Published : 04 Oct 2015 01:41 PM
Last Updated : 04 Oct 2015 01:41 PM
ஒரு முறை நவராத்திரி சமயம் அமெரிக்காவில் இருக்கும் என் மகன் வீட்டில் தங்க நேர்ந்தது. இந்தியா என்றால் நவராத்திரி நேரத்தில் வீடே அமர்க்களப்படும். அமெரிக்காவில் என்ன செய்யப்போகிறோமோ என்று கவலையாக இருந்தது. பூஜைக்குத் தேவையான பூவுக்கு என்ன செய்யலாம் என்று ஒரு வாரத்துக்கு முன்பே யோசித்தேன். ரோஜாப்பூ பொக்கே வாங்கி அதிலிருந்து பூக்களை எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் கடையில் அழகாக அடுக்கப்பட்டிருந்த அந்தப் பூங்கொத்திலிருந்து பூக்களை உதிர்க்க மனது வரவில்லை.
கடையில் வேறு பூக்கள் இருக்கின்றனவா என்று திரும்பிப் பார்த்தால் ஒரு பெண் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அவள் பேசி முடித்ததும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர்கள் நவராத்திரி பூஜைக்கான பூவுக்கு என்ன செய்வார்கள் என்று விசாரித்தேன். மஞ்சள் நிறத்தில் செவ்வந்திப் பூக்கள் பூத்திருந்த ஒரு பூந்தொட்டியைக் காண்பித்து, ‘‘இதை வாங்கி விட்டால் தினமும் இதிலிருந்தே பூ பறித்துக் கொள்ளலாம்.பொக்கேயோடு ஒப்பிட்டால் விலையும் குறைவு. நானும் நவராத்திரி பூஜைக்குப் பூந்தொட்டி வாங்கத்தான் வந்தேன்’’ என்றார். இந்தத் தொட்டியை எப்படி எடுத்துச்செல்வது? மகன் அலுவலகத்திலிருந்து வருவதற்குள் கடை மூடிவிடுமே என்று எனக்குள் பலவிதமான யோசனை. உடனே அந்தப் பெண் என் மனதைப் படித்ததுபோல, ‘‘நீங்கள் தேவையான பூந்தொட்டியை வாங்கிக்கொள்ளுங்கள். நானே உங்களை வீட்டில் விட்டுவிடுகிறேன்’’ என்றார். நான் தயங்கியதும், ‘‘ஆபீஸில் இருந்து வருகிறேன். உங்கள் கையால் ஒரு நல்ல காபி குடிக்கலாம்னு நினைச்சேன். நீங்க தயங்கினால் எப்படி?’’ என்று புன்னகையோடு சொல்லி என்னை வீட்டில் கொண்டுவந்து இறக்கி விட்டார். காபி, டிபன் சாப்பிட்டுவிட்டு, பூஜை சாமான்கள் எங்கே கிடைக்கும் என்ற விவரத்தையும் சொல்லிவிட்டுச் சென்றார். நவராத்திரிக்குத் தன் வீட்டுக்குத் தாம்பூலம் வாங்கிக்கொள்ள வரும்படி சொல்லிச் சென்றார்.
அதேபோல அவரது வீட்டுக்குச் சென்றோம். அந்தப் பெண் சொல்லியிருந்தபடி ஆளுக்கொரு உணவைச் சமைத்து, எடுத்துச் சென்றிருந்தோம். அவர் மூலமாக எனக்கு அவருடைய தோழிகளின் நட்பும் கிடைத்தது. எல்லோரும் சேர்ந்து பூஜையை முடித்துவிட்டு, சாப்பிட்டு மகிழ்ந்தோம். பிறகு அவரவர்க்கு விருப்பமானவற்றை அழகாகப் பார்சல் செய்து கொடுத்தார். அங்கு சில அமெரிக்கத் தோழிகளும் வந்து நவராத்திரி பற்றி ஆவலோடு கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். நம் உணவை மிகவும் விரும்பிச் சாப்பிட்டுப் பாராட்டினார்கள். அங்கு வந்திருந்த குழந்தைகள் சிலர் அழகாக நடனம் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை, நான் இருப்பது அமெரிக்காவில் என்பதையே மறக்கச் செய்துவிட்டது.
அமெரிக்காவில் இருப்பவர் களுக்கு ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் பயன்படாது என்பதால் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்க அழகான சிறிய கலைப்பொருட்கள் போன்ற பரிசுப் பொருட்களைச் சென்னையிலிருந்தே வாங்கிச் சென்றிருந்தேன். அதை அனைவரும் விருப்பத்துடன் வாங்கிக்கொண்டார்கள். அந்த வருட நவராத்திரி நான் எதிர்பார்த்ததைவிடக் கோலாகலமாக நடந்தேறியது!
- மீனலோசனி பட்டாபிராமன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment