Published : 12 Oct 2015 09:46 AM
Last Updated : 12 Oct 2015 09:46 AM
ஆர்வமும் அறிவுத் தேடலும் இருந்தால் எந்த வயதிலும் படிக்கலாம் என்கிறார் தேவகி முத்தையா. ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி. முத்தையாவின் மனைவியான இவர், ‘காரைக்கால் அம்மையார் வழியும் அவர் தம் படைப்புகளும் - ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். எழுபது வயதைக் கடந்த பிறகு இப்படியோர் ஆர்வம் எப்படி வந்தது?
“நான் 1965-ல் சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முடிச்சேன். ஃபைனல் இயர் ரிசல்ட் வர்றதுக்குள்ள கல்யாணம் நிச்சயமாகிடுச்சி. இவங்களும் அப்ப கிண்டி இன்ஜினீயரிங் (இப்போது அண்ணா பல்கலைக்கழகம்) காலேஜ்ல ஃபைனல் இயர். கல்யாணம் முடிஞ்ச ஒரே வருஷத்துல இவங்க டிரெயினிங் எடுக்கறதுக்காக அமெரிக்கா போக வேண்டியிருந்துச்சு. அவங்களோட சேர்ந்து நானும் கிளம்பினேன். 1966-ல் பையன் அஸ்வின் பொறந்தான்.
ரெண்டு வருஷ அமெரிக்க வாசத்தை முடிச்சுட்டுத் திரும்பி வந்தப்ப ரெண்டாவது புள்ள அபிராமி பொறந்துட்டா. பிள்ளைங்கள கொண்டு செலுத்துறதுலயே நாளும் பொழுதும் ஓடிட்டதால மேற்கொண்டு படிக்கணும்ங்கிற நெனப்புகூட அப்ப எனக்கு வரல. அடுத்ததா மூணாவது புள்ள வள்ளியும் பொறந்துட்டா. இவங்கள எல்லாம் வளர்த்து எடுத்து அப்பாடான்னு நிமிர்ந்து உக்காந்தப்பத்தான் மேற்கொண்டு படிச்சா என்னன்னு உள்ளுக்குள்ள சின்னதா ஒரு அலாரம் அடிச்சுது. இவங்கட்ட சொன்னேன்.
‘தாராளமா படி’ன்னு பச்சைக்கொடி காட்டிட்டாங்க. அஞ்சல் வழியில 1985-ல் எம்.ஏ., முடிச்சேன்” என்று சொல்லும் தேவகி, தன் அம்மா காட்டிய பக்தி வழியே தன்னை முனைவர் பட்ட ஆய்வுக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்கிறார்.
“என் அம்மா எந்தக் கோயிலுக்குப் போனாலும் என்னையவும் கையப் பிடிச்சு கூட்டிட்டுப் போவாங்க. அவங்களோட பக்தி மார்க்கம் எனக்கும் ஒட்டிக்கிச்சு. எம்.ஏ. முடிச்ச கையோட எம்.ஃபில். பண்ணணும்னு ஒரு ஆசை. என்ன தலைப்பை எடுக்கலாம்னு யோசிச்சப்ப, வீட்டில் நான் அன்றாடம் படிக்கிற ‘அபிராமி அந்தாதி’யே தலைப்பாகிருச்சு. கண்ணதாசன் உரை எழுதிய அபிராமி அந்தாதி நூல் எங்கு தேடியும் எனக்குக் கிடைக்கல. கடைசியா, அவருகிட்டயே கேட்டேன். சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குக் கிளம்பிக்கிட்டிருந்தவர், தன்னிடமிருந்த ஒரே ஒரு பிரதியை எனக்குக் கொடுத்தார். அதைப் படிச்சதிலிருந்தே அபிராமி அந்தாதியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள்ள வந்துடுச்சு.
எனது விருப்பத்தை தருமபுர ஆதீன சுவாமிகளிடம் சொன்னப்ப, எனக்கு ஆசி வழங்கிய அவர்கள், அபிராமி அந்தாதியில் உள்ள 100 பாடல்களுக்கும் உடனே அர்த்தம் சொன்னார்கள். ஆய்வுக் கட்டுரைக்குத் தேவையான தகவல்களையும் நூல்களையும் ஆதீன மடம்தான் தந்து உதவியது” என்கிறார் தேவகி.
“என் முதல் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவின்போது, ‘காரைக்கால் அம்மையார் பற்றியும் நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றார் ஆதீனகர்த்தர். 25 ஆண்டுகள் கழித்து அந்த வாக்கு பலித்திருக்கிறது” என்று நெகிழும் இவருக்கு இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.
“படிப்புக்கு வயது ஒரு தடையில்லை. வாய்ப்பு கிடைச்சா எந்த வயசுலயும் படிக்கலாம்” என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் தேவகி முத்தையா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment