Published : 29 Nov 2015 02:33 PM
Last Updated : 29 Nov 2015 02:33 PM

இருளுக்கு இங்கே இனி என்ன வேலை? -வலி தாங்கினால் வழி பிறக்கும்! - புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த போராளியின் உண்மைக் கதை

(தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் கவிதாவின் கதை இது. தான் கடந்துவந்த பாதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்)

ஆபரேஷன் முடிஞ்சு ரொம்ப நேரம் வரைக்கும் நான் மயக்க மருந்தோட பிடியிலதான் இருந்தேன். அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்தேன். வலது பக்கம் ஏதோ பாறாங்கல்லை வைத்து அழுத்தினது மாதிரி வலி. ராமனைப் பார்த்ததுமே, ‘கண்டேன் சீதையை’ன்னு சொன்னாராமே அனுமன். அப்படி நான் கண்ணைத் திறந்ததுமே, ‘no cancer'னு சொன்னார் சுப்பையா டாக்டர். ‘புற்றுநோய் கட்டியை நீக்கியாச்சு’ன்னு அவர் சொனனர். அதுதான் நான் கண் விழித்து கேட்ட முதல் குரல்.

அந்த நொடி எனக்கு வலியெல்லாம் மறைஞ்சு லேசா சிரிப்பு வந்தது. அப்புறம் அப்படியே பார்வையை நகர்த்தினேன். என்னைச் சுத்தி அம்மா, கணவர், அக்கா, அப்பா, பாப்பா எல்லாருமே நின்னுக்கிட்டு இருந்தாங்க. எனக்காக இத்தனை பேர் இருக்காங்களேன்னு கொஞ்சம் கர்வமாவும் இருந்துச்சு. என்னைப் பார்த்ததுமே அம்மாவுக்குத்தான் அழுகையை அடக்க முடியவில்லை. ரொம்ப அழுதுட்டாங்க. அம்மணி டாக்டர்தான் அம்மாவைச் சமாதானப்படுத்தினாங்க.

எனக்கு ஏதோ பிரசவம் ஆன மாதிரி என் கணவர் ரொம்ப பரபரப்பா இருந்தார். ‘உனக்கு கேன்சர் இல்லை’ன்னு அவர் சொன்ன தொனி, ‘நமக்கு பொண்ணு பொறந்திருக்கா’ன்னு அவர் சொன்ன நாளை நினைவுபடுத்துச்சு. அவரோட பரபரப்பையும் பேச்சையும் பார்க்கும்போது எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. நான் சிரிச்சதைப் பார்த்துட்டு சுப்பையா டாக்டர், ‘இந்த மன உறுதிதான் வேணும். இது இருந்துச்சுன்னா கேன்சர் உன் பக்கத்துலயே வராதும்மா’ன்னு சொன்னார். ‘ரொம்ப தேங்க்ஸ் சார்’னு சொன்னேன். எனக்கு குரலே வரலை. உடனே டாக்டர், ‘உன்னால பேசக்கூட முடியலை. இப்போ நான் உன்னை தேங்க்ஸ் கேட்டேனா. பேசாம இரும்மா’ன்னு சொன்னார். எனக்கு அதுக்கும் சிரிப்புதான் வந்தது.

என்னை ஓய்வெடுக்க சொல்லிட்டு, அவர் என் கணவர்கிட்டே பேசிக்கிட்டு இருந்தார். என் கணவர் ஐ.டி. துறையைச் சேர்ந்தவர்ங்கறதால அதைப் பத்தி அவர்கிட்டே ஏதோ பேசிக்கிட்டு இருந்தார். அரை மயக்கத்துல இருந்த எனக்கு எதுவும் சரியா கேட்கலை. ‘நான் வேணும்னா என் வேலைய விட்டுட்டு வந்துடறேன். உங்க ஐ.டி. துறையில ஏதாவது வேலை போட்டுக் கொடுங்க. ரிஷப்ஷன்ல நிக்கற வேலைன்னாலும் பரவாயில்லை’ன்னு அவர் ஜாலியா பேசினது ஏதோ கிணத்துக்குள்ளே இருந்து பேசற மாதிரி இருந்தது. இப்படி எல்லாருமே ரொம்ப இயல்பா இருந்தாங்க. அந்த இயல்புதான் எனக்கு எதுவும் ஆகாதுங்கற நம்பிக்கையைக் கொடுத்துச்சு.

என்னைச் சுத்தியிருந்தவங்க முகத்துல கவலை இருந்தாலும், அதை மீறின ஒரு நிம்மதியைப் பார்க்க முடிஞ்சது. எனக்கு நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சதுக்கான நிம்மதி அது. எனக்குத் தொண்டையில ஏதோ பண்ற மாதிரி இருந்தது. வாந்தி வர்ற மாதிரியும் இருந்தது. ஆபரேஷன் பண்ணின இடத்துல இருந்து தேவையில்லாத திரவம் வெளியேறும். அதுக்காக மெல்லிசா ஒரு குழாயை இணைச்சிருந்தாங்க.

மெல்லிசா ஒரு குழாய்னு சொல்றேனே தவிர வலி உயிர் போயிடும். கையை லேசா அசைச்சாலும் அந்தக் குழாயோட முனை, உள்ளுக்குள்ளே குத்தறப்போ ரண வேதனையா இருக்கும். ரெஸ்ட் ரூம் போறதுன்னாகூட அந்தக் குழாயையும் அதோட இணைச்சிருக்கற டப்பாவையும் கையில எடுத்துக்கிட்டுத்தான் போகணும்.

ஆனா அந்த வேதனையை நான் வெளிக்காட்டிக்கலை. ஏற்கனவே எல்லாரும் பயந்துபோய் இருக்காங்க. நான் வேற எதுக்கு அவங்களை இன்னும் கொஞ்சம் பயமுறுத்தணும்? என் குட்டிப் பாப்பாவுக்கு அந்த இணைப்பு குழாயைப் பார்க்கறப்போ எப்படி இருந்துச்சோ. அம்மா உடம்புல ஏதோ வித்தியாசமா இருக்குன்னு நினைச்சு, அதைப் பிடிச்சு இழுக்கறதுக்காக ஆர்வத்தோட வருவா.

அம்மாவுக்கு வலிக்கும்டா செல்லம்னு சொன்னா, எல்லாமே புரிஞ்சவ மாதிரி தலையாட்டுவா. நான் கொஞ்சம் அசந்த நேரம் குழாயைப் பிடிச்சு இழுத்துடுவா. அவ கையில சிக்காம, கண்ணுல படமா அதைக் காப்பாத்துறதுக்குள்ளே போதும் போதும்னு இருக்கும். கிட்டத்தட்ட ஒரு மாசம் வரைக்கும் இப்படி திரவம் வெளியேறும்னு சொன்னாங்க. அதுவரைக்கும் இந்த வலியை எப்படித் தாங்கிக்கறதுன்னு மலைப்பா இருந்துச்சு.

ஆபரேஷன் நடந்த மறுநாளே எனக்கு வீட்டுக்குப் போகணும்னு தோணுச்சு. நான் டாக்டர்கிட்டே சொன்னேன். இன்னும் ஒரு நாள் பொறுத்துக்கோங்க, மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகிடலாம்னு சொன்னார். நாளெல்லாம் ஆஸ்பத்திரி படுக்கையில படுத்துக்கிட்டு இருக்கறது எவ்வளவு பெரிய கொடுமைன்னு அதை அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். சரி, இதே நிலை எப்பவும் நீடிக்காதுன்னு நினைச்சு மனசை நல்ல விஷயங்களை நோக்கி வழிநடத்தினேன்.

ஆபரேஷன் முடிஞ்ச பிறகு காலேஜ் போகலாம்னு டாக்டர் சொன்னாரே, உடம்போட இணைச்சிருக்கற இந்தக் குழாயோட எப்படி போகமுடியும்னு யோசிச்சேன். நடிகர் திலகம் சிவாஜி மாதிரி சால்வை போட்டு கையை மறைச்சிக்கிட்டு காலேஜ் போனா என்னன்னு என் கணவர் ஒரு ஐடியா கொடுத்தார். எனக்கு சிரிப்பு தாங்கலை.வலியை மீறி சிரிச்சிட்டேன்.

மறுநாள் டிஸ்சார்ஜ். வீட்டுக்குள்ளே நுழையும்போது நான் நோயாளிங்கற நினைப்பை வெளியே விட்டுட்டுதான் நுழைஞ்சேன். பாப்பா எப்பவும் தரையிலதான் விளையாடிக்கிட்டு இருப்பா. அதனால அவ வாயில எதையும் எடுத்து வச்சிடக் கூடாதுன்னு பொதுவாவே ஒரு நாளுக்கு நாலஞ்சு முறையாவது வீட்டைக் கூட்டுவேன். வலது கைக்கு அடியிலதான் குழாயை இணைச்சிருந்தாங்க.

அதனால இடது கையால சின்னச் சின்ன வேலைகளைச் செய்தேன். அப்படி ஏதாவது செஞ்சா அம்மாவுக்குக் கோவம் வந்துடும். ‘சும்மாவே இருக்க மாட்டியா? மத்த வேலைகளை எல்லாம் நாங்க பார்த்துக்கறோம். நீ நல்லா ஓய்வெடு’ன்னு அன்பா கண்டிப்பாங்க. இருந்தாலும் என்னால முடியற வேலைகளை செய்துகிட்டுதான் இருந்தேன்.

அம்மா இப்படின்னா, என் கணவர் அதுக்கும் மேல. ஆபரேஷன்ல நிறைய ரத்தம் வீணாகியிருக்கும். இன்னும் கீமோதெரபி வேற இருக்கே, அதனால உடம்பைத் தேத்தணும்னு நிறைய பழங்கள் வாங்கிட்டு வருவார். கேன்சர் வராம தடுக்கற சத்துக்கள் நிறைந்த உணவு என்னன்னு எல்லார்கிட்டேயும் கேட்டு, அதுக்கேத்த மாதிரி என் உணவுப் பட்டியலைத் தயார் செஞ்சு கொடுப்பார்.

சில சமயம் நான் வேணாம்னு சொன்னாலும் கேட்க மாட்டார். ஊட்டியாவது விட்டுடுவார். என் அக்கா நேரம் கிடைக்கறப்போ எல்லாம் என்கிட்டே பேசுவா. தப்பித் தவறிகூட ஆஸ்பத்திரி பத்தியோ டிரீட்மென்ட் பத்தியோ பேச்செடுக்க மாட்டா. என்னை உற்சாகப்படுத்துற விஷயங்களை மட்டுமே பேசுவா. நான் ஓரளவு தேறினதும் உடம்புல இணைச்சிருந்த குழாயை 25 நாள் கழிச்சு எடுத்துட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல கீமோதெரபி.

- மீண்டும் வருவேன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x