Published : 01 Nov 2015 12:39 PM
Last Updated : 01 Nov 2015 12:39 PM
கைவினைப் பொருட்களை உருவாக்கி, அவற்றை உள்ளூர் முதல் வெளிநாடுகள்வரை விற்பனைக்கு அனுப்பி வெற்றிகரமான தொழில்முனைவோராகப் பிரகாசித்துவருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த அனுராதா. பெண்கள் நினைத்தால் தங்கள் சொந்தக் காலில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கை வரிகளோடு பேசத் தொடங்குகிறார் அனுராதா.
"கடலூரில் பட்டப்படிப்பு முடித்தவுடன் திருமணமாகி புதுச்சேரி வந்தேன். இரண்டு குழந்தைகள். சிறு வயதிலேயே கைவினைப் பொருட்கள் மீது அதிக விருப்பம். குழந்தைகள் ஓரளவு வளர்ந்தபிறகு கைவினைப் பொருட்கள் செய்யலாம் என்று நினைத்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்தியன் வங்கி சார்பில் நடந்த சுயவேலைவாய்ப்பு இலவசப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டேன். அங்கே சுயமுன்னேற்றப் பயிற்சியும் அளித்தார்கள்" என்று சொல்லும் அனுராதா, அந்தப் பயிற்சியின் மூலம் ஃபேஷன் நகைகள் தயாரிப்பு, அலங்கார தலையணைகள் செய்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். பிறகு தனது ஆர்வத்தால் டெரகோட்டா நகைகள், க்ளாஸ் பெயிண்டிங், ஆடைகளை அழகாய் வடிவமைக்கும் ஆரி வேலைப்பாடு எனப் பலவற்றையும் கற்றுக்கொண்டார்.
அனுராதா வடிவமைக்கும் பொருட்களின் நேர்த்தி அவரை ஒரு பயிற்சியாளராக உயர்த்தியது. இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் பயிற்சியாளராகச் செயல்படத் தொடங்கினார். பள்ளிகள், அரசுத் துறைகள், சிறார் இல்லம் ஆகியவற்றிலும் கைவினைப் பொருட்கள் உருவாக்கப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். வீட்டிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தினார்.
“என்னிடம் கைவினைத் தொழில்பயிற்சி கற்றவர்கள் சேர்ந்து ஒரு குழுவாகச் செயல்படுகிறோம். கைவினைப் பொருட்களுக்கு உலகளவில் நல்ல மதிப்பு உள்ளது. தரமானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். வெளிநாட்டு ஆர்டர்கள் என்றால் பெரிய தொழில் நிறுவனங்கள் வைத்திருப்பவர்களுக்குத்தான் கிடைக்கும் என்பதில்லை.
எளிமையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் கைவினைப் பொருட்களுக்கும் நல்ல வரவேற்பு உண்டு. அதனால் பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் எங்களுக்கு ஆர்டர் வருகிறது. இந்த வெற்றிக்குக் கற்பனை வளம்தான் முக்கியம். மற்றவர்களைப் பார்த்து அப்படியே நகலெடுக்காமல் நம் கற்பனைக்கு ஏற்ப உருவாக்கினால் நல்ல வாய்ப்பு கிடைக்கும்” என்று சொல்லும் அனுராதா, லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு நேர்த்தியில்லாத கைவினைப் பொருட்களை உருவாக்கினால் தொடர்ந்து ஆர்டர் கிடைக்காது என்பதையும் பதிவுசெய்கிறார்.
“பெண்களுக்கு சுய வருமானம் அவசியம். நாம் சம்பாதித்த பணத்தில் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கித் தருவதே தனி இன்பம். நான் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை பேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் கொண்டுசேர்ப்பது என் குழந்தைகள்தான். கைவினைப் பொருட்கள் செய்யத் தேவையான பொருட்களை என் கணவர்தான் வாங்கித் தருகிறார். பெண்களுக்கு முன்பைவிட குடும்பத்தினர் ஆதரவு அதிகரித்திருப்பது முன்னேற்றத்துக்கான முதல் படி என்றே சொல்லலாம்” என்று புன்னகைக்கிறார் அனுராதா.
இவர் தஞ்சாவூர் ஓவியம், சுடுமண் நகைகள், சணல் நகைகள், பலவித விதைகளில் கலைப் பொருட்கள் எனப் பல்வேறுவிதமான கலைப் பொருட்களைச் செய்கிறார். தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயிற்சியளிப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது என்கிறார் அனுராதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT