Published : 25 Oct 2015 01:35 PM
Last Updated : 25 Oct 2015 01:35 PM
புற்றுநோயில் இருந்து மீண்டுவந்த போராளியின் உண்மைக் கதை
(தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் கவிதாவின் கதை இது. தான் கடந்துவந்த பாதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்)
என்ன நடந்ததோ அதையே நினைச்சு அழுதுட்டு இருக்கறதைவிட அடுத்து என்னன்னு தெம்போட நிமிரணும். அதுதான் எனக்கும் என் கணவருக்கும் பிடிக்கும். என் கணவரோட வருத்தத்தைப் பார்த்து நான் அழுத அந்த நொடிதான் முதலும் கடைசியுமா நான் அழுதது. அதுக்குப் பிறகு எனக்கு எங்கிருந்துதான் அவ்ளோ தெம்பும் துணிச்சலும் வந்ததுச்சோ.
கண்ணைத் துடைக்கும்போதே என் துக்கத்தையும் துடைச்சு தூக்கியெறிஞ்சேன். கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்துட்டு இருந்தேன். மனசு கொஞ்சம் தெளிவாச்சு. என் கணவருக்கு அடுத்தபடியா என்னோட விஷயங்களை நான் மனம்விட்டு பகிர்ந்துக்கற இன்னொரு ஜீவன் என் அக்கா. அவ ஒரு ஆர்டிஸ்ட். ரொம்ப அழகா படங்கள் வரைவா. வண்ணங்களைக் குழைச்சு அவ வரையற ஓவியங்கள் எத்தனை அர்த்தபூர்வமா இருக்குமோ அதே மாதிரிதான் என் அக்காவும். என்னை எதுக்காகவும் விட்டுத்தராதவள். எனக்காக எதையும் விட்டுத்தருகிறவள்.
அந்த நிமிஷம் என் அக்காவோட முகம்தான் என் கண்ணுக்குள்ள நின்னுச்சு. ஓவியங்களைப் பத்தி படிக்கறதுக்காக அவ அப்போ சென்னைக்கு வந்திருந்தா. உடனே அவளுக்கு போன் பண்ணினேன். ‘என்ன ஆச்சு? டாக்டரைப் பார்த்தாச்சா? என்ன சொன்னாங்க? பயப்படற மாதிரி ஒண்ணு மில்லையே?’ன்னு கேள்விகளை அடுக்கினா. நான் பதில் சொல்லாம சிரிச்சேன். நாங்க வழக்கமா சாப்பிடற ஓட்டலுக்கு அவளை வரச் சொன்னேன். நான், என் கணவர், அக்கா மூணு பேரும் எனக்குப் பிடிச்ச அந்த ஓட்டலுக்குப் போனோம்.
எனக்கு மார்பகப் புற்றுநோயா இல்லையான்னு தெரியாம முதல் நாள் இரவு எதையுமே சாப்பிடாம தூங்கினேன். ஆனா புற்றுநோய்னு உறுதியான பிறகு நல்லா சாப்பிடணும்னு தோணுச்சு. எனக்குப் பிடிச்ச உணவு வகைகளை ஆர்டர் செய்தேன். டாக்டர் சொன்ன விஷயங்களை அக்காகிட்டே சொன்னேன். எந்த உணர்ச்சியும் காட்டாம அக்கா என்னையே பார்த்துக்கிட்டு இருந்தா.
நான் சொல்லி முடிச்சதும், ‘சரி, நல்லா சாப்பிடு’ன்னு சொன்னா. ‘நீ எதை நினைச்சும் கவலைப்படாதே. உனக்கு எதுவும் ஆகவிடாம நாங்க பார்த்துக்குவோம். நீ தைரியமா இரு’ன்னு அவ சொன்னா. நான் வெளியே தெளிவா இருக்கற மாதிரி காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள லேசா ஒரு பயம் இருந்துச்சு. என் அக்கா இப்படி சொன்னதும் மழை பெஞ்சு தெளிவான மேகம் போல ஆயிடுச்சு மனசு.
சாப்பிட்டுக்கிட்டே சுத்தி நடக்கற விஷயங்களை கவனிச்சேன். என்னைச் சுத்தி எத்தனை மனிதர்கள், அவர்களுக்குள் எத்தனை விதமான உணர்வுகள்? இவர்கள் எல்லாருமே கவலையற்றவர்களா என்ன? எல்லாருக்கும் கவலையும் கஷ்டமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதையெல்லாம் நினைத்து முடங்கிப் போகாமல் அரட்டையடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சாப்பிடுகிற முகங்களைப் பார்க்கவே நிறைவாக இருந்தது. அதே நிறைவோடு வீட்டுக்கு வந்தேன்.
வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா என் கையைப் பற்றிக்கொண்டார். என் முகத்தையே உற்றுப் பார்க்கிற இவரிடம் எனக்குப் புற்றுநோய் என்று நான் எப்படிச் சொல்வேன்? சொல்லித்தானே ஆக வேண்டும். எத்தனை நாளைக்கு மறைத்துவைக்க முடியும்? ‘எனக்கு புற்றுநோய்னு உறுதிபண்ணிட்டாங்கம்மா’ன்னு அம்மாகிட்டே சொன்னேன். நான் சொல்லி வாய் மூடுவதற்குள் உடைந்துபோய் அழுதார் அம்மா. அவரை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் தவித்தேன். அவர் அழுது ஓயட்டும் என்று காத்திருந்தேன். ‘இது ஒண்ணும் தீர்க்க முடியாத வியாதி இல்லைம்மா. குணப்படுத்திட முடியும்’னு சொன்னேன்.
ஆனாலும் அம்மா சமாதானமாகவில்லை. நானும் ஒரு தாயாக இருப்பதால் என் அம்மாவின் மனதைப் புரிந்துகொள்ள முடிந்தது. என்னவோ தெரியவில்லை, அன்று இரவு நல்ல தூக்கம்.
மறுநாள் எங்கள் குடும்ப டாக்டரை பார்க்கக் கிளம்பினோம். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யலாம் என்பதுதான் எங்கள் முடிவு. தனியாகக் கிளறிக்கொண்டிருக்கும் கோழிக் குஞ்சுகளுக்கு, பக்கத்துப் புதரிலிருந்து தாய்க்கோழி எழுப்புகிற சத்தம் ஒரு தைரியத்தைத் தருமே அப்படியொரு தைரியம்தான் டாக்டரைப் பார்க்கும்போதும் வரும். ‘உன்னை நீ என்கிட்டே ஒப்படைச்சிட்டே. இனி நீ கவலைப்படத் தேவையே இல்லை. நான் பார்த்துக்கறேன்’ என்று அவர் சொன்ன வார்த்தையிலேயே எனக்குக் குணமாகிவிட்டதுபோலத் தோன்றியது.
- மீண்டு வருவேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment