Published : 08 Nov 2015 12:42 PM
Last Updated : 08 Nov 2015 12:42 PM
இந்தியச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் பல்வேறு புகைப்படங்கள், பிம்பங்கள் இருக்கின்றன. அவற்றுள் இரோம் ஷர்மிளாவின் பிம்பம் மிக முக்கியமான ஒன்று. உணவு செலுத்துவதற்காக நாசித் துவாரத்தினுள் நிரந்தரமாக, வலுக்கட்டாயமாகச் செலுத்தப்பட்ட குழாயுடன் இரோம் ஷர்மிளாவின் புகைப்படத்தைப் பார்க்கும் யாருக்கும் நம் ஜனநாயகத்தைப் பற்றி இருக்கும் கொஞ்சநஞ்சப் பெருமிதமும் போய்விடும். அதுவும், அத்தனை வேதனையுடனும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் அவரது புகைப்படங்கள் நம்மைத் தூங்க விடாமல் செய்பவை. இத்தனை இருந்தும் உண்மையில் நம் ஜனநாயகத்தின் மிகச் சிலப் பெருமிதங்களுள் ஒருவர் இரோம் ஷர்மிளா. அது மட்டுமல்ல; அந்த ஜனநாயகத்தின் மனசாட்சியை நோக்கி விடுக்கப்பட்ட சவால்களுள் ஒன்று அவர் என்பதுதான் உண்மை.
இரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து 15 ஆண்டுகள் முடிவுற்ற தருணத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் லோக் ஆயுக்தாவுக்காகவும் மதுவிலக்குக்காகவும் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்திருக்கிறார் குருசரண் சப்ரா. கடந்த மாதம் காந்தி ஜெயந்தியன்று ஆரம்பித்த அவரது போராட்டம் அவரது உயிரிழப்பில் போய் முடிந்திருப்பது இந்த தேசத்தில் அகிம்சை வழியிலான போராட்டங்களுக்கு என்ன இடம் என்ற கேள்வியை மறுபடியும் எழுப்பியிருக்கிறது. இந்த நம்பிக்கைக் குலைவெல்லாம் வெறும் பார்வையாளர்களாக இருந்து ஆதங்கப்படும் நமக்குத்தான். இரோம் ஷர்மிளாவோ 15 ஆண்டுகளாகத் தனது நம்பிக்கையிலிருந்து சிறிதும் பெயராமல் உண்ணாவிரதம் இருக்கிறார். ஏமாற்றங்கள், துயரங்கள், வருத்தங்கள், சமூகத்தின் பாராமுகம் என்று எல்லாவற்றையும் சந்தித்திருந்தாலும் தனது போராட்டத்தை இடைவிடாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார். உலகத்திலேயே முன்னுதாரணம் இல்லாத போராட்டம்! உலகத்திலேயே முன்னுதாரணம் இல்லாத போராளி!
மணிப்பூர், அஸ்ஸாம் உள்ளிட்ட ஏழு சகோதரிகள் மாநிலங்களில் இந்திய அரசின் அத்துமீறலை எதிர்த்தும், தங்களுக்குள் எதிர்த்துக்கொண்டும் ஏராளமான வன்முறை இயக்கங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலின் மத்தியில், போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த இரோம் ஷர்மிளாவுக்கு அகிம்சைப் பாதை என்பது கைக்குச் சட்டென்று அகப்படும் ஒரு தெரிவாக இருந்திருக்க முடியாது. ஆனாலும், அவர் அகிம்சைப் பாதையைத்தான் தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் எவ்வளவு எளிய மனிதருக்கும் உரித்தான ஒரே போராட்ட முறை அதுதான். எளிதாக இருக்கும் அதே நேரத்தில் மிக மிகக் கடினமானதும் அதுதான். தொடங்குவது எளிது, நீடித்திருப்பது மிக மிகக் கடினம். இந்த அகிம்சை வழிப் போராட்டத்தின் உச்சபட்ச வடிவமொன்றைத்தான் இரோம் ஷர்மிளா தேர்ந்தெடுத்திருக்கிறார்.
மணிப்பூர், அஸ்ஸாம் உள்ளிட்ட ஏழு சகோதரிகள் மாநிலங்களில் இந்திய அரசின் அத்துமீறலை எதிர்த்தும், தங்களுக்குள் எதிர்த்துக்கொண்டும் ஏராளமான வன்முறை இயக்கங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலின் மத்தியில், போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த இரோம் ஷர்மிளாவுக்கு அகிம்சைப் பாதை என்பது கைக்குச் சட்டென்று அகப்படும் ஒரு தெரிவாக இருந்திருக்க முடியாது. ஆனாலும், அவர் அகிம்சைப் பாதையைத்தான் தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் எவ்வளவு எளிய மனிதருக்கும் உரித்தான ஒரே போராட்ட முறை அதுதான். எளிதாக இருக்கும் அதே நேரத்தில் மிக மிகக் கடினமானதும் அதுதான். தொடங்குவது எளிது, நீடித்திருப்பது மிக மிகக் கடினம். இந்த அகிம்சை வழிப் போராட்டத்தின் உச்சபட்ச வடிவமொன்றைத்தான் இரோம் ஷர்மிளா தேர்ந்தெடுத்திருக்கிறார்.
2000 நவம்பர் 2-ம் தேதி இந்திய ஆயுதப் படையினரால் மணிப்பூரில் 6 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டு அளவில்லா வேதனை அடைகிறார் இரோம் ஷர்மிளா. இந்தியாவுக்குள் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருக்கும் ‘ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்ட’த்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட படுகொலை இது. இந்த சட்டம் நீக்கப்படும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார் இரோம் ஷர்மிளா. இத்தனைக்கும், வட கிழக்குப் பிரதேசத்தின் மாநிலங்களில் தனிநாடு கோரிக்கைகள் மிகவும் தீவிரமாக முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் அவற்றுடன் உடன்பாடில்லாதவர் இரோம் ஷர்மிளா. இந்தியாவுக் குள்ளேயே ஒரு சுதந்திர வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். ஜனநாயக நாட்டினுள் இருக்கும் சர்வாதிகாரச் சட்டம் ஒன்றை நீக்க வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. அதற்காகத்தான் இந்த உண்ணாவிரதம்.
எல்லோருடைய உண்ணாவிரதத்தையும் போலல்ல இது. உணவு, நீர் போன்றவற்றைத் தொடாததுடன் ‘ஆயுதப்படை சட்டம்’ நீக்கப்படும்வரை தலைசீவவோ, கண்ணாடியில் முகம் பார்க்கவோ போவதில்லை என்றும் அறிவித்தார் இரோம் ஷர்மிளா. அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துச் சில நாட்களிலேயே தற்கொலை முயற்சி வழக்கில் சிறைவைக்கப்பட்டார். உண்மையில் அவர் ஈடுபட்டது தற்கொலை முயற்சி அல்ல. வாழ்வதற்கான முயற்சிதான் அது. தற்கொலை எண்ணம் இருந்திருந்தால் உண்ணாவிரதத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. மகிழ்ச்சிகரமான வாழ்க்கை யொன்றுக்கான கனவுதான் அவரது உண்ணாவிரதம். தற்கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டில் அவரைக் கைதுசெய்து, வலுக்கட்டாயமாக மூக்கின் வழியாக திரவ உணவைச் செலுத்திவருகிறார்கள். அவ்வப்போது விடுதலை செய்து, மறுபடியும் கைதுசெய்துவிடுவார்கள். அப்படி ஒருமுறை விடுதலை செய்யப்பட்டபோது டெல்லியின் ராஜ்காட்டுக்குச் சென்று, தனது ஆதர்ச மனிதர் காந்தியின் கல்லறையில் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இரோம் ஷர்மிளா யார் மீதும் வன்முறையை ஏவவில்லை. பெரும் வன்முறையொன்றை எதிர்த்துத் தன் உடல் மீது தானே வன்முறையை ஏவிக்கொள்கிறார். இப்படிப்பட்ட வன்முறைக்குப் பெயர்தான் அகிம்சை. எதிர்த் தரப்பின், பொதுச் சமூகத்தின் மனசாட்சியை அசைப்பதுதான் இந்த வழிமுறையின் நோக்கம். இந்த வழிமுறையின் மூலமாகப் போராளி தன் தார்மிக நியாயத்தை வலுப்படுத்திக்கொள்வதுடன் எதிர்த் தரப்புக்கு எந்த தார்மிக நியாயமும் இல்லாமல் உரித்தெடுத்துவிடுகிறார். நம் இந்திய ஜனநாயகச் சமூகத்தின் அனைத்து தார்மிக நியாயங்களையும் மணிப்பூரைச் சேர்ந்த எளிய பெண் தனது இரும்பு உறுதியால் அபகரித்துவிட்டார். ஒரு அசாத்தியமான தருணத்தில் மிகச் சிறந்த காந்தியர்கள் காந்தியைத் தாண்டிச் செல்வதாகச் சொல்லப்படுவதுண்டு. இரோம் ஷர்மிளா காந்தியைத் தாண்டிய காந்தியர். காந்தியின் மகத்தான பேத்தியாக இரோம் ஷர்மிளா ஆன கதை இதுதான்.
இரோம் ஷர்மிளா போன்ற ஒரு போராளியை உருவாக்கியது நம் ஜனநாயகத்தின் பெருமிதம் என்றால் இப்படி ஒரு போராளி உருவானதற்குப் பின்னுள்ள காரணம் நம் ஜனநாயகத்தின் அவமானம். நம் பெருமிதத்தைக் கொண்டு எப்போது நம் அவமானத்தைத் துடைத்தெறியப்போகிறோம்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment