Published : 18 Oct 2015 05:42 PM
Last Updated : 18 Oct 2015 05:42 PM
(தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் கவிதாவின் கதை இது. தான் கடந்துவந்த பாதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்)
என் மருத்துவப் பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டுப் பேசுகிற எங்கள் குடும்ப டாக்டரைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். டாக்டர் சொன்ன வார்த்தைகளில் சில புரிகிற மாதிரி இருந்தது. இன்னும் சில வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாமல் குழம்பிப்போய் உட்கார்ந்திருந்தேன். ‘Focal invasion' என்று வந்திருக்கிறது. அதனால் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்’ என்றார் டாக்டர்.
Focal invasion என்றால் என்ன என்று டாக்டரிமே கேட்டேன். என் முகத்தையே சிறிது நேரம் பார்த்தார். நான் எந்த உணர்ச்சியையுமே வெளிக்காட்டவில்லை. காரணம் டாக்டரைப் பார்க்கக் கிளம்புவதற்கு முன் வீட்டில் நானும் என் கணவரும் பேசினோம். ‘எதுவாக இருந்தாலும் அதை மாற்ற முடியாது. ஆனால் நாம் அதை தைரியத்துடன் சமாளிப்போம்’ என்று சொல்லியிருந்தார் என் கணவர். அதனால் நானும் ஓரளவுக்குப் பக்குவத்துடன்தான் இருந்தேன்.
‘பொதுவாகப் பால் சுரப்பிக்குள் கட்டி ஏற்பட்டால் அது புற்றுநோய் கட்டியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் focal invasion என்றால் அங்கே புற்றுநோய் செல்கள் வளர்ந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று அர்த்தம்’ என்று சொன்னார் டாக்டர். குழந்தைக்குச் சொல்வது போல என் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். ‘இதுக்கு ரெண்டு விதமா சிகிச்சை தரலாம். ஒண்ணு, புற்றுநோய் கட்டியை மட்டும் ஆபரேஷன் மூலமா நீக்கிடலாம். இல்லைன்னா மார்பகத்தையே எடுத்துடணும். என்ன செய்யலாம்?’ என்று என்னிடமே கேட்டார். நான் என் கணவரின் முகத்தைப் பார்த்தேன்.
‘நீங்க புற்றுநோய்னு சொல்றதால அடையாறு புற்றுநோய் மையத்துக்குப் போய்ப் பார்த்துட்டு அப்புறமா என்ன செய்யலாம்னு முடிவெடுக்கலாம்’ என்றார் என் கணவர்.
மார்பகத்தில் புற்றுநோயா இல்லையா என்று இன்னும் தீர்மானமாக முடிவு தெரியவில்லை. இருந்தாலும் எங்கள் இருவர் மனதுக்குக்குள் இனம் புரியாத கவலை. வீட்டுக்குத் திரும்பும் வழியெல்லாம் நானும் அவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் இருவருக்கும் இடையே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த மவுனம், பெரும் சுமையாக அழுத்தியது.
வீட்டுக்குள் நுழைந்ததுமே என் முகத்தை ஆவலோடு பார்த்தார் அம்மா. டாக்டர் என்ன சொன்னார் என்ற அவரது கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன்? புற்றுநோய்க் கட்டியாக இருக்கலாம் என்று சொன்னால் என் அம்மா அதைத் தாங்கிக்கொள்வாரா? அம்மாவின் முகத்தில் இருக்கும் அந்தச் சிரிப்பு அப்படியே நிலைத்திருக்குமா? ‘இன்னும் சில டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்மா. அதுக்கப்புறம்தான் என்னன்னு தெரியும்’ என்று அப்போதைக்குச் சமாளித்துவைத்தேன்.
அன்று இரவு நானும் என் கணவரும் சாப்பிடவே இல்லை. இரவெல்லாம் தூக்கம் வராமல் விழித்துக் கிடந்தேன். எப்போது விடியும் என்று காத்திருந்தேன். நான் அப்படிக் காத்திருப்பதாலோ என்னவோ கடிகார முள்கூட நத்தைபோல ஊர்வது போலத் தோன்றியது. என் நிலையைப் பார்த்து என் கணவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘எதுக்கு இப்படி இருக்கே? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். தைரியமா இரு’ என்று சமாதானப்படுத்தினார்.
மறுநாள் பொழுது விடிந்ததோ இல்லையோ அடையாறு புற்றுநோய் மையத்துக்குக் கிளம்பிவிட்டோம். ஏழு மணிக்கெல்லாம் அங்கே இருந்தோம். அப்போது டாக்டர்கள் வந்திருக்கவில்லை. பசிப்பதுபோல இருந்ததால் கேன்டீனுக்குப் போய் ஏதாவது சாப்பிடலாம் என்று தோன்றியது. கேன்டீனுக்குள் நுழைந்தோம். அங்காங்கே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டியிருந்தார்கள். நோய்க்கான அறிகுறிகள், புற்றுநோய் காரணிகளைத் தடுக்கும் உணவு வகைகள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைப் பற்றியும் எழுதியிருந்தனர். புற்றுநோய் என்பது தீர்க்கக்கூடிய வியாதிதான் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. அது என் நம்பிக்கையின் சதவீதத்தை அதிகரித்தது. ஆர்வத்துடன் பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டேன்.
டாக்டரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். பலரும் மொட்டைத் தலையுடன் இருந்தனர். மார்பகப் புற்றுநோயால் புற்றுநோயால் மார்பகம் நீக்கப்பட்ட பெண்கள், கையை ஏற்றி, இறக்கி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். தொண்டை, வாய் போன்ற பகுதிகளில் புற்றுநோய் வந்திருந்தவர்களையும் பார்த்தேன். சிலர் நோய் முற்றிய நிலையில் இருந்தனர். அனைத்தையும் பார்த்தபோது நான் உள்ளுக்குள் உடைந்துபோனேன். புற்றுநோய் என்பது எவ்வளவு கொடுமையான வியாதி என்று அவர்களைப் பார்க்கும்போது தோன்றியது. எனக்கு ஏன் இந்த வியாதி வரணும் என்று மனதுக்குள் அரற்றினேன்.
டாக்டர் எங்களை அழைத்தார். பரிசோதனை முடிவுகளைப் பார்த்துக்கொண்டே என்னிடம் கேள்விகளை அடுக்கினார். நான் அதுவரை நடந்ததையெல்லாம் சொன்னேன். ‘எல்லாத்தையும் நீங்களா முடிவு பண்ணுவீங்களா? DCISனு சொல்றீங்க. இதுல என்ன போட்டிருக்கு? Focal invasaion அப்படின்னா புற்றுநோய்னு அர்த்தம்’ என்று பட்டென்று போட்டு உடைத்தார். அந்த வார்த்தை என்ன என்னவோ செய்ய, ஒரு கணம் நான் அதிர்ந்தேன். என் கணவரின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவரும் அதிர்ந்துபோய் இருந்தார்.
‘கீமோதெரபி, ரேடியேஷன் எல்லாம் பண்ணணும். எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்’ என்று சொன்னார். வீட்டில் அம்மாவுடன் கலந்து பேசிவிட்டுச் சொல்லவதாகத் தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம்.
மனம் முழுக்க வெறுமை. ‘உங்களுக்குப் புற்றுநோய்’ என்று டாக்டர் சொன்னபோதுகூட எனக்கு அழுகை வரவில்லை. ஆனால் அந்த நொடியில் செய்வதறியாமல் விக்கித்து நின்ற என் கணவரின் முகம் என்னை அழவைத்துவிட்டது. நான் முதலும் கடைசியுமாக அழுத நொடி அதுதான். நான் அழுவதைப் பார்த்து அவரும் கலங்கிவிட்டார். ‘நீ எதுக்கும் கலங்காதே. வீட்டை விற்றாவது உன்னைக் காப்பற்ற வேண்டியது என் கடமை. உனக்கு எதுவும் நடக்கவிட மாட்டேன்’ என்று என் கைகளைப் பற்றியபடி பேசினார். அந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் நான் உடனிருக்கிறேன் என்ற உறுதியையும்விட வேறென்ன வேண்டும் புற்றுநோயை வெல்ல?
- மீண்டு வருவேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment