Published : 25 Oct 2015 01:57 PM
Last Updated : 25 Oct 2015 01:57 PM
சிறுமிகளைப் பெற்றோர்களே மணப்பெண்ணாக விற்கும் அவல நிலையை ‘பிரைட்ஸ் ஃபார் சேல்’ என்ற ராப் பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சோனிதா அலிஜதெ. இவர், தனது 16 வயதில் பெற்றோர்களால் ஆப்கானிஸ்தானத்துக்கு ஒன்பதாயிரம் டாலர் பணத்துக்காக அனுப்பப்பட இருந்தவர்.
மணப்பெண்ணாக ஆப்கானிஸ்தான் செல்ல மறுத்த சோனிதா, இந்தக் கொடூரமான வழக்கம் குறித்து தானே நடித்துப் பாடியிருக்கிறார். “என் அம்மா இதுகுறித்து என்னிடம் பேசியபோது எனக்குப் பெரிதாக வருத்தம் ஏற்படவில்லை. ஏனென்றால் அன்றைக்குத்தான் எனது பெற்றோர்கள் என்னை நன்கு கவனித்துக் கொண்டார்கள். புதிய ஆடைகள் வாங்கித் தந்தார்கள். பிறகுதான் அதன் பயங்கரம் தெரிந்தது” என்கிறார்.
ஆப்கானிஸ்தானில் வசதியற்ற குடும்பத்தில் பிறந்த ஏழைச் சிறுமிகளில் 15 சதவீதம் பேர் ஆண்டுதோறும் இப்படி திருமணத்தை முன்னிட்டு விலைபோகின்றனர். கவிதைகள் மூலம் தனது துயரங்களை வெளிப்படுத்தத் தொடங்கிய சோனிதா, எமினம்மின் தாக்கத்தில் ராப் பாடல்களை எழுதினார். தற்போது சோனிதா அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் உதவித்தொகையுடன் கல்வி பயின்றுவருகிறார். தனது இசைத் திறன்களை வளர்ப்பதிலும் ஈடுபாட்டுடன் இருக்கிறார். முதலில் இவரது பாடல்களால் அச்சம் கொண்ட அவரது அம்மா, தற்போது சோனிதாவின் முதல் விசிறி.
பெண்பிள்ளை ஒருமை
கேரளத்தில் படிப்பறிவற்ற தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் ஆறாயிரம் பேர் போனஸ் தொகைக்காக இணைந்து போராடி, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். டாடா நிறுவனத்தின் பங்குகளைப் பெரும்பகுதி கொண்ட கண்ணன் தேவன் தேயிலை நிறுவனத்துக்கு எதிராக மூணாறு தேயிலைத் தோட்டத்தில், செப்டம்பர் முதல் நடந்த போராட்டத்தில் 20 சதவீதம் போனஸ் தொகையைப் பெற்றுள்ளனர்.
அவர்களது போராட்டத்தைக் கண்டு மாநில முதலமைச்சரே திகைத்து, நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மேற்பார்வை செய்யும் நிலை ஏற்பட்டது. தற்போது நாள்கூலியாகத் தரப்படும் 230 ரூபாயை 500 ரூபாயாக உயர்த்துவதற்காகத் தொடர்ந்து போராடிவருகின்றனர். இவர்களது போராட்டத்தில் ஆண் தொழிற்சங்கத் தலைவர்கள் யாரையும் சேர்க்க மறுத்துவிட்டனர். தேயிலைத் தோட்டத் தொழிலைப் பொறுத்தவரை பெண்கள்தான் இப்பணியின் அத்தனை சிரமங்களையும் தாங்குபவர்கள் என்பதே இவர்களது வாதம்.
இவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகத் தொடங்கிய அமைப்பின் பெயர் பெண்பிள்ளை ஒருமை (Pempillai orumai). “எங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. பசியும் வேதனையும் எங்கள் வாழ்க்கையின் அங்கம். பட்டினி கிடந்து இறந்தாலும் கவலைப்பட மாட்டோம். ஆனால் எங்களைச் சுரண்டுவதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டோம். இதுவரை பட்ட வேதனைகள் போதும். நாங்கள் தேயிலையைப் பறித்து, கூடைகளை முதுகில் சுமக்கிறோம். நீங்கள் பணப் பையுடன் செல்கிறீர்கள்” என்கிறார் இந்த அமைப்பின் தலைவர் லிசி சன்னி.
சிங்கப் பெண்கள்
ஆசிய சிங்கங்கள் பாதுகாக்கப்படும் கிர் சரணாலயத்தில் 48 பெண்கள், வனக் காவலர்களாகப் பணிபுரிகின்றனர். இந்தச் சரணாலயத்தில் உள்ள சிறுத்தைகள் மற்றும் சிங்கங்களைப் பாதுகாத்துக் காப்பாற்றும் பணியில் இவர்கள் ஈடுபடுகின்றனர். 2007-ம் ஆண்டில் கிர் சரணாலயத்தில் பெண்கள் பிரிவு தொடங்கப்பட்டது. இங்கே 33 சதவீதம் வேலைவாய்ப்புகள் பெண் களுக்கு வழங்கப்படுகின்றன.
முதலில் பெண் வனக்காவலர்களைத் தங்களது வேலைக்கு இடையூறாகப் பார்த்த காவலர்கள் தங்களைப் பயனுள்ள சகாக்களாக ஏற்றுக்கொண்டுவிட்டதாக பெண் வனக்காவலர்கள் தெரிவித்துள்ளனர். பெண் வனக்காவலர்களில் முதலில் பணியில் அமர்ந்த ரஷிலா வாதர், இதுவரை 200 சிங்க மீட்பு நடவடிக்கை களிலும், 425 சிறுத்தை மீட்பு நடவடிக்கைகளிலும் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் பெண் வனக்காவலர்கள் இந்தியா முழுவதும் வாழும் பெண்களுக்கு உந்துதல் சக்தி என்கிறார், கிர் சரணாலயத்தின் துணை பாதுகாவலரான சந்தீப் குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT