Published : 08 Nov 2015 01:34 PM
Last Updated : 08 Nov 2015 01:34 PM
எனக்கு இளநரை இருக்கிறது. வீட்டிலேயே இயற்கையான முறையில் ‘ஹேர் டை’ தயாரிப்பது எப்படி?
- டி. கீதா, காட்பாடி.
டாக்டர் எஸ். இந்திராதேவி, பேராசிரியர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, சென்னை
இளநரை பிரச்சினைக்கு முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. உடலில் இரும்புச் சத்து, கால்சியம், புரதம் போன்றவை குறையும்போது இளநரை ஏற்படுகிறது. சிறு வயதிலிருந்தே காபி, டீ போன்றவற்றைத் தொடர்ந்து குடித்துவந்தாலும் இளநரை ஏற்படும். அத்துடன் காபி, டீ போன்றவை உடலில் ஊட்டச்சத்து சேர்வதைத் தடுக்கின்றன. அதனால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது. இளநரையை ‘ஹேர் டை’ இல்லாமல் சரியான ஊட்டச்சத்து அளிக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டாலே சரிசெய்ய முடியும். முட்டை, பால், பேரீச்சம்பழம், கீரை, பருப்பு போன்றவற்றைச் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது. பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும். சிலர் நெய் சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என்று நெய்யை அடியோடு தவிர்த்துவிடுவார்கள். ஒருநாளைக்கு ஒரு டீஸ்பூன் நெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடாது.
அத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா மூன்றையும் சாறாக்கி இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டுவந்தால் இளநரை நீங்கி கூந்தல் கருப்பாக மாறும். தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம். வாரத்தில் இரண்டு முறை சிவப்பு அரிசியை வேகவைத்து தேங்காய், வெல்லம் சேர்த்து காலை உணவாகச் சாப்பிடலாம். நான்கு பாதாம் பருப்பு, நான்கு பிஸ்தா பருப்பு இரண்டையும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் தோல் நீக்கிச் சாப்பிட்டு வரலாம். இரண்டு பேரீச்சம்பழம், ஆறு உலர்ந்த திராட்சையும் சேர்த்துச் சாப்பிடலாம். தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்து அளிக்கும் உணவுகளைத் தொடர்ந்து எடுத்துவந்தாலே இளநரை நீங்கிவிடும்.
எனக்கு முகத்தில் ‘மெலஸ்மா’ (Melasma) பாதிப்பு உள்ளது. இதை ஆயுர்வேத மருத்துவத்தில் சரி செய்ய முடியுமா?
- பி. ஜீவா, சென்னை
டாக்டர் ஏ. சுதீர் (எம்.டி), ஆயுர்வேத மருத்துவர், சென்னை
இந்த ‘மெலஸ்மா’ பிரச்சனை, பொதுவாகப் பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் கர்ப்ப காலத்தில் அதிகமாகப் புளிப்பு சாப்பிடுவது. இதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது. ஆனால், உங்களுடைய பாதிப்பு அளவைப் பொருத்துதான் குணமாகும் காலத்தைக் கூறமுடியும். லேசான பாதிப்பு என்றால், இரண்டு மாதத்திலேயே தோலில் நல்ல மாற்றம் தெரியும். புளிப்பான உணவையும் தயிரையும் நீங்கள் தவிர்த்துவிடுவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT