்தரவுகளைச் சந்திக்கிறார்கள். பொது இடங்களில் சந்திக்கும் இந்த மாதிரி தொந்தரவுகளைத் தவிர்க்கவே முடியாது என்று நினைத்துதான் பெரும்பாலான பெண்கள் அன்றாடம் கடந்து செல்கிறார்கள். அதைத்தான் இந்த வீடியோவும் விளக்குகிறது. ஆனால், இந்தப் பிரச்சினைக்கான தீர்வும் இந்த வீடியோவிலேயே அடங்கியிருப்பது சிறப்பு.

பெண்கள் விரும்பும் சமூக மாற்றத்தை, முதலில் அவர்களுடைய மகன்களிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்பதை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறது இந்த வீடியோ. ஒவ்வொரு தாயும், பதின்பருவத்தில் இருக்கும் தங்கள் மகன்களுக்கு விளையாட்டுச் செயலுக்கும், பாலியல் தொந்தரவுக்கும் இருக்கும் வித்தியாசத்தைப் புரியவைக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வீடியோ உணர்த்துகிறது. மகன்கள் விளையாட்டாக நினைத்துச் செய்யும் பல விஷயங்கள் விளையாட்டாக இருப்பதில்லை. இந்த வீடியோவில் வரும் இளைஞன், தன் அம்மாவின் அனுபவத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைவான். தன்னுடைய செயல் எவ்வளவு தவறானது என்பதை அவன் புரிந்துகொள்வான்.

‘பசங்கன்னா, அப்படிதான் இருப்பாங்க’ என்ற கருத்தைச் சொல்லியே குடும்பங்கள் மகன்களின் தவறான செயல்களை நியாயப்படுத்துகின்றன. இதை உடைப்பது அம்மாக்களின் கைகளில்தான் இருக்கிறது என்பதை இந்தப் பிரச்சாரம் ஆணித்தரமாக முன்வைக்கிறது.

இந்தப் பிரச்சாரத்தில், அனைவரும் கலந்துகொள்ளலாம். நீங்கள் உங்கள் மகன்களிடம் பகிர்ந்துகொண்ட அனுபவங்களை ‘பிரேக் த்ரூ’ அமைப்புக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் - shareyourstory@breakthrough.tv

வீடியோ