Published : 22 Nov 2015 03:27 PM
Last Updated : 22 Nov 2015 03:27 PM

போகிற போக்கில்: ஓவியத்தில் கின்னஸ் சாதனை!

பன்னிரண்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த தன்னை, கல்லூரிகளில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கும் அளவுக்கு உயர்த்தியது ஓவியம்தான் என்கிறார் விஜயலட்சுமி. இவரது கைவண்ணத்தில் மிளிரும் தஞ்சாவூர் ஓவியங்களை உள்ளூர் தொடங்கி வெளிநாட்டவர்வரை வாங்கிச் செல்வது இவரது திறமைக்குச் சான்று!

புதுச்சேரியில் உள்ள விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்றால் கொள்ளைகொள்ளும் தஞ்சாவூர் ஓவியங்கள் நம்மை வரவேற்கின்றன.

“நான் பிறந்தது திருப்பத்தூர். என் தந்தை பொறியாளராக இருந்தார். தந்தையின் வேலை காரணமாகப் பல ஊர்களில் வசித்தோம். கடைசியாக சென்னையில் இருந்தேன். அரசுப் பள்ளியில் படித்தேன். பிளஸ் டூ முடித்ததுமே திருமணம். பள்ளியில் படிக்கும்போதே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது” என்று சொல்லும் விஜயலட்சுமி, “திருமணத்துக்குப் பிறகும் அந்த ஆர்வம் தொடரக் காரணம் என் கணவர்தான்” என்கிறார்.

மகன் பிறந்த பிறகு ஓவிய வகுப்புகளுக்குச் சென்றார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுப் புடவைகளில் ஓவியம் வரைவதில் தொடங்கியது இவரது கலைப் பயணம். குறிப்பாக தமயந்தி, ராதை, பொன்னியின் செல்வன் போன்ற ஓவியங்களை வரைந்தார். இவர் ஓவியம் வரைந்த புடவைகள் பிரபலக் கடைகளில் விற்பனையாவதாக மற்றவர்கள் சொல்லும் போது பேரானந்தமாக இருக்கும் என்கிறார் விஜயலட்சுமி. புடவைகளில் ஓவியங்கள் வரைவதில் கிடைக்கும் பணத்தை வைத்து தஞ்சாவூர் ஓவியங்கள் வரையப் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

“பண்டிகை நாட்களில் எனக்கு புடவை, நகை வாங்கித் தருவதைவிட தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கான பொருட்களை வாங்கித்தரும்படி என் கணவரிடம் கேட்பேன். காரணம் அவற்றின் விலை அதிகம்” என்று சொல்லும் விஜயலட்சுமிக்கு, 2004-ல் டெல்லி ஓவியக் கண்காட்சியில் பங்கேற்றது திருப்புமுனையாக அமைந்தது.

“நான் வரைந்த தஞ்சை ஓவியங்கள் அங்கு ஏராளமாக விற்பனையானது. நிறைய ஆர்டரும் கிடைத்தது. அப்போதுதான் என் திறமை மீது எனக்கு நம்பிக்கை வந்தது. பிறகு கொல்கத்தா, டெல்லி எனப் பல கண்காட்சிகளில் பங்கேற்றேன். பிறகு வீட்டிலேயே கேலரி திறந்தேன்” என்று புன்னகைக்கும் விஜயலட்சுமி, தான் கின்னஸ் சாதனை புரிந்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறார்.

“ஓவியத்தில் ஒரே நாளில் இரண்டு கின்னஸ் சாதனை செய்ய முடிவெடுத்தேன். 2010 டிசம்பர் 4-ம் தேதி விதைகளை வைத்து ரத்த தானத்தை வலியுறுத்தி ஓவியம் வரைந்து முதல் சாதனை புரிந்தேன். அதையடுத்து, பல ரக பட்டாணிகளை வைத்து கல்வி அனைவருக்கும் தேவை என்பது தொடர்பாக ஏற்கெனவே புரிந்திருந்த சாதனையை முறியடித்தேன். ஒரே நாளில் இரண்டு கின்னஸ் சாதனைகளைப் புரிந்த அந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாது” என்று சொல்கிறவரின் முகத்தில் அப்படியொரு நிறைவு!

தஞ்சாவூர் ஓவியங்களுக்காக இவர் தனியாக ஒரு கடையைத் திறந்தார். ஆறு மாதம்வரை வாடகை கொடுப்பதே சிரமமாக இருந்ததாம். அப்போது காலை ஏழு மணி முதல் மறுநாள் ஏழு மணிவரை தொடர் ஓவியத்தைக் கடையில் வரையும் சாதனையைச் செய்தார். 2012-ல் காபி பவுடர் மூலம் உழைப்பே உயர்வு என்ற தலைப்பில் உலக சாதனை செய்ததாகக் குறிப்பிடுகிறார்.

“நான் செய்த சாதனைகள் அனைத்துக்கும் எனது தஞ்சை ஓவியங்களே அடிப்படை. கல்லூரி வாசலை மிதிக்காத எனக்கு, தனி அடையாளம் கொடுத்தது என் ஓவியத் திறமைதான். இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான், பிரான்ஸ், லண்டன், அமெரிக்கா, இத்தாலி, தைவான் போன்ற வெளிநாடுகளிலும் எனக்கு வாடிக்கையாளர்கள் இருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். முதுகெலும்பாக எனது கணவர் இருந்ததால்தான், எனது ஓவியத் திறனை மேம்படுத்தி, சாதிக்க முடிந்தது. படிப்பு இல்லாவிட்டாலும் பிடித்த துறையில் விருப்பமும் அதில் சாதிக்கும் உழைப்பும் இருந்தால் போதும். அனைத்தையும் வெல்லலாம்” என்று சொல்லும் விஜயலட்சுமி, சென்னை கல்லூரியொன்றில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றதையும், புதுச்சேரி பாரதிதாசன் அரசு கல்லூரியில் நடந்த விழாவில் விருது வாங்கியதையும் தன் வாழ்வின் சந்தோஷத் தருணங்களாகக் குறிப்பிடுகிறார்.

படங்கள்: எம். சாம்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x