Published : 03 Jan 2021 08:23 AM
Last Updated : 03 Jan 2021 08:23 AM
கரோனா கால ஊரடங்கு எவ்வளவோ இழப்புகளை ஏற்படுத்தியிருந்த போதும், வீட்டிலேயே முடங்கியிருந்த நாள்கள் ஏற்படுத்திய தனிமையைப் பலரும் வாசிப்பின் வழியேதான் கடந்திருக்கின்றனர். சிதைந்துபோகவிருந்த நம்பிக்கையை நூல்களே பலருக்கு மீட்டுத் தந்திருக்கின்றன. ஊரடங்கால் புத்தகப் பதிப்பு பாதிப்பட்ட நிலையிலும், வெளியான நூல்கள் வாசகர் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. 2020இல் கவனம்பெற்ற பெண்கள் சார்ந்த, பெண் படைப்பாளர்கள் எழுதிய புத்தகங்களில் சில:
அரசியல் குரல்
உலகின் முதல் அரசியல் முன்னெ டுப்புகள் பெரும்பாலும் பெண்களால் தொடங்கப்பட்டவை யாக இருக்கும் அல்லது அவற்றில் பெண்களின் பங்கு பெருமளவு இருந்திருக்கும். ‘கறுப்பினப் பெண்ணியப் பிரகடனம்’ அப்படிப்பட்டதுதான். இதை யாழினி, அரசி, கிருத்திகன் ஆகிய மூவரும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றனர் (வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ. 60, தொடர்புக்கு: 9599329181). ஆப்பிரிக்க அமெரிக்கக் கறுப்பினப் பெண்களின் பிரகடனம் 1970களில் வெளியானது. கறுப்பினப் பெண்கள் வெள்ளை மைய ஆணாதிக்க வல்லரசுக்கு எதிரான தங்களது இருப்பை முதலில் உரத்த குரலில் வெளிப்படுத்திய கட்டுரைகள் இவை. கற்பிதங்களாலும் மூடப் பழக்கவழக்கங்களாலும் குடும்ப அமைப்பு என்பதே சிறைப்படுத்தும் நிறுவனமாக இருந்ததை மாற்றி, அதை ஒரு விடுதலை அனுபவமாக வடிவமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் பெண்களையும் மக்கள்கூட்டத்தையும் விடுவிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் சொல்கிறது இப்பிரகடனம்.
அறிவால் சிறந்த பெண்கள்
பெண்களின் மீது கற்பிதங்களையும் கட்டுப்பாடு களையும் ஏற்றிவைப்பது சமூகத்தின் வழக்கம். இது இன்று நேற்றல்ல; ஆதி காலத்திலேயே தொடங்கி விட்டது. புராண பெண் கதாபாத்திரங்களில் சிலரை அநீதியின் உருவமாகச் சித்தரிப்பதும், அறிவார்ந்த பெண்களின் அடையாளத்தை மறைப்பதும் நடந்திருக்கிறது. அப்படி மறக்கடிக்கப்பட்ட பெண்களையும் அவர்களின் அருங்குணங்களையும் பேசுகிறது ஹேமா பாலாஜி எழுதிய ‘சில பெண்கள் சில அதிர்வுகள் - வேத, இதிகாச, புராண காலங்களில்’ என்னும் நூல் (சந்தியா பதிப்பகம், விலை ரூ.140, தொடர்புக்கு: 044-24896979). பெண்கள் குறித்து இதுவரை சொல்லப்பட்டிருப்பவை அனைத்துமே உண்மையல்ல என்கிற தெளிவை இந்நூல் உருவாக்குகிறது.
ஆணின் பார்வையில் பெண்
பெண்களை ஆண்கள் சரியாகப் புரிந்துகொள்கிறார்களா என்கிற விவாதம் அநாதி காலம் முதலே தொடர்ந்துவருகிறது. ஆணின் பார்வையில் பெண் எப்போதுமே வேறுதான். ஆனால், அறிவின் பார்வையில் பெண்ணின் பிம்பம் முழுமை கொள்கிறது. இதைத்தான் சொல்கிறது கி.மணிவண்ணன் எழுதியிருக்கும் ‘செம்மை மாதர் புத்தகம்’ (டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.160 , தொடர்புக்கு: 8754507070). மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, கவிஞர்கள் வாலி, பழநிபாரதி, இயக்குநர்கள் மகேந்திரன், மணிவண்ணன், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன், பாஸ்கர் சக்தி, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்ட 13 பேருடைய நேர்காணலின் தொகுப்பு இது. நேர்காணல் அனைத்துக்கும் கேள்வி ஒன்றுதான். அது, இந்த ஆளுமைகளின் நினைவில் நீங்கா இடம்பிடித்த பெண்ணைப் பற்றிய கருத்துப் பகிர்வு. தாய், மனைவி, மகள் ஆகிய குடும்ப உறவுகளைத் தவிர்த்த பெண் ஒருவரைப் பற்றிய ஒவ்வொருவருடைய அனுபவமும் புதிய பார்வையையும் புதிய கோணத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.
இருவகைப் பெண்கள்
ஒழுக்கம் என்பதை வைத்துப் பெண்களை எதிரெதிர் நிலையில் நிறுத்திய சமூகம் நம்முடையது. சங்க இலக்கியச் சான்றுகளும் அதைத்தான் நவில்கின்றன. வீட்டுக்குள் அடைந்து கணவனின் காலைத் தொழுது எழும் குலப் பெண்களுக்கு எதிராக அறிவிலும் திறமையிலும் சிறந்த பரத்தையரை நிறுத்தியது சங்க காலம். கோவில்களில் ஆடல் மகளிர் என்று மட்டுமே சுருக்கப்பட்ட பரத்தையர், கணிகையர், தேவதாசியர் ஆகியோரது வரலாறு வியக்கத்தக்கது என்கிறார் முனைவர் அ.கா.அழகர்சாமி. அதைத் தகுந்த ஆதாரங்களுடன் ‘பத்தினிப் பெண்டிர் அல்லோம்’ நூலில் (கருத்துபட்டறை வெளியீடு, விலை ரூ.170) எழுதியிருக்கிறார்.
மூன்று தலைமுறையின் கதை
பெண்களின் வாக்குமூலங்கள் எல்லாம் சொற்களின் சேர்க்கையல்ல. அவை கடந்து சென்ற காலத்தின் எழுதப்படாத வரலாற்றின் சாட்சியங்கள். சீன எழுத்தாளர் யங் சாங் எழுதியிருக்கும் ‘போர்ப் பறவைகள், சீன தேசத்து மூன்று புதல்விகள்’ நூலும் (தமிழில்: லியோ ஜோசப், எதிர் வெளியீடு, விலை: ரூ.900, தொடர்புக்கு: 9942511302), அப்படியான வரலாற்றுக் காவியம்தான். அதிகாரத்துக்கு மிக எளிதில் இரையாக்கப்படுகிறவர்கள் பெண்கள்தாம். நூலாசிரியரின் பாட்டியும், ராணுவத் தளபதி ஒருவருக்கு ஆசை நாயகியாக்கப்படுகிறார். ஆனால், யங் சாங்கின் அம்மா, வேறொரு அவதாரமெடுக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்கிறார். மகள், அம்மா, பாட்டி என மூன்று தலைமுறையினரின் கதையை மட்டுமல்ல, மூன்று காலத்தைச் சேர்ந்த பெண்களின் நிலையையும் இந்நூல் பேசியுள்ளது.
போராடிப் பதித்த தடம்
எந்தத் துறையிலும் முதல் அடியை எடுத்துவைத்த பெண்களின் வாழ்க்கை, போராட்டங்கள் நிறைந்தது. காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்துக் கரையேறுவதைப் போன்றது. அப்படித் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் தடம்பதித்த 45 பெண்கள் குறித்து எழுதியிருக்கிறார் நிவேதிதா லூயிஸ். பெண்கள் இல்லாமல் இவ்வுலகு இல்லை என்பதை உணர்த்துகிறது இவரது ‘முதல் பெண்கள்’ நூல் (வெளியீடு: மைத்ரி புக்ஸ், விலை:ரூ.200, தொடர்புக்கு: 9445575740).
போராடினால் கிடைக்கும் நீதி
பெண்ணுக்கு இந்தச் சமூகத்தில் நீதி கிடைப்பதே எட்டாக்கனிதானோ என்கிற வேதனையை, நீதி கிடைத்த சம்பவங்களின்மூலம் மாற்றுவதுடன் நம்பிக்கையும் தருகிறார் பேராசிரியர் வே. வசந்தி தேவி. 2002 முதல் 2005 வரை மாநில மகளிர் ஆணையத் தலைவியாக அவர் செயல்பட்டபோது ஆணையம் சந்தித்த வழக்குகளைத் தொகுத்து ‘பெண்ணுக்கு ஒரு நீதி’ (வெளியீடு: மைத்ரி புக்ஸ், விலை: ரூ.130) என்னும் பெயரில் வெளியிட்டிருக்கிறார். உரிமைகள் மறுக்கப்படுகிற போதும் அநீதிகள் இழைக்கப்படும்போதும் போராட்டங்களைக் கைகொண்டு நீதி பெறுவதே வழி என்பதை இந்நூல் கூறும் அனுபவங்கள் உணர்த்துகின்றன.
பழங்குடி மக்களின் தாய்
மகாராஷ்டிரத்தில் சட்டம் படித்த முதல் பெண், விடுதலைப் போராட்ட வீராங்கனை, மகாராஷ்டிர வேளாண் சங்கத்தை நிறுவியவர், அகில இந்திய வேளாண் சங்கத்தின் தலைவராக இருந்த ஒரே பெண், எழுத்தாளர் இப்படி பல்வேறு பெருமைகளைக் கொண்டவர் கோதாவரி பாருலேகர். வரலாற்றுச் சிறப்புமிக்க வார்லி பழங்குடிகள் நடத்திய புரட்சிக்குத் தலைமைவகித்த அவரை அறிமுகப்படுத்துகிறது அசோக் தாவ்லே எழுதி சொ. பிரபாகரன் மொழிபெயர்த்த இந்த நூல் (வெளியீடு: சவுத் விஷன், விலை ரூ. 25, தொடர்புக்கு: 94455 75740).
அது ஓர் தனி உலகம்
படைப்பூக்கம் பொங்கித் ததும்பும், எதையும் உருமாற்றிவிடும், விடாமல் உரையாடும், கேள்விகளைத் தொடுக்கும், விளையாடிக்கொண்டே இருக்கும் குழந்தைகளை நாம் எவ்வளவு தூரம் புரிந்துகொண்டிருக்கிறோம்? தலைமுறைக்குத் தலைமுறை குழந்தைகளைப் பற்றிய புரிதல் மேம்பட்டுவருகிறது. இந்தக் காலக் குழந்தைகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் 'குழந்தைகளின் அற்புத உலகில்' எனும் நூலில் சில புள்ளிகளில் கவனம் குவித்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் (வெளியீடு: நூல் வனம், விலை ரூ. 140, தொடர்புக்கு: 91765 49991)
தொழில் வெற்றி கைவரும்
பெண் சிறு, குறுந்தொழில் முனைவோர் இன்றைக்கு அதிகரித்துவருகிறார்கள். அதேநேரம் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்கிற கேள்வி இருக்கும். இந்தக் கேள்விகளுக்கான சில பதில்களைத் தருவதுடன், மென்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவையையும் வலியுறுத்துகிறது 'தொடுவானம் தேடி' நூல் (வெளியீடு: வானவில் புத்தகாலயம், விலை ரூ. 299, தொடர்புக்கு: 044 2986 0070). இந்த நூலை எழுதியவர்கள் சென்னை ஐ.ஐ.டி. மேலாண்மைத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் அ. தில்லைராஜன், கோ. அருண்குமார், சஜி மேத்யு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT