Published : 12 Oct 2015 09:50 AM
Last Updated : 12 Oct 2015 09:50 AM
பல மாதங்களாக மனதை ரொம்பவே நெருடிக்கொண்டிருக்கும் விஷயம் இது. ஒன்றும் புதிய விஷயமல்ல. பலரும் பல சமயங்களில் பேசிப் பல களங்கள் கண்ட விஷயம்தான். ஆனாலும் விஷயம் மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது, எந்த முன்னேற்றமும் இல்லாமல். அப்படி என்ன பொல்லாத விஷயம் அது என்று கேட்கிறீர்களா? பெண்களின் நட்புக்கு ஏற்படுகிற பங்கம்தான் அது!
தோழிகளைப் பார்ப்பதற்கென்றே பள்ளிக்குச் சென்ற காலம் ஒன்றுண்டு. எப்போதடா இடைவேளை வரும் என்று காத்திருந்து அந்தப் பொன்னான நேரம் வந்ததும் போட்டி போட்டுக்கொண்டு கதைகள் பல பேசி, கொண்டு வந்த புளியங்காயையும் கடலை மிட்டாயையும் காக்காய் கடி கடித்துக்கொண்டு, மாலை வகுப்புகள் முடிந்த பின்னும் வீடு திரும்ப மனமில்லாமல் விளையாட்டு மைதானத்தின் கடைக்கோடியில் இருக்கும் வேப்ப மரத்தடியில் மீட்டிங் போட்டு, மழைத் தூறல் விழுவதுகூடத் தெரியாமல் அரட்டை அடித்துக்கொண்டு, கடைசியில் லேசாக இருட்ட ஆரம்பித்ததும் சுய நினைவு திரும்பி அரக்கப் பரக்கப் புத்தகப் பையை அள்ளிக்கொண்டு வீட்டுக்கு ஓடிய நாட்களை அத்தனை எளிதில் மறந்துவிட முடியுமா?
திருமணம் என்னும் பந்தத்தால் ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் தோழிகள், அப்படியே திசைமாறிப் போய்விடுவது இங்கே இயல்பு. கணவனும் பிள்ளைகளும் மட்டுமே உலகம் என ஆண்டாண்டு காலமாய் போதிக்கப்பட்டுவரும் சமூக நெறிகள் பெண்களின் நட்பையும் திருகிப் போட்டு விடுகின்றனவோ?
தாயிடம் பகிர்ந்துகொள்ள முடியாத விஷயங்களைக்கூடத் தோழமையின் தோள்களில் இறக்கிவைக்கலாம். ஆனால் தோழிகளைத் தொலைத்த பல பெண்கள் தங்கள் எண்ணங்கள், ஆசைகள், ஏக்கங்களைப் பகிர்ந்துகொள்ள ஆளில்லாமல் இறுதியில் அடைக்கலம் அடையும் இடம் தலையணைதான். இரவு நேரங்களில் மனதுக்குள் முண்டியடிக்கும் நினைவுகளால் தலையணையை நனைக்காத பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
தாயிடம் பகிர்ந்துகொள்ள முடியாத விஷயங்களைக்கூடத் தோழமையின் தோள்களில் இறக்கிவைக்கலாம். ஆனால் தோழிகளைத் தொலைத்த பல பெண்கள் தங்கள் எண்ணங்கள், ஆசைகள், ஏக்கங்களைப் பகிர்ந்துகொள்ள ஆளில்லாமல் இறுதியில் அடைக்கலம் அடையும் இடம் தலையணைதான். இரவு நேரங்களில் மனதுக்குள் முண்டியடிக்கும் நினைவுகளால் தலையணையை நனைக்காத பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இப்படி தன்னைத் தானே ஒடுக்கிக்கொண்டு குடும்பத்துக்கென்று பாடுபட்டு இறுதியில் சுய பச்சாதாபம் கொள்ளும் பெண்கள் இங்கே அநேகம். தோழிகளே! பள்ளிப் பருவத்தில் நட்பைக் காக்க எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருந்த நீங்கள், அந்த நட்பு மங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நட்பென்னும் உன்னத உறவைப் புறக்கணித்துவிட்டு வாழும் காலத்திலேயே புதைகுழிக்குள் உங்களைப் புதைத்துக்கொள்ள வேண்டுமா? நட்பைப் பேணுங்கள். அது உங்கள் வாழ்வில் சுவாரசியத்தைக் கூட்டும்!
- ஜே .லூர்து, மதுரை.
நீங்களும் சொல்லுங்களேன்
தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள், தன்னம்பிக்கையோடு எழுதுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT