Published : 08 Nov 2015 12:57 PM
Last Updated : 08 Nov 2015 12:57 PM
பூட்டன், பாட்டன், தந்தை இவர்கள் அனைவரும் பரம்பரையாகச் செய்துவந்த விவசாயத்தை நாம் ஏன் புறக்கணித்தோம் என்ற கேள்வி திவ்யாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. எம்.பி.ஏ., முடித்துவிட்டு மாதம் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் சம்பாதித்த திவ்யாவை விவசாயத்தை நோக்கித் திருப்பியது எது?
திவ்யாவின் சொந்த ஊர், சென்னிமலையை அடுத்த கவுண்டன்பாளையம். அப்பா வாசுதேவனுக்கு விவசாயமும் வியாபாராமும் தொழில். அம்மா சுசீலா, இல்லத்தரசி. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஆறரை ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார் திவ்யா. கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் ஏதோ ஒரு போதாமை உணர்வு அவரது மனதுக்குள் நெருடிக்கொண்டே இருந்தது.
“அப்பாவுக்கு வியாபாரத்துல ஆயிரம்தான் வருமானம் வந்தாலும் எங்க தென்னந்தோப்புல இருந்து கிடைச்ச வருமானத்தைதான் என் படிப்பு செலவுக்குக் கொடுப்பார். ஒரு நாள் அதைப் பத்தி யோசிச்சப்பதான் விவசாய வருமானம் எவ்வளவு தனித்துவமானதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். நாமளும் விவசாயத் துறையில ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. நாலு மாசம் ஒரு பயோ டெக் கம்பெனியில வேலை பார்த்திருந்ததால, விவசாயத்தைப் பத்தியும் விவசாயிகளோட நிலை பத்தியும் என்னால ஓரளவுக்குப் புரிஞ்சுக்க முடிஞ்சது” என்று சொல்லும் திவ்யா, தான் பார்த்துவந்த வேலையைத் துறந்தார். கோயம்புத்தூரில் விவசாய ஆலோசனை மையம் தொடங்கும் திவ்யாவின் முடிவுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு.
“என்னோட இந்த முடிவை எல்லாருமே எதிர்த்தாங்க. ‘ஏ.சி. ரூம்ல உட்கார்ந்து வேலை பார்த்த நீ, சேத்துல இறங்கி வேலை செய்வியா?’ன்னு என் கணவரே கேட்டார்” - சொல்லும்போதே சிரிப்பு பொங்குகிறது திவ்யாவுக்கு. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்திவிட்டுத் தன் வேலைக்கான அடுத்த கட்டப் பணியில் இறங்கினார்.
விவசாயம் ஏன் மங்கியது?
“நம் அடிப்படைத் தேவையான உணவைத் தருவது விவசாயம்தான். ஆனால், நம் நாட்டில் விவசாயிகளின் நிலை என்ன? ஒரு காலத்தில் ஒட்டுமொத்த சமூகமும் விவசாயத்தைத் தொழிலாகச் செய்துகொண்டிருந்த நிலை மாறி, இன்று ஏன் அனைவரும் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர்? விவசாயிகள் கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோவது எதனால்? உற்பத்தி குறைவதும், விவசாயப் பொருட்களின் விலை சரிவதும் என்ன கணக்கு? இப்படி என் மனசுக்குள்ளே ஆயிரம் கேள்விகள். இதற்கெல்லாம் விடை தேடிப் புறப்பட்டேன்” என்று சொல்லும் திவ்யா, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்தார். ஒவ்வொரு கிராமமாகச் சென்று விவசாயிகளைச் சந்தித்தார்.
“நம் பாரம்பரிய விவசாய முறையை மறந்ததும், ரசாயன உரங்களால் மண்ணின் வளம் மங்கியதும்தான் விவசாயத்தின் சரிவுக்கான முக்கிய காரணங்கள். பருவ மழை பொய்த்துப்போவது, விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காதது, கிடைத்தாலும் அவர்களுக்குப் போதிய கூலி தர முடியாதது என்று ஏகப்பட்ட சிக்கல்கள். இதற்கெல்லாம் தீர்வு சொல்கிற மாதிரி ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்பதற்காக, ‘அக்ரோ க்ரீன் பயோலைஃப்’ என்ற விவசாய ஆலோசனை மையத்தைத் தொடங்கினேன். முன்னோடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதுதான் எங்கள் நோக்கம். முழுப் பயிர் பராமரிப்புத் திட்டம் அதில் ஒன்று” என்று சொல்கிறார் திவ்யா.
பெண்களால் இயங்கும் மையம்
இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த ஆலோசனை மையத்தின் ஆலோசகர்களாக இருக்கிறார்கள். பல மாநிலங்களில் இருக்கும் இயற்கை வேளாண் இடுபொருள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார் திவ்யா. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டது திவ்யாவின் வேளாண் அறிவை விசாலமாக்கியது. விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கவும், அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் இங்கே விவசாய மருத்துவர்கள் இருக்கிறார்கள். முழுக்க முழுக்கப் பெண் ஊழியர்களைக் கொண்டு செயல்படுவது இந்த மையத்தின் இன்னொரு சிறப்பம்சம்!
“ஆரம்பத்தில் விவசாயிகள் அத்தனை சீக்கிரம் என்னை ஏற்றுக்கொள்ள வில்லை. ‘இந்த சின்னப் பொண்ணுக்கு விவசாயத்தைப் பத்தி என்ன தெரியும்? ஏதோ தலைவரு கூப்பிட்டாரேன்னு வந்திருக்கோம்’னு பேசிக்கொண்டது எனக்கும் கேட்டது. இதற்காகவெல்லாம் பின்வாங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். நான் சொல்ல வேண்டியதை அவர்களுக்குப் பொறுமையாக விளக்கினேன். முதலில் சோதனை முயற்சியாக 100 தென்னை மரங்களையும் ஒரு ஏக்கர் நிலத்தையும் எடுத்துக்கொண்டேன். அவற்றின் மகசூலைப் பார்த்த விவசாயி, அடுத்த முறை ஐநூறு தென்னை மரங்களுக்கு என்னிடம் இடுபொருட்கள் வாங்கினார். தென்னையின் வளர்ச்சியைப் பார்த்த விவசாயிகள், ‘வாழைக்கும் இது பொருந்துமா?’ என்று என்னிடம் கேட்டார்கள். இதுதான் என் வெற்றி!” என்று பூரிக்கிறார் திவ்யா. வாழை, தக்காளி, மஞ்சள், கரும்பு, நெல் என்று அடுத்தடுத்து தன் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டது இவரது ஆலோசனை மையம்.
இது முன்னோடி விவசாயிகளுக்கான மையம் என்பதால், பெரிய அளவில் விவசாயம் செய்கிறவர்களும் போன் மூலம் தகவல் பெறுவோரும் பயனாளிகளாக இருக்கிறார்கள். தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அடிப்படை உறுப்பினர்களோடு செயல்படுகிறது இந்த மையம்.
“கூலித் தொழிலாளி களுக்குக்கூட ஆண்டு வருமானத்தைக் கணக்கிட்டுவிட முடியும். ஆனால் விவசாயிகளுக்கு அப்படியொரு வருமானத்தை அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? அவர்களும் மாத வருமானம் பெற்றால் எப்படியிருக்கும்? அந்த எண்ணத்தில் உதித்ததுதான் ‘பப்பாளி சாகுபடி திட்டம்’. இதில் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் தருகிறோம். 14 ஏக்கரில் ஆரம்பித்த இந்தத் திட்டம் இப்போது 50 ஏக்கராக உயர்ந்திருப்பது, விவசாயிகளிடம் அதற்கு இருக்கும் வரவேற்பையே காட்டுகிறது” என்று தன் புதிய திட்டத்தைப் பற்றிச் சொல்கிறார் திவ்யா.
இல்லத்தரசிகளுக்கும் வருமானம்
விவசாய நிலம் இல்லாதவர்களின் வீட்டைச் சுற்றியும் மாடியிலும் தோட்டம் அமைக்கவும் இவர்கள் உதவுகிறார்கள். மண்ணில்லா விவசாயத்துக்குக் கைகொடுக்கும் தென்னை நார் கழிவு, பலவிதமான இயற்கை உரங்கள், விதைகளையும் விற்பனை செய்கின்றனர். தென்னை நார் கழிவிலிருந்து பல்வேறு அளவிலும் வடிவிலும் செய்யப்படுகிற செங்கல் போன்ற கட்டிகள் 100 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் தண்ணீர் ஊற்றினால் உப்பிப் பெருத்துவிடும். அதில் விதையைத் தூவி, மண் புழு உரத்தை இட்டால் போதும். இந்தத் தென்னை நார் கழிவு, ஈரத்தைக் கசியவிடாது என்பதால் மாடி பாழாகுமே என்ற கவலையும் இல்லை.
“பூச்சிவிரட்டிகள்கூட இயற்கைப் பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கிறோம். நம் பாரம்பரிய கீரை வகைகளான காசினி கீரை, சர்க்கரவர்த்தினி கீரை போன்றவற்றுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு. தக்காளி, வெண்டை, வெங்காயம், முருங்கை, பாகல், புடலை, கொத்தவரை, மிளகாய், முள்ளங்கி, பீட்ரூட், கோஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லி என்று அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கலாம். இப்போது இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளுக்கு அமோக வரவேற்பு என்பதால் சிலர் அதிக அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்து, தங்கள் வருமானத்தைப் பெருக்குகின்றனர்” என்கிறார் திவ்யா.
படங்கள்: ஜெ. மனோகரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT