Published : 04 Oct 2015 01:22 PM
Last Updated : 04 Oct 2015 01:22 PM
இணையத்தில் சமூகப் பரிசோதனை வீடியோக்கள் கணக்கின்றி உலா வரும் காலம் இது. அந்த வரிசையில் மிகவும் முக்கியமான வீடியோ இது. பெண்களை அடிப்பது குறித்து எடுக்கப்பட்ட வீடியோ.
நான்கைந்து குழந்தைகள் காட்டப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பெயரைச் சொல்கிறார்கள். வயதையும் சொல்கிறார்கள். 7 வயதிலிருந்து 11 வயதுச் சிறுவன் வரை அவர்களில் அடக்கம். ஒவ்வொருவரும் என்னவாக ஆக ஆசை என்று கேட்கப்படுகிறது. பீட்சா தயாரிப்பவராக ஆக வேண்டும், தீயணைப்பாளராக ஆக வேண்டும், போலீஸாக வேண்டும், கால்பந்தாட்டக்காரனாக ஆக வேண்டும் என்று ஆளுக்கொரு ஆசைகளைச் சொல்கிறார்கள்.
இப்போது பதின்பருவப் பெண் ஒருத்தி அங்கே வருகிறாள். வீடியோ எடுப்பவர் அந்தப் பெண் எப்படி இருக்கிறாள், அவளிடம் அவர்களுக்குப் பிடித்தது என்ன என்று கேட்கிறார். சிறுவர்கள் அதிகமாக அவளின் கூந்தலைப் பற்றி சொல்கிறார்கள். ஒரு சிறுவன் அவளிடம் எல்லாமே பிடித்திருக்கிறது என்கிறான். இன்னொருவன் நான் உனது பாய்ஃபிரண்டாக இருக்கலாமா என்று குழந்தைச் சிரிப்புடன் கேட்கிறான்.
அந்தப் பெண்ணைத் தொட்டுப்பார்க்கும்படி வீடியோ எடுப்பவர் அந்தச் சிறுவர்களிடம் சொல்கிறார். அந்தச் சிறுவர்கள் பெரும்பாலும் அவளது தோளிலும் கையிலும் தொடுகிறார்கள். ஒரு சிறுவன் கன்னத்தில் தொடுகிறான். இது முடிந்ததும் அந்தப் பெண்ணைப் பயமுறுத்தும் விதத்தில் முகபாவத்தைக் காட்டும்படி சிறுவர்களிடம் வீடியோக்காரர் சொல்கிறார். அவர்கள் பயமுறுத்தும்படி முகத்தைக் காட்டியது அந்தப் பெண்ணுக்கும் நமக்கும் சிரிப்பையே ஏற்படுத்துகிறது.
அடுத்தது வீடியோக்காரர் சொல்கிறார், “இப்போது அந்தப் பெண்ணைக் கன்னத்தில் அறையுங்கள். நன்றாக அறையுங்கள்!” இதைக் கேட்டதும் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நிற்கிறார்கள் அந்தச் சிறுவர்கள். வீடியோக்காரர் திரும்பத் திரும்பக் கேட்ட பிறகு ‘முடியாது’ என்கிறார்கள். ‘ஏன் அடிக்கக் கூடாது?’ என்று கேட்டால் அதற்கு ஒவ்வொருவரும் ஒரு பதில் சொல்கிறார்கள்.
அந்த பதில்களைப் பாருங்கள்:
‘அவள் ஒரு பெண். அதனால் என்னால் அடிக்க முடியாது’ ‘நான் அவளை அடித்துத் துன்புறுத்த விரும்பவில்லை’ ‘நாமெல்லாம் கேர்ள்ஸை அடிக்கவே கூடாது.’
‘மற்றவர்களை அடிக்கக் கூடாது என்று ஏசு சொல்லியிருக்கிறார்.’
‘எல்லாவற்றையும் விட, அவள் ரொம்பவும் அழகாக இருக்கிறாள். அவள் ஒரு பெண் வேறு. ஆகவே, அவளை அடிக்க முடியாது.’
‘எனக்கு வன்முறை பிடிக்காது.’
‘பெண்களை அடிக்கக் கூடாது, பூவால் கூட அடிக்கக் கூடாது என்று ஒரு பழமொழி இருக்கிறது. பூங்கொத்தாலும் அடிக்கக் கூடாது.’
‘அது ரொம்ப மோசம்.’
இறுதியில் முத்தாய்ப்பாக ஒரு சிறுவன் சொல்கிறான், ‘ஏனென்றால் நான் ஒரு ஆண்.
அதற்கு பிறகு ஆறு வயதுச் சிறுவன் ஒருவனின் மேற்கோளைக் காட்டுகிறார்கள், “குழந்தைகளின் உலகில் பெண்களை அடிப்பதென்று ஒன்று கிடையவே கிடையாது”. வீடியோ முடியும் தருவாயில் வீடியோக்காரர் அந்தச் சிறுவர்களிடம் சொல்கிறார், ‘அவளுக்கு முத்தம் கொடுங்கள்’. ஒரு சிறுவன் குறும்பாகக் கேட்கிறான், ‘கன்னத்திலா, உதட்டிலா?’
வீடியோ முடிந்துவிடுகிறது.
அறைய முடியாது என்று சொன்னாலும் அந்தச் சிறுவர்கள் உண்மையில் அறைந்துவிடுகிறார்கள். ஆம்! மனைவி, சகோதரி, தாய், தோழி, காதலி, முன்பின் தெரியாத பெண் என்று எல்லோரையும் அடிக்கும் ஆண்களின் முகத்தில்தான் அந்தச் சிறுவர்கள் ஓங்கி அடித்துவிடுகிறார்கள். ‘குழந்தைகளின் உலகில் பெண்களை அடிப்பதற்கு மட்டுமல்ல, பெண்களை அடிப்பவர்களுக்கும் இடமில்லை’ என்ற செய்தியை ஓங்கி உரக்க ஒலிக்கிறது இந்த வீடியோ. ஆண்மை, ஆண் என்று திமிருடன் உலவிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கிடையில் உண்மையான ஆண் யார் என்பதை இந்தச் சிறுவர்கள் வெகுசாதாரணமாகவும் அழகாகவும் சொல்லிவிடுகிறார்கள்.
வீடியோவைப் பார்க்க இந்த இணைப்புக்குச் செல்லவும்: https://www.facebook.com/JamsPlay/videos/1030325806979614/?fref=nf
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment