Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM
உலக உழைக்கும் மகளிர் நாள்: மார்ச் 8
பெண்களுக்குப் பல உரிமைகள் இன்றைக்குக் கிடைத்திருக்கும் நிலையில் ‘உலக உழைக்கும் மகளிர் நாள்’ கொண்டாட்டம் தேவையா எனவும் இது வெறும் சடங்காகக் கொண்டாடப்படும் நாளாகிவிட்டது எனவும் சிலர் நினைக்கலாம். உண்மையில் இந்த நாளின் நோக்கம் குறித்து சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் அழுத்தமாகச் சொல்ல வேண்டிய அவசியம் எல்லா காலத்திலும் இருக்கிறது என்பதைத்தான் நம் சமூகத்தில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
16 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது தொடர்பான வழக்கு ஒன்றில் அண்மையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து இதற்கு சமீபத்திய சான்று.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது அரசு ஊழியர் ஒருவர், பாலியல் வல்லுறவு வழக்கில் தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கின்மீதான விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட நபரிடம், “உங்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை மணந்துகொள்ளத் தயாரா?” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே கேட்டார். கூடவே, “அந்தப் பெண்ணை மணந்துகொள்ளும்படி நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. உங்கள் விருப்பத்தைத்தான் கேட்கிறோம்” என்றும் சொல்லியிருக்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கிராமங்களின் ஆலமரத்தடியில் வழங்கப்பட்ட தீர்ப்பைப் போலவே இருக்கும் இந்தச் சொற்கள், 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் உதிர்க்கப்பட்டிருக்கின்றன என்பது எதை உணர்த்துகிறது?
எல்லாவற்றையும் பகுத்தறிந்து நீதியைப் பரிபாலனம் செய்யவேண்டிய இடத்தில் இருக்கிறவர்களுக்கே இப்படியான சிந்தனைதான் இருக்கிறது என்றால், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?
பெண்களுக்காக ஆண்கள் பேசுவது அதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றாது என்பதால் தான் உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி, நீதி வழங்கும் உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றம்வரை பெண்களின் பங்களிப்பு அவசியம் என்கிறோம். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருமே பெண்களுக்கு ஆதரவாகவும் பாலினப் பாகுபாட்டைக் களைகிறவர்களாகவும் இருப்பதில்லை. மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றப் பெண் நீதிபதி ஒருவர் அளித்த தீர்ப்பை அதற்குச் சான்றாகச் சொல்லலாம். 12 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியது தொடர்பான விசாரணையில், ‘ஆடை அணிந்திருக்கும் சிறுமியைத் தகாத முறையில் தொடுவது பாலியல் சீண்டல் அல்ல’ என்று அவர் சொல்லியிருந்தார். பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அந்தத் தடையை விதித்த நீதிபதிகள்தாம், ‘வல்லுறவுக்கு ஆளாக்கிய பெண்ணையே மணந்துகொள்கிறாயா?’ என்று குற்றம் சாட்டப்பட்டவரிடம் இப்போது கேட்டிருக்கின்றனர்.
சமூகநீதிக்கான நாள்
சமூகத்தின் அனைத்து நிலைகளி லும் ஆண்களால் நிகழ்த்தப்படும் வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் குறைந்தபட்ச நம்பிக்கையை அவ்வப்போது தருபவை யாக நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஆனால், அங்கே வழங்கப்படும் தீர்ப்பு களிலேயே இப்படியான பாரபட்சம் இருக்கிறபோது, பெண்களின் பாதுகாப்பு குறித்த நம்பிக்கை தகர்ந்துபோவதும் அதை மீட்டெடுப்பதற்கான செயல்களில் ஈடுபடுவதும் இயல்புதானே. அந்த வகையில்தான் மகளிர் நாள் கொண்டாட்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீதிமன்றம் மட்டுமல்ல; அனைத்துத் தளங்களிலும் பெண்ணுக்குச் சம உரிமையும் சமூகநீதியும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கம்.
உலக உழைக்கும் மகளிர் நாள் கொண்டாட்டம் என்பது பெண்ணுரிமை முழக்கம் சார்ந்தது மட்டுமல்ல. ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். இவற்றில் 1917 மார்ச் 8 அன்று நடந்த ரஷ்யப் பெண்களின் போராட்டத்தின் நினைவாகக் கொண்டாடப்படுவதுதான் மகளிர் நாள். அவர்கள் ஆணுக்கும் சேர்த்தேதான் அன்று போராடினார்கள். அதனால், சமூக அவலங்களைக் களைவதற்கான வேலைகளை முன்னெடுப்பதற்கான நாளாகவும் இந்த நாளைக் கடைப்பிடிப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT