Last Updated : 04 Oct, 2015 01:33 PM

 

Published : 04 Oct 2015 01:33 PM
Last Updated : 04 Oct 2015 01:33 PM

பெண் எனும் பகடைக்காய்: மகள்கள் என்றும் மகள்களே!

மகள்களுக்கான தினம் என்று கடந்த வாரம் ஒரு தினம் வந்து போனது. எனக்கு மகள்கள் யாருமில்லை என்று சொல்ல மாட்டேன். அன்புடன் அம்மா என்றழைக்கும் பல அருமை மகள்கள் ஊரெங்கும் உண்டு. அவர்களில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்ற செய்தி என் காதுக்கு வந்தாலே பதறித் துடித்து விடுவேன். என்னாலான உதவிகளையோ, தொலைவில் இருக்கிறார்கள் என்றால் அன்பு மொழிகளையோ ஆறுதல் வார்த்தைகளையோ ஆலோசனைகளையோ வழங்குவதுண்டு. பெரும்பாலானவர்களின் இயல்பும் இதுவாகத்தான் இருக்கும்; இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

கடந்த சில ஆண்டுகளில் பிரியா, கோகிலா, காவேரி, நந்தினி, ரோஸி, விமலா, வைதேகி, தற்போது ரமணி தேவி இவர்கள் அனைவரும் தங்கள் ரத்த உறவுகளாலேயே ரத்த விளாறாக்கப்பட்டுக் காணாமல் போக்கடிக்கப்பட்டவர்கள். இந்த மகள்கள் அனைவரும் அவர்களின் பெற்றோருக்கு ஏன் எதிரியாகிப் போனார்கள்? அல்லது அப்படி அவர்களை குரூரத் தன்மையுடன் அந்நியமாக்கியது எது? சாதி என்ற கண்ணுக்குத் தெரியாத சனியன்தானே? பெற்று வளர்த்த குழந்தைகளைவிட அது மேலானதா?

“நாலு பேருக்கு மத்தியில் வாழும்போது மற்றவர்களை அனுசரித்துத்தான் வாழணும்; அதுவும் சுத்தி வர சாதி சனமா இருக்கும்போது அவங்களுக்கு மத்தியில மானம் மரியாதையோட வாழணும்” இப்படி ஒரு பெண் கூறுகிறார்.

தங்கள் பிள்ளைகளின் ஆசை, விருப்பு, கனவு, எதிர்காலம் அனைத்தையும்விட இவர்கள் சொல்லும் ‘மானமும் மரியாதை’யும் அதிக மதிப்புடையவையா? சரி, பிள்ளைகளைக் கொன்று புதைத்தாயிற்று. விஷயமும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. கைது, தண்டனை, சிறைவாசம் இவையெல்லாம் மிக மிக மரியாதைக்குரியவையா என்று நமக்குள் எழும் கேள்வி, அவர்களுக்குள் எழாதா? இல்லை, அவர்களே குறிப்பிட்டதுபோல அந்த சாதி சனம் வந்து காப்பாற்றுவார்களா?

சமீப காலமாகப் பெற்றவர்களா லேயே பெண் பிள்ளைகள் கொல்லப்படும் குரூரம் மனதைப் பதற வைக்கிறது. சாதித் தூய்மை தங்கள் பெண் பிள்ளைகளின் வழியாகத்தான் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பது என்ன மாதிரியான சிந்தனை? தங்கள் வழியாக வந்தவர்கள் என்பதைத் தாண்டி, தங்களின் உடைமைப் பொருளாகப் பிள்ளைகளைப் பார்ப்பதுதானே இங்கு பிரச்சினை. தங்கள் விருப்பம் எதுவோ அதை அவர்களின் மீது திணிக்க முயல்வதும் அவர்கள் மீறும்போது அவர்களை இல்லாமலே ஆக்குவதும் இப்போது தொடர்கதையாகிவருவது மிகுந்த கவலைக்குரியது.

இந்தியா முழுவதுமே காதல் திருமணங்கள் அல்லது சாதி மறுப்புத் திருமணங்கள் ஐந்து சதவீதம்கூட நடைபெறுவதில்லை. வடக்கே மிகுந்த கட்டுப்பாடுகளும் கட்டுப்பெட்டித்தனமும் நிறைந்திருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் கிட்டத்தட்ட 98 சதவீதத் திருமணங்கள் ஏற்பாட்டுத் திருமணங்கள்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில்கூட சாதி மறுப்புத் திருமணங்கள் ஐந்து சதவீதத்தைத் தாண்டவில்லை.

பிற்போக்காளர்களால் இதைக்கூடத் தாங்க முடியவில்லை. வட மாநிலங் களில் கிராமத்துக்குக் கிராமம் ‘காப்’ பஞ்சாயத்துகள் முளைத்தன. சாதி மீறும் பெண்களைத் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து கொலை செய்கிறார்கள். இதற்கு ‘கவுரவக் கொலை’ என்று பெயர் வேறு. இதில் முதலிடம் பிடிக்க உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்கள் போட்டி போடுகின்றன. இப்போது தமிழகமும் இதில் சேரத் துடிக்கிறது போலும்!

கிராமங்களிலிருந்து கல்வியின் பொருட்டு வெளியேறும் மிகக் குறைந்த என்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே உடன் படிப்பவர்களுடனோ அல்லது பணியாற்றுபவர்களுடனோ காதல் வசப்படும் நிலை. கல்வி, நவீன சிந்தனைகள் உருவானதன் விளைவாகவே பெண் தனது இணையைத் தானே தேடும் முயற்சியில் இறங்கினாள். அவர்களிலும் திருமணம் என்ற பந்தத்தை நோக்கி நகர்பவர்கள் மிக மிகக் குறைவு. அதிலும் மாற்று சாதி நபர்களைக் காதலிப்பவர்கள் எண்ணிக்கை இன்னும் குறைவு. இந்தக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களாலேயே தங்கள் சாதித்தூய்மை கெட்டுப்போய் விட்டதாகக் கூப்பாடு போடுகிறார்கள்.

தடியெடுத்தவன் தண்டல்காரனா?

இது காலங்காலமாக நீடிப்பதுதான். நமது நாட்டார் தெய்வங்களில் பலர் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள். சாதித் தூய்மையைக் காப்பாற்றுவதற்காகக் கொன்றுவிட்டு பின் அவர்களைத் தெய்வமாக்கிவிடுகிறார்கள். இப்போதும், தங்கள் வீம்புக்கும் வெறுப்புக்கும் கொல்வதும் பின் தெய்வமாக்குவதும் தொடரலாமா? தமது ஆணவத்துக்காகக் கொன்றுவிட்டு அவளைத் தெய்வமாக்கினால், அவள் தெய்வமாகி தங்கள் சந்ததிகளைக் காப்பாற்றுவாள் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

தற்போது சம்பந்தப்பட்ட ஆண் தாழ்த்தப்பட்ட சாதி என்றால், அவனைக் கொன்று போடுவதும் நடைமுறையாக உள்ளது. தங்கள் மகள்களையே கொன்று புதைக்கும் கூட்டம், அன்னியர் வீட்டுப் பிள்ளைகளைக் கொல்வதற்கு யாரைக் கேட்க வேண்டும்?

மகளும் மனிதப் பிறவியே

பெண் சக்தி, தெய்வம் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் அப்படியெல்லாம் சொல்ல வரவில்லை. அவள் ரத்தமும் சதையும் உள்ள ஓர் உயிர். ஆண்களுக்குப் படைக்கப்பட்ட மூளைதான் அவளுக்கும் படைக்கப்பட்டுள்ளது. அதனால் சிந்திக்கும் திறனும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனும் அவளுக்கும் உண்டு என்பதைப் பெற்றோர் புரிந்துகொண்டாலே போதும். மகள் இல்லாமல் வாழும் வாழ்க்கையை, மகள்களின் மனம் நிறைந்த சிரிப்பைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அத்துடன் சக மனிதர்களும் அவ்வாறானவர்களே என்று எண்ணினால் கோழியைப் போல அவர்களின் கழுத்தை அறுக்கும் எண்ணம் தோன்றாது.

கொசுறு: காட்டுமன்னார்கோயிலை அடுத்த கிராமம் ஒன்றில், காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருந்தாள் என்பதற்காக, அரிவாளை எடுத்து தன் பேத்தி ரமணி தேவியின் கழுத்தை வெட்டித் தள்ளி விட்டார் அவளின் ‘பாசக்கார தாத்தா’.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x