Published : 29 Nov 2015 02:17 PM
Last Updated : 29 Nov 2015 02:17 PM
உலகில் எங்கெல்லாம் சமத்துவமின்மை நிலவியிருக்கிறதோ, எங்கெல்லாம் சமத்துவமின்மை தலைவிரித்தாட அரசுகள் அனுமதித்திருக்கின்றனவோஅங்கெல்லாம் பெண்கள் எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள்.
நாம்அணிவகுத்திருக்கிறோம், பட்டினி கிடந்திருக்கிறோம், மனுக்கள்போட்டிருக்கிறோம், கடிதங்கள் அனுப்பியிருக்கிறோம், சட்டங்களை உருவாக்கியிருக்கிறோம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நமது கோபத்தை இந்த உலகுக்குக் காட்டுவதற் காகவும் ஒரு படி மேலே போய் வழக்கத்துக்கு மாறாகவும், சேட்டைத்தனமாகவெல்லாம் எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறோம். ஒரு நூற்றாண்டுக்கும் முன்புதான், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்பதற்கான போராட்டம் உச்சத்தில் இருந்தது.
அப்போது பெண்கள் பொதுக்கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தும்,சங்கிலிகளில் தங்களைப் பிணைத்துக்கொண்டும், கலைப் படைப்புகளையும் பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தித் தங்கள் எதிர்ப்புகளைக் காண்பித்தார்கள். பெண்களின் நேரடி நடவடிக்கைகளும் எதிர்ப்புகளும் இந்த உலகை மாற்றியமைத்திருக்கின்றன; 1968-ல் ஃபோர்டு உற்பத்திப் பிரிவின் இயந்திரக் கையாளுநர்களின் வேலைநிறுத்தங்கள் காரணமாக இருபாலினருக்கும் சமமான ஊதியத்துக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் 1970-ல் நிறைவேறியதை ஒரு உதாரணமாகக் காட்டலாம். பெண்களின் நூற்றாண்டு காலப் போராட்டங்களிலிருந்து சில உதாரணங்கள் இங்கே:
கறுப்பு வெள்ளி, 18, நவம்பர் 1910
பெண்களுக்கு வாக்குரிமை கோரிப் போராடிய பெண்கள், பிரிட்டிஷ் பிரதமரின் பாரபட்சமான அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக வந்த காவல்துறையினர் பெண்கள் மீது தாக்குதல் நிகழ்த்தியது மட்டுமல்லாமல் பாலியல்ரீதியிலான அத்துமீறல்களையும் நிகழ்த்தி, அவமானப்படுத்தினார்கள்.
பெண்கள் மீது நடத்தப்பட்ட அந்த வன்முறையின் தீவிரம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்குப் பதிலடி தரும் நடவடிக்கைகளில் பெண்கள் இறங்கினார்கள். கட்டிடங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவது, பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துவது போன்ற செயல்களில் இறங்கினார்கள். இதற்காக அவர்கள் எல்லாரும் கைதுசெய்யப்பட்டார்கள். எனினும் அவர்களுடைய போராட்டங்களுக்குப் பலன் கிடைத்தது. முதல் உலகப் போருக்குப் பிறகு வரையறைக்குட்பட்டவாக்குரிமை 1918-ல் வழங்கப்பட்டது. அதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முழு வாக்குரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டது.
மிஸ் அமெரிக்கா, 7, செப்டம்பர் 1968
அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரத்தில் நடந்த மிஸ் அமெரிக்கா போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க நூற்றுக்கணக்கான அமெரிக்கப் பெண்ணியவாதிகள் திரண்டனர். எதிர்ப்பைக் காட்டுவதற்காகப் பெண்கள் உள்ளாடைகளை (பிரா) எரித்ததாகத் தவறான செய்தியொன்று வெளியானதால் இந்தப் போராட்டம் ‘பிரா எரிப்புப் போராட்ட’மாக வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. எனினும், ‘பிரா எரிப்பு’ என்னும் படிமம் இரண்டாவது பெண்ணிய அலைக்கு வித்திட்டது. ஆயினும், அந்தப் போராட்டத்தில் உண்மையில் நடந்ததே வேறு.
பெண்களது அழகை எடுத்துக்காட்டும், கூடுதல் அழகு சேர்க்கும் உடைகள், போலி இமைமுடிகள் போன்றவற்றையும், காஸ்மோ, பிளேபாய் ஆகிய பத்திரிகைகளின் பிரதிகளையும் தரை துடைப்பான்கள், பாத்திரங்கள் போன்றவற்றையும் ‘சுதந்திரத்துக்கான குப்பைத்தொட்டி’யில் வீசியெறிந் தார்கள். இவை ‘பெண்களை வதைப்பதற்கான சாதனங்கள்’ என்றார்கள் போராட்டக்காரர்கள். பெண்களை போகப் பொருட்களாக்குவதில் ஆரம்பித்து, அழகின் ஆதர்சங்கள், வீட்டு வேலையாட்களிடம் துஷ்பிரயோகம் போன்ற எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் போக்கை இந்தப் போராட்டம்தான் தொடங்கிவைத்தது.
ஐஸ்லாந்து, 24, அக்டோபர் 1975
‘ரெட் ஸ்டாக்கிங்ஸ் புரட்சிகரப் பெண்கள் குழு’வினரிடமிருந்து உந்துதல் பெற்று ஐஸ்லாந்தின் 90% பெண்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டனர். வீட்டுக்குள்ளே தங்களிடமிருந்து ஊதியமில்லா உழைப்பை ஆண்கள் சுரண்டுவதற்கு எதிராகவும், அலுவலகங்கள், தொழிலகங்கள் போன்றவற்றில் ஊதியம், அங்கீகாரம், பதவி உயர்வு போன்றவை பெண்களுக்குக் குறைந்த அளவிலேயே வழங்கப்படுவதையும் எதிர்த்து இந்த வேலைநிறுத்தத்தை அவர்கள் மேற்கொண்டனர்.
ஒரே ஒரு நாள், அவர்கள் வேலைக்குச் செல்ல மறுத்ததோடு வீட்டில் குழந்தைகளைப் பராமரித்தல்,சமையல் செய்தல், சுத்தம் செய்தல், வீட்டு நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ளுதல் போன்றவற்றைச் செய்யவும் மறுத்துவிட்டனர். ஐஸ்லாந்தே ஸ்தம்பித்துப் போனது. அங்கு மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டில்பெண்கள் இப்படியொரு எந்த அளவுக்குப் பெண்களின்அங்கீகரிக்கப்படாத இலவச உழைப்பால் சமூகம் இயங்குகிறது என்பதைஅந்தப் போராட்டம் காட்டியது. பாலினச் சமத்துவத்தில் கடந்த 30ஆண்டுகளாக உலகிலேயே முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக ஐஸ்லாந்து இருப்பதற்கு அந்தப் போராட்டம்தான் முக்கியக் காரணம்.
வில்ஸ்டன், வடக்கு லண்டன், 1976-78
தொழிற்சங்க இயக்கத்தில் இருந்த இனவெறி, வயதுப் பாகுபாடு, பெண்கள் மீதான துவேஷம் போன்றவற்றையும், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களிடம் தொழிலகங்கள் நடத்திய சுரண்டலையும்அம்பலப்படுத்திய போராட்டம் இது. இந்தப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர் இந்தியாவில் பிறந்த ஜெயாபென் தேசாய். கிரன்விக் ஃபிலிம்புராசசிங் ஆய்வகங்களில் வேலைபார்த்த பெண்களும், வயது முதிர்ந்த தொழிலாளர்களும், ஆசிய, கிழக்கு ஆப்பிரிக்கத் தொழிலாளர்களும் தேசாய் தலைமையின் கீழ் திரண்டனர்.
வேலைநிறுத்தங்களில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் ஏவினார்கள். ஆனால், ஆசியப் பெண் தொழிலாளர்களின் பலம் காலப்போக்கில் தொழிற்சங்க இயக்கங்களுக்குச் சவால் விடுத்தது. இதன் விளைவாகஅங்குள்ள தொழிற்சங்கங்களில் பன்மைத்தன்மை உருவானது. தொழிலாளர்களின் பலம் என்ன என்பதை அரசாங்கங்களுக்கும்ஊடகங்களுக்கும் இந்தப் போராட்டங்கள் விளங்க வைத்தது மிகமுக்கியமானது.
மங்களூரு, இந்தியா, பிப்ரவரி 2009
காதலர் தினத்தன்று மது விடுதிகளில் கூடியிருந்த பெண்களை அடித்துத் துரத்தியது ஆண்களின் கும்பல் ஒன்று. அவர்களில் சிலர் அந்தத் தாக்குதலைப் படம்பிடித்து இணையத்தில் உலவவிட்டனர். இந்தப் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும், அவர்களைத் தாக்கியவர்களைக் கேலிசெய்யவும்‘பப்புகளுக்குப் போகும், சுதந்திரமான நவநாகரிகப் பெண்களின் பட்டாளம்’என்ற பெயரில் ஒரு குழுவினர் புதுமையான ஒரு வழிமுறையைக் கையாண்டனர். மேற்கண்ட தாக்குதலை நடத்தியவர்கள் ஸ்ரீராம் சேனா என்ற பழமைவாத அமைப்பினர். அவர்களுக்குக் காதலர் தினப் பரிசாக ஆயிரக்கணக்கான இளஞ்சிவப்பு நிற உள்ளாடைகள் அனுப்பப்பட்டன.
காம்பாலா, உகாண்டா, பிப்ரவரி 2014
‘அநாகரிகமாக ஆடை உடுத்துவதற்கு’எதிராக உகாண்டாஅரசு ஒரு சட்டத்தை இயற்றியது. ‘குட்டைப் பாவாடைச் சட்டம்’ என்று அதுகேலியாக அழைக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் காரணமாக தெருக்களில்பெண்களின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டன. ஆனால், இதற்குப் பெண்களின் ‘அநாகரிகமான’ ஆடை அலங்காரமே காரணமாகக் காட்டப்பட்டது. இதற்கெதிராகப் பெருவாரியாகப் பெண்கள் திரண்டனர். ‘என் உடல்,என் பணம், என் அலமாரி, என் இஷ்டம்’ என்ற கோஷத்துடன் தெருக்களில்ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் குட்டைப் பாவாடைகளுடன் பதாகைகள் ஏந்திக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
பெய்ஜிங், சீனா, மார்ச் 2015
பெண்ணியப் போராட்டத்தைக் காவல்துறையினர் ஒடுக்கவும் அழிக்கவும் நினைத்தாலும் சீனத் தலைநகரத்தில் தங்கள் போராட்டங்களைத்தந்திரமான வழிகளில் பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டுச் சில போராட்டங்களை நடத்தத் திட்ட மிடப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று ‘கெரில்லா தீவிரவாதிகள்’ என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டது.
பெண்கள் மீது அந்த நாட்டின் ஆண்கள் இழைக்கும் வன்முறை, பாலியல் அத்துமீறல், பாலியல் வன்முறை போன்றவற்றுக்குஎதிரான போராட்டங்கள் அவை. ரத்தக் கறை படிந்த திருமண உடையுடன்பெண்கள் சென்ற அணிவகுப்பு அந்தப் போராட்டங்களில் தனித்துவம்வாய்ந்தது. இந்தப் போராட்டங்களுடன் ‘லீன் இன்’ இயக்கம் என்ற போராட்டமும் வலுப்பெற்றுவருகிறது. லட்சியத் துடிப்புள்ள இளம் பெண்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிலும், மற்ற அலுவலகங்களிலும் எதிர்கொள்ளும் பணியிடப் பாலியல் அத்துமீறல்களுக்குஎதிரான இயக்கம் அது.
ஆப்கானிஸ்தான், மே 2007
ஆப்கானிஸ்தான் அரசியல்வாதி மலாலாய் ஜோயா ஆப்கன் நாடாளுமன்றத்தில் தன்னோடு தேர்ந்தெடுக்கப்பட்ட சக உறுப்பினர்களான போர் உற்பத்தியாளர்கள், போர்க் குற்றவாளிகளை விமர்சித்ததற்காகவும், ஹமீத் கர்சாய்க்குக் கிடைத்த மேற்குலகின் ஆதரவுக்கு எதிராகப் பேசியதற்காகவும் தன் தேசத்தின் ஆணாதிக்க சமூகத்தின் பெரும் கண்டனத்துக்கு உள்ளானார். அவரது துணிச்சலுக்குப் பரிசு என்ன தெரியுமா? உலகம் முழுவதிலிருந்தும் மலாலாய்க்கு ஆதரவு குவிந்தபோதும் அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.
இருந்தபோதிலும், கர்சாய்க்கு உடந்தையாக மேற்குலகு இருந்ததற்கு எதிராக அவர் துணிச்சலுடன் பேசியது மேற்குலகின் மத்தியில் ஆப்கன் பெண்களைப் பற்றி இருந்த பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. ஆப்கன் பெண்கள், ஆண்களுக்கு அடங்கிச்செல்பவர்கள் அல்ல என்பதை அவர் உணர்த்தினார். அரசியல்ரீதியாக எதிர்ப்பு காட்டும் செயலுக்கான முன்மாதிரியாக மலாலாய் ஜோயா அவரது நாட்டினரிடையே உருவெடுத்தார்.
லிமா, பெரு, 7 மார்ச் 2014
பெரு நாட்டின் பெண்ணியவாதிகள் சிவப்பு நிற உடையணிந்துகொண்டு பெண்களுக்கான அமைச்சகக் கட்டிடத்துக்கு வெளியே உள்ள நடைபாதையில் படுத்துக்கொண்டனர். அந்த நாட்டில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு நீதி மறுக்கப்படுவதையும், அரசாங்கத்தால் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுவதையும் எதிர்த்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
வரிசையாகப் படுத்துக் கிடந்த பெண்களைப் பார்க்கும்போது மணல்மீது வரைந்த பட்டையான கோடு போன்று தெரிந்தது. இனியும் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்பதற்கான அடையாளம் அது. வன்முறைக்குள்ளாக்கப்படுவதிருந்து விடுபடுவதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை அரசியல்வாதிகள் ஏற்கவில்லை என்பதையும் அந்தப் பெண்களின் போராட்டம் தோலுரித்துக் காட்டியது.
லண்டன், 7 அக்டோபர் 2015
கடந்த மாதம் லண்டனில் ‘சஃப்ரஜெட்’ என்ற திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்வின்போது ‘சிஸ்டர்ஸ் அன்கட்’ என்ற பெண்ணியக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டம் இது. தடுப்பரண்களை மீறிக்கொண்டு வந்து அரசாங்கத்துக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை அந்தப் பெண்கள் பதிவுசெய்தனர். குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு உரித்தான சேவைகளில் அரசு நிதிக்குறைப்பு செய்வதை எதிர்த்துதான் இந்தப் போராட்டம்.
© தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT